மிருசுவில் கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை! நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஒருவரைக் கொலை செய்து அவருடைய ஹைஏஸ் வாகனத்தைக் கொள்ளையடித்த குற்றவாளிகள் மூவருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் கொலைக்குப் பயன்படுத்திய இரத்தம் தோய்ந்த உலக்கையை குடமியன் இராணுவ முகாமுக்கு எதிரில் உள்ள வயலில் வீசியெறிந்தபோது, அதனை தொலைநோக்கியொன்றின் மூலம் கண்ட இராணுவ சிப்பாய் ஒருவரின் உடனடி நடவடிக்கையையடுத்து, முதலாம் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவத்தில் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த முருகேசு சத்தியநாதன் என்பவரைக் கொலை செய்துவிட்டு அவருக்குச் சொந்தமான ஹைஏஸ் வாகனம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கில் முதலாம் குற்றவாளியாகிய சூரியகுமார் அஜந்தன் அல்லது அஜித்தன் இரண்டாம் குற்றவாளியாகிய விக்னராஜா செல்வேந்திரன், மூன்றாம் குற்றவாளியாகிய சிவதாசன் நிசாந்தன் அல்லது தினேஸ் என்ற மூன்று பேருக்கும் எதிராக சட்டமா அதிபரினால் கொலை மற்றும் கொள்ளைக் குற்றச்சாட்டுக்கள் கொண்ட குற்றப் பகர்வுப் பத்திரம் யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மூன்று குற்றவாளிகளும் பொது எண்ணத்துடன் ஒன்றாகச் சேர்ந்து முருகேசு சத்தியநாதனை கொலை செய்தமையும், கொலை செய்யப்பட்டவரின் ஹை ஏஸ் வாகனத்தைக் கொள்ளையடித்தமையும் வழக்குத் தொடுநரினால் எண்பிக்கப்பட்டதையடுத்தே, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரைக் கொலை செய்ததன் பின்னர், கொலைக்குப் பயன்படுத்திய உலக்கையை குடமியன் இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வயல்வெளியில் வீசியபோது, அந்த இராணுவ முகாமில் அப்போது கடமையில் இருந்த பள்ளியகுருகே என்ற இராணுவ சிப்பாய் தனது தொலைநோக்கியின் மூலம் கண்டதாக சாட்சியமளித்துள்ளார் என்பது முக்கியமானதாகும்.
கொலைச் சம்பவத்தையடுத்து, இந்த வழக்கின் முதலாம் குற்றவாளி மோட்டார் சைக்கிளிலும், இரண்டாம், மூன்றாம் குற்றவாளிகள் கொல்லப்பட்டவரின் உடைமையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஹை ஏஸ் வாகனத்திலும் தப்பிச் செல்கையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட உலக்கையை வயல் வெளியில் வீசியதை இராணுவச் சிப்பாய் பள்ளியகுருகே கண்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின்போது மன்றில் சாட்சியமளித்த அவர் தெரிவித்தாவது,
ஏதோ பொருளை வயல் வெளியில் வீசிவிட்டு சென்ற வாகனங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக உடனடியாக வீதிக்கு ஓடிச் சென்றேன். ஆயினும் அந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான எனது முயற்சி பலனளிக்கவில்லை. இரண்டு வாகனங்களும் மிக வேகமாக என்னைக் கடந்து சென்றன.
தப்பியோடிய மோட்டார் சைக்கிளையும், ஹை ஏஸ் வாகனத்தையும் தடுத்து நிறுத்துமாறு அறிவித்து அடுத்ததாக உள்ள சுட்டிபுரம் இராணுவ முகாமுக்கு வானொலி கருவி மூலம் தகவல் அனுப்பினேன்.
அப்போது ஹை ஏஸ் வாகனம் தன்னைக் கடந்து மிக வேகமாகச் சென்றுவிட்டதாகவும், ஆனால், மோட்டார் சைக்கிளைத் தடுத்து நிறுத்தி அதனைக் கைப்பற்றியதுடன். அதனை ஓட்டிச் சென்றவரைக் கைது செய்துள்ளதாகவும், என்னிடமிருந்து தகவலைப் பெற்ற சுட்டிபுரம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ கோப்ரல் என்னிடம் கூறினார்.
அதேநேரம், வயல் வெளியில் வீசப்பட்ட பொருள் என்ன என்பதைக் கண்டறிந்து வருமாறு வயல் வெளிக்கு அனுப்பப்பட்ட இரண்டு இராணுவத்தினர், இரத்த அடையாளத்தையும், இரத்தம் தோய்ந்த தலைமுடியையும் கொண்டிருந்த உலக்கையொன்றை கண்டெடுத்துக் கொண்டு வந்து கொடுத்தனர்.
இவ்வாறு சாட்சியமளித்த குடமியன் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய், நீதிமன்றத்தில் அந்த உலக்கையை அடையாளம் காட்டினார்.
விசாரணையின்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சுட்டிபுரம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ கோப்ரல், குடமியன் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் வானொலி கருவி மூலம் வழங்கிய தகவலையடுத்து, அவர் குறிப்பிட்டிருந்த ஹை ஏஸ் வாகனத்தையும், மோட்டார் சைக்கிளையும் தடுத்து நிறுத்துவதற்காக வீதியை மூடுவதற்கு முயற்சித்தேன்.
ஆனால் அதற்கிடையில் அந்த வான் மிகவும் வேகமாகத் தப்பியோடிவிட்டது. ஆனால் மோட்டார் சைக்கிளைத் தடுத்து நிறுத்தி அதனை; கைப்பற்றியதுடன், அதனை ஓட்டிச் சென்றவரைக் கைது செய்தேன் என்று தனது சாட்சியத்தில் தெரிவித்ததுடன். நீதிமன்றத்தில் முதலாவது எதிரியாக நிறுத்தப்பட்டிருந்தவரையே தான் கைது செய்ததாக அடையாளம் காட்டினார்.
இந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. அவர் தலைமறைவாகியுள்ளார்.
விசாரணைகளின்போது நீதிமன்றத்தில் சாட்சியமளித்த முதலாம் குற்றவாளியும், மூன்றாம் குற்றவாளியும், இந்தக் குற்றச் செயலை இரண்டாம் குற்றவாளிதான் செய்ததாகவும், வாகனம் தொடர்பான பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்டிருந்த வாக்குவதாம் காரணமாகவே, இரண்டாம் குற்றவாளி உலக்கையால் தாக்கியதுடன், அனைத்து குற்றங்களையும் அவரே செய்ததாகவும், இரண்டாம் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், நீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில் தெரிவித்தனர்.
அதேநேரம் கொலை நடந்தபோது அவ்விடத்தில் தாங்கள் நின்றதையும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட உலக்கையை எடுத்துச் சென்று குடமியன் இராணுவ முகாமுக்கு எதிரில் உள்ள வயல்வெளியில் வீசியெறிந்ததையும் தமது சாட்சியத்தில் அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டிருந்தனர்.
விசாரணைகளின் முடிவில், நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது,
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று குற்றவாளிகளும் பொது எண்ணத்துடன் கொலையொன்றைச் செய்தமை, கொலை செய்ததன் பின்னர் இறந்தவரின் வீட்டுக் கதவை திட்டமிட்ட நோக்கத்துடன் பூட்டிவிட்டுச் சென்றமை, கொலைக்குப் பயன்படுத்திய உலக்கையை ஒழிப்பதற்கு மூவரும் சேர்ந்து நடவடிக்கை எடுத்தமை, இறந்தவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட வாகனம் இரண்டாம் குற்றவாளியிடம் இருந்தமை ஆகிய அனைத்துச் செயற்பாடுகளும் திட்டமிட்டுச் செயற்படுத்தப்பட்டன என்பது நிரூபணமாகியிருக்கின்றது.
எனவே, இந்த வழக்கின் முதலாம், இரண்டாம், மூன்றாம் குற்றவாளிகள் ஆகிய மூவரும் முதலாவது குற்றச்சாட்டாகிய கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர். ஆகவே மூவருக்கும் மரண தண்டனை விதித்து இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.
அதேநேரம் இரண்டாவது குற்றச்சாட்டாகிய வாகனத்தைக் கொள்ளையடித்த குற்றமும் நிரூபிக்கப்பட்டிருப்பதனால், 5 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்படுகின்றது.
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள இரண்டாம் குற்றவாளியை சர்வதேச பொலிசாரின் துணையுடன் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு இந்த நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கின்றது.
இந்த குற்றவாளியைக் கண்டால் உடனடியாகக் கைது செய்யுமாறு கட்டுநாயக்க விமான நிலைய கட்டுப்பாட்டாளருக்கும் இந்த நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கின்றது.
இந்த மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்ட போது, நீதிமன்றத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. அனைவரும் தலைகுனிந்த வண்ணம் எழுந்து நின்றனர். நீதிபதியும் எழுந்து நின்று தீர்ப்பை அறிவித்தார். அதனையடுத்து, தீர்ப்பில் கையெழுத்திட்ட பேனா முறித்து எறியப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு குற்றவாளிகளையும் கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment