“முதியோர் இல்லங்களுக்கு மூடு விழா வைப்போம்” வருக! வருக!
தமிழ் மாமன்றம் நடாத்தும் இம் மாதத்திற்கான வாசிப்பும் அனுபவப்பகிர்வும் நிகழ்வு, எதிர்வரும் சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு, வவுனியா பொதுசனநூலக கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது. இக் கலந்துரையாடல் நிகழ்வில், சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளைக் கிழிந்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்துகின்ற, மிக அரிதாக காணக்கிடைக்கின்ற ஒரு புத்தகமும், 1997ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசுபெற்ற நாவலும் ஆகிய அருந்ததி ராய் அவர்கள் எழுதிய முதல் புதினமான “The God of Small Things” இன் தமிழ் மொழி பெயர்ப்பான “ சின்ன விஷயங்களின் கடவுள்” எனும் ஜி.குப்புசாமி அவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட நாவல் ஜே. சாள்ஸ் அவர்களாலும்,
அருங்கவிஞர் ஆனந்தரவி அவர்களால் எழுதப்பட்ட, “முதியோர் இல்லங்களுக்கு மூடு விழா வைப்போம்” எனும் கவிதை தொகுதி தெ.மிதிலைமாறன் அவர்களாலும் பகிரப்படவிருக்கின்றன. முதியோர் இல்லங்களின் பெருக்கம், முதியோர்கள் கவனிக்கப்பட வேண்டிய விதம், முதியோர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் என்பவற்றை மையப்படுத்திய ஓர் கலந்துரையாடல் நிகழ்வாகவும், அந் நூலின் பகிர்வாகவும் இந் நிகழ்வு அமையவிருக்கின்றது.
நல்ல படைப்புக்களை அறிமுகம் செய்தல், அதனூடக எமது சமூகம் சார்ந்த பிரச்சனைகளை ஆராய்தல், வாசிப்புப் பழக்கத்தை இன்றைய இளம் தலைமுறையினரிடம் அதிகரிக்கச் செய்தல் போன்ற நல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, இவ் வாசிப்பும் அனுபவப்பகிர்வும் நிகழ்வானது, தொடர்ச்சியாக மாதம் இருமுறை வவுனியா பொது நூலகத்தில், தமிழ் மாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இடம்பெறவிருக்கின்ற நிகழ்வுகளில், எழுத்தாளர்களை அழைத்து வந்த, அவர்களின் படைப்புக்கள் பற்றி கலந்துரையாட இருப்பதோடு, அவர்களின் எழுத்துலக அனுபவங்கள், இச் சமூகம் மீதான அவர்களின் பார்வைகள் என்ற ரீதியிலும், இலக்கியம் சார்ந்த படைப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல்களாகவும் நிகழ்வுகளை நடாத்துவதற்கு தமிழ் மாமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
படைப்புகளை பகிர மற்றும் நுகர ஆர்வமுள்ள அனைவரும் எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் தொடர்ச்சியாக இடம் பெறுகின்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு தமிழ்மாமன்றம் அழைக்கின்றது.
0 comments :
Post a Comment