தீபத்தை நம்பி சுமந்திரன் அரசியல் நடத்துகிறாரா? அவர் எமது மக்களை நம்பியே அரசியலில் நிற்கிறார்! நக்கீரன்
தீபம் வார ஏட்டின் கனடா பதிப்பு கடந்த டிசெம்பர் 01 இல் ரொறன்ரோவில் வைத்து வெளியிடப்பட்டது. எனக்கு அழைப்பிதழ் வந்தும் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை. தீபம் வார ஏட்டின் பதிப்புகள் வேறு நாடுகளிலும் வெளிவருகின்றன. நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலின் போது வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கின. தீபம் என்ற தொலைக்காட்சியும் இருக்கிறது. நோர்வேயில் இருந்து இயங்கும் இந்த நிறுவனம் ஒரு பலமான ஊடகமாகும்.
தீபம் வார ஏட்டின் கனடா பதிப்பு வெளியிட்டு வைக்கப்பட்டது சிலரது அடிவயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. தூக்கத்தை கெடுத்துள்ளது. குறிப்பாக இங்கு வெளியாகும் கனடா உதயன் செய்திப் பிரிவு உதயன் முகநூலில் தீபம் வார ஏட்டைப்பற்றி ஒரு கற்பனை கலந்த செய்தியை வெளியிட்டு தனது வயிற்றெரிச்சலைக் கொட்டியுள்ளது.
மக்களாட்சி முறைமை உள்ள நாட்டில் ஊடகம் என்பது அதன் நான்கு தூண்களில் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது. ஊடகங்கள் ஆள்வோருக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து கொண்டு அரசாங்கங்களை தட்டிக் கொடுக்க வேண்டிய இடங்களில் தட்டிக் கொடுத்தும் தட்டிக் கேட்க வேண்டிய சமயங்களில் தட்டிக் கேட்டும் வருகின்றன. கனடாவில் வெளிவரும் தேசியநீரோட்ட ஊடகங்கள் இந்தப் பணியை கன கச்சிதமாகச் செய்து வருகின்றன.
1974 ஆம் ஆண்டு வியட்நாம் போரின்போது பாஃன் தி கிம் என்ற வியட்நாம் சிறுமி ஒருத்தி உடலில் தீக்காயங்களோடு அம்மணமாக ஓடி வரும் காட்சி உலகத்தையே உறைய வைத்தது. அந்தப் புகைப்படம் போருக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டப் பேருதவி செய்தது.
இதே போல் 1989 ஆம் ஆண்டு யூன் 4 அன்று சீனத் தலைநகரில் உள்ள தினமன் சதுக்கத்தில் திரண்ட சனநாயகத்துக்கான இயக்க உறுப்பினர்களை அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு அடக்கியது. முதல்நாள் இராணுவம் சுட்டதில் பலர் இறந்தனர். ஆனால் அடுத்த நாள் அதே சதுக்கத்தில் வரிசையாக வந்து கொண்டிருந்த தாங்கிகளின் அணிவகுப்பை ஒரு மனிதர் எதிர்நின்று தன்கையைக் காட்டித் தடுக்க முயற்சித்தார். அந்த மனிதரின் பெயர் தெரியவில்லை ஆனால் வெள்ளைச் சட்டை கருப்புக் கால்சட்டை அணிந்த அவரின் புகைப்படம் உலகம் முழுதும் சர்வாதிகாரத்துக்கு எதிரான சனநாயகத்தின் குறியீடாகப் பார்க்கப்பட்டது.
எனவே ஊடகங்கள் குதிரைக்குக் கடிவாளம் போல அரசுக்கு கடிவாளம் போடுகின்றன. ஊடகங்கள் வாயிலாக மக்கள் நல்லது கெட்டதை அறிந்து கொள்கிறார்கள். ஊடகங்கள் மக்களின் மனங்களை வளப்படுத்தி மக்களாட்சி முறைமை நலமாக இருப்பதற்கு உதவுகின்றன.
எனவே சனநாயக விழுமியங்களில் நம்பிக்கை உடையவர்கள் தீபம் ஏடு மட்டுமல்ல வேறு எந்த ஏடு வெளிவந்தாலும் அதனை வரவேற்பார்கள். ஆனால் உதயன் ஆசிரியர் மட்டும் தீபம் வார ஏடு வெளிவருதைக் கண்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார். சுமந்திரன் மீது வசைபாடுகிறார். சேறு அள்ளி அப்புகிறார்.
"சுமந்திரனின் சூழ்ச்சி வலையில் சிக்கி கனடிய தமிழர்கள் அநியாயத்திற்கு துணைபோகாமல் இருக்க வேண்டும்" என்ற தலைப்பில் ஒரு செய்தியை முகநூலில் பதிவு செய்து இருக்கிறார். உதயன் வார ஏட்டிலும் அது வரக் கூடும். என்ன சூழ்ச்சி வலை? என்ன அநியாயம்?
"சுமந்திரன் என்ற சூழ்ச்சிமிகு அரசியல்வாதி இடைக்காலத்தில் அரசியலுக்கு வந்தாலும் தனது சூழ்ச்சி மிகு அரசியல் நகர்வுகளால் தாயகத்திலும் புலம்பெயர்ந்த மண்ணிலும் நாசகார அரசியல் நகர்வுகளை தொடர்கின்றார்" என லோகேந்திரலிங்கம் அபாயச் சங்கு ஊதுகிறார்! சிவப்புக்கொடி காட்டுகிறார்! தன்னை கனடிய தமிழர்களை தடுத்தாட்கொள்பவனாக (Preserver), அவர்களின் புரவலனாக (Protector) காட்டிக் கொள்ள ஆசைப்படுகிறார்.
லோகேந்திரலிங்கம் இன்னொரு இமாலயக் கண்டு பிடிப்பையும் கண்டுபிடித்துள்ளார். "முதல்வர் விக்கினேஸ்வன் அவர்களை பதவியிலிருந்து துாக்கி எறிந்து விட்டு இம்மானுவல் பாதிரியாரை அந்தப் பதவிக்கு கொண்டுவருவதே இந்த சூத்திரதாரி சுமந்திரனின் நோக்கமாகும் என்பது நன்கு புலனாகியுள்ளது" என்கிறார். எப்படி? "பாதிரியார் இம்மானுவல் அடிகளார் அங்கம் வகிக்கும் உலகத் தமிழர் பேரவைக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியமை இதற்கு பின்னால் சூழ்ச்சிமிகு சுமந்திரன் கடுமையான உழைத்திருந்தார் என்பதும் நன்கு புலனாகியுள்ளது" என எழுதுகிறார். இல்லை தலையில் கைவைத்து குய்யோ முறையோ என்று புலம்புகிறார்.
இம்மானுவல் அடிகளாரை வட மாகாணத்தின் முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்றால் அவர் (1) இலங்கை குடியுரிமை பெற வேண்டும். (2) சரி இரடட்டைக் குடியுரிமை கிடைக்கும் என்று வைத்துக் கொண்டாலும் 2018 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும். (3) கத்தோலிக்க பாதிரிமார்கள் அரசியலில் ஈடுபட முடியாது. (4) 1934 இல் பிறந்த அவருக்கு 2018 இல் அகவை 84 ஆகிவிடும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் விக்னேஸ்வரன் கொழும்புத் தமிழன், வாசுதேவா நாணயக்காராவின் சம்பந்தி என்று அர்ச்சித்தவர்கள்தான் அவரை விழுந்து விழுந்து இப்போது ஆதரிக்கிறார்கள். ஆலவட்டம் வீசுகிறார்கள். குடை பிடிக்கிறார்கள். பல்லக்குத் தூக்குகிறார்கள்.
சுமந்திரன் முதல்வர் விக்கினேஸ்வன் அவர்களை பதவியிலிருந்து துாக்கி எறிந்து விட்டு இம்மானுவல் பாதிரியாரை அந்தப் பதவிக்கு கொண்டுவருவதே இந்த சூத்திரதாரி சுமந்திரனின் நோக்கமாகும் என லோகேந்திரலிங்கம் எழுதுவது எல்லை மீறிய கற்பனை ஆகும். இந்தப் புளுகு கந்தபுராணத்தின் கடைசி ஒற்றையிலும் இல்லை.
உண்மை என்னவென்றால் லோகேந்திரலிங்கம் போன்றோர் சுமந்திரன் மீது சேறு அள்ளிப் பூசுவதற்குக் காரணம் அவரது சட்ட அறிவு, வாதத்திறமை, மும்மொழிப் புலமை போன்றவை பற்றிய அச்சமாகும். அவரது ஆளுமையைப் பார்த்து அழுக்காறு கொள்கிறார்கள்.
சென்ற தேர்தலில் பலர் சுமந்திரனை தோற்கடிக்க அசுரப் பிரயத்தனம் செய்தார்கள். அவரைக் குறிவைத்துத் தாக்கினார்கள். அவரைத் தோற்கடித்தால் தமிழரசுக் கட்சி கலகலத்துப் போகும் என மனப்பால் குடித்தார்கள்.
கனடாவில் மாற்றத்துக்கான குரல் என்ற ஒரு அமைப்பு கோடிக் கணக்கில் பணம் சேர்த்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுப்பி வைத்தது. இலவச தொலைபேசி அழைப்பு மட்டையை ஆயிரக் கணக்கில் வாங்கிக் கொடுத்தார்கள். தாயகத்தில் உள்ள அம்மா, அப்பா, மச்சான், மாமி, மாமா, பெரியம்மா, பெரியப்பா, சின்னம்மா சித்தப்பா என எல்லோரையும் கூப்பிட்டு சைக்கிளுக்குப் புள்ளடி போடுமாறு கேட்டார்கள். முடிவு? சுமந்திரன் 58,043 விருப்பு வாக்குகளைப் பெற்று யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் மூன்றாவது இடத்துக்கு வந்து வெற்றிபெற்றார். எமது மக்கள் அதிபுத்திசாலிகள். பணத்தை ததேமமு இடம் வாங்கிக் கொண்டு ததேகூ வாக்களித்தார்கள். ததேமமு 7 இல் 6 மாவட்டங்களில் படு தோல்வி. 8 ஆவது மாவட்டத்தில் 6 வாக்குகளால் கட்டுக்காசைக் காப்பாற்றியது.
மேலும் "இது இவ்வாறிருக்க, சூழ்ச்சிமிகு சுமந்திரனின் சதிகள் மிக்க அரசியல் மற்றும் பொருளாதார நகர்வுகள் தற்போது கனடாவிற்கும் நகர்ந்துள்ளது. இதில் ஒரு அம்சமாகவே சில நாட்களுக்கு முன்னர் இங்கு ஆரம்பிக்கப்பட்ட �தீபம்� வாரச் செய்திப் பத்திரிகை. இந்த தீபம் செய்திப்பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இலவசமாக ஆரம்பிக்க்பபட்டதே முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிரானதும் சுமந்திரனுக்கு ஆதரவானதுமான இயக்கத்தை அறிமுகம் செய்வதற்காகவே என்பது அரசியல் அவதானம் கொண்டவர்களுக்கு நன்கு புரியும்.
கனடாவில் முதல்வர் விக்னேஸ்வரனு்க்கு எதிரானதும் சூழ்ச்சிமிகு சுமந்திரனுக்கு ஆதரவானதுமான ஒரு அரசியல் பலத்தை உருவாக்கவே இந்த �தீபம்� இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றே நாம் நம்புகின்றோம்" என எழுதுகிறார்.
தீபம் சுமந்திரனை ஆதரிப்பது என்ன பஞ்சமா பாதகமா? தீபம் சுமந்திரனை ஆதரித்தால் கனடா உதயன் விக்னேஸ்வரனை ஆதரித்து எழுதுவதுதானே? யார் வேண்டாம் என்றார்கள்?
உண்மையில் சுமந்திரனை "சூத்திரதாரி" "சூழ்ச்சிக்காரன்" "நாசகாரன்" "சதிகாரன்" "அநியாயக்காரன்" என்று அர்ச்சிப்பதன் மூலம் சுமந்திரன் அரசியலில் ஒரு சாணக்கியன், மார்க்கியவல்லி என அவருக்கு மறைமுகமான புகழாரம் சூட்டுகிறார் என்பது லோகேந்திரலிங்கத்துக்கு விளங்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிராகவும் அவரைப்பற்றிய தவறான செய்திகளைப் பரப்பும் செய்தி இதழாக தீபம் கொண்டுவரப்பட்டது உண்மையாம். அந்தத் தவறான செய்திகள் எவையெவை என்று பட்டியல் இட முடியுமா? தீபம் ஆதரித்த ஒரே காரணத்துக்காக ததேகூ தேர்தலில் வெற்றிவாகை சூடியது என்பது பிழையான வாதம். தவறான கணிப்பு.
2010 ஆம் ஆண்டு தொடக்கம் - தீபம் வார ஏடு இல்லாத காலத்தில் - ததேகூ ப்பு சந்தித்த ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்குப் பலத்தையும் செல்வாக்கையும் உயர்த்திக்கொண்டே வந்திருக்கிறது.
2010 ஆம் ஆண்டு நடந்த நடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ததேகூ பெற்ற வாக்கு விழுக்காடு 43.89. வன்னி தேர்தல் மாவட்டத்தில் பெற்ற வாக்கு விழுக்காடு 38.96.
2013 இல் நடந்த வட மாகாண சபைத் தேர்தலில் ததேகூ பெற்ற வாக்கு விழுக்காடு 78.48.
2015 இல் ஓகஸ்ட் மாதத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ பெற்ற வாக்கு விழுக்காடு 75.82.
இதில் இருந்து என்ன தெரிகிறது? தீபம் ததேகூ ஆதரிக்கிறதா இல்லையா என்பதல்ல கேள்வி. தமிழ்மக்கள் யாரை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்! இன்னும் ஒரு 25 ஆண்டுகளுக்கு வீட்டுக்கு நேரேதான் புள்ளடி போடுவார்கள்!
விக்னேஸ்வரன் மழைக்குத் தோன்றி மறையும் வானவில். இதுதான் அவர் முதலமைச்சராக இருப்பதன் தொடக்கமும் முடிவும்.
அரசியலானது தன்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றிவிட்டதாகவும் எதையும் ஆர அமரச் சிந்தித்து ஆராய்ந்து அறிவை மேம்படுத்தக் கூடிய அவகாசத்தை தன்னிடமிருந்து பறித்தெடுத்து விட்டதாகவும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்கிறார். அவரை அந்தப் பதவியில் ததேகூ அமர்த்தியதின் நோக்கம் போரினால் அழிந்து போன மக்களின் வாழ்வாதாரங்களை மீள் கட்டியெழுப்பி அவர்களின் அடிப்படைத் தேவைகளான உறைவிடம், உணவு, குடிதண்ணீர், மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதே. ஆனால் அவர் அவற்றை விட்டு தேசிய அரசியலிலும் உலக அரசியலிலும் மூக்கை நுழைத்து வருகிறார். இதனால் போரினால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய தமிழ் மக்களுக்கு இரண்டகம் செய்கிறார்.
கனடா ஒரு மக்களாட்சி முறையைக் கொண்ட நாடு. ஊடக சுதந்திரம் இருக்கிற நாடு. இந்த நாட்டில் தொழில்செய்ய, ஒரு வாணிகத்தைத் தொடங்க ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது.
நிலாவைக் கண்டு திருடர்கள்தான் அச்சப்படுவார்கள். தீபம் ஒரு போட்டி வார ஏடு நினைப்பவர்கள்தான் அதன் வெளியீட்டைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டியதில்லை. முக்கியமாக கடந்த இருபது ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிவரும் உதயன் வார ஏடு கிஞ்சித்தும் அஞ்சத் தேவையில்லை. ஏற்கனவே ரொறன்ரோவில் பத்து - பதினைந்து வார, திங்கள் ஏடுகள் வெளிவருகின்றன. தீபம் பத்தோடு பதினொன்று.
ரொறன்ரோவில் வெளிவரும் தீபத்தை நம்பி சுமந்திரன் அரசியல் நடத்துகிறார் என்பது பிழையான கணிப்பு. அவர் தீபம் உட்பட யாரை நம்பியும் அரசியல் செய்யவில்லை. அப்படி நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது. அவர் எமது மக்களை நம்பியே அரசியல் களத்தில் நிற்கிறார்!
இன்று எமக்குத் ஒரு சுமந்திரன் அல்ல! பத்து சுமந்திரன்கள் தேவை!
0 comments :
Post a Comment