அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு இந்தியாவிலிருந்து நிதி உதவி: முன்னாள் சிபிஐ அதிகாரியின் அதிர்ச்சி தகவல் !
அமெரிக்காவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தகர்ப்பு தாக்குதலுக்கு தேவையான பணத்தில் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து கைமாற்றிவிடப்பட்டதாக டெல்லி காவல்துறையின் முன்னாள் கமிஷனரும், முன்னாள் சிபிஐ அதிகாரியுமான நீரஜ்குமார் தனது புத்தகம் ஒன்றில் தெரிவித்துள்ளார். 1976ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த நீரஜ்குமார், டெல்லி போலீஸ் துணை கமிஷனராக பணியை தொடங்கியவர். பணித்திறமை காரணமாக, சிபிஐ உயரதிகாரியாக நியமிக்கப்பட்டவர். டெல்லி போலீஸ் கமிஷனராக பணியாற்றி, 2 வருடங்கள் முன்பு ஓய்வு பெற்ற நீரஜ்குமார் தற்போது பிசிசிஐ லஞ்ச ஒழிப்பு குழுவிற்கு தலைமை வகிக்கிறார். இவர் ‘டையல் டி பார் டான்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதி உள் ளார். அதில் தனது பணிக் காலத்தில் ஏற்பட்ட முக்கிய அனுபவங்களை கூறியிருக்கிறார்.
மும்பை குண்டுவெடிப்பு
சிபிஐ.யில் 9 ஆண்டுகள் பணிபுரிந்த போது, விசாரிக்கப்பட்ட முக்கியமான 11 வழக்குகள் குறித்து, தனது புத்தகத்தில் நீரஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். அதில் ஒரு சம்பவம் 1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையாகும். இதுதான் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது என்று நீரஜ்குமாரும் குறிப்பிடுகிறார்.
தொலைபேசியில் மிரட்டல் விடுத்த தாவூத்
இந்த விசாரணை நீரஜ் குமார் கண்காணிப்பில் நடந்தது. அப்போது மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் செல்போனில் நேரடியாக நீரஜ்குமாரை மிரட்டிய தகவலை புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து புத்தகத்தில் நீரஜ்குமார் கூறியிருப்பதாவது: டெல்லி கமிஷனராக இருந்தபோது, ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் ஊழல் வழக்கை விசாரித்து வந்தேன். 2013ம் ஆண்டு ஜூலை மாதம் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் என்னுடைய செல்போனில் அழைப்பு வந்தது.
மறுமுனையில் பேசியவர், ‘‘ஓய்வு பெறபோகிறீர்கள். அதன்பிறகு, உங்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை விலக்கி கொள்வார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று மிரட்டல் விடுத்தார். எனினும், ஐபிஎல் ஊழல் வழக்கில் தாவூத் துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்தேன். போனில் பேசியது, தாவூத் இப்ராஹிம் அல்லது அவரது தம்பி அனீஷ் என்று தெரியவந்தது", இவ்வாறு நீரஜ் குமார் கூறியுள்ளார்.
3 முறை பேசிய தாவூத் கடந்த 1994ம் ஆண்டு நீரஜ் குமாரிடம் 3 முறை தாவூத் பேசியிருக்கிறார். அப்போது 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் தனக்கு சம்பந்தமில்லை என்று கூறியிருக்கிறார். அதன்பின்தான், 2013ம் ஆண்டு ஓய்வு பெறுவதற்கு முன்னர் தாவூத் பேசியிருக்கிறார்
பாகிஸ்தான் தேவையில்லை
தனது புத்தகத்தில் தாவூத் 3 முறை பேசிய விவரங்களை நீரஜ் குமார் விரிவாக கூறியுள்ளார். தாவூத் மேலும் கூறும்போது, ‘‘இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்த, பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. தாக்குதல் நடத்துவதற்கு தேவையான வெடிபொருட்கள், ஆயுதங்கள் எங்கள் ஆட்களிடம் உள்ளது'' என்று துணிச்சலாக கூறியுள்ளார்.
ஆயுதம் கேட்ட சஞ்சய் தத்
மேலும், மும்பையில் மதக் கலவரம் ஏற்பட்ட போது, தனது பாதுகாப்புக்கு ஆயுதம் தேவை என்று பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கூறியதாகவும் அப்போது தனது இளைய சகோதரன் அனீஸ்தான் ஆயுதங்களை அனுப்பி வைத்தார் என்றும் தாவூத் கூறியதாக புத்தகத்தில் நீரஜ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தாக்குதல்
இந்த புத்தகத்தில் உள்ள மற்றொரு முக்கியமான விஷயம், அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் (9/11 ), சம்பவத்திற்கு இந்தியாவில் இருந்து நிதி உதவி செய்யப்பட்டுள்ளது என்பதாகும். அமெரிக்க தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதி பெயர் முகமது அட்டா. இந்த தீவிரவாதிக்கு, ஒமர் ஷெய்க் என்ற தீவிரவாதி பணம் சப்ளை செய்துள்ளார். உமர் ஷெய்க்கிற்கு, சுமார் ரூ.105.5 லட்சத்தை, கொல்கத்தாவிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்திய, அப்டாப் அன்சாரி கொடுத்துள்ளார்.
கடத்தல் பணம்
இந்தியாவை சேர்ந்த பார்த பிரதிம் ராய் பர்மன் என்ற தொழிலதிபரை கடத்தி அவரைவிடுதலை செய்வதற்காக பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதிதான் (ரூ.105.5 லட்சம்), அன்சாரியால், ஷெய்க்கிற்கு தரப்பட்டுள்ளது. இவ்வாறு தனது புத்தகத்தில் நீரஜ் குமார் கூறியுள்ளார். கொல்கத்தா தாக்குதலுக்காக, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, அன்சாரி தற்போது மேற்கு வங்க சிறையிலுள்ளது குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment