அரச அதிகாரியா? அரசியல்வாதியா? ஆரோக்கியநாதர்
அநேகமான அரச அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பல சந்தர்ப்பங்களிலும் அரசியல்வாதிகளாகவே (அரசியல்வாதிகளைப் போல அல்ல, அரசியல்வாதிகளாகவே) செயற்படுகிறார்கள். அப்படியொரு ஆசையும் அதிகார மோகமும் அவர்களுக்குண்டு. இதில் தமிழ் அதிகாரிகள் இன்னும் ஒரு படி மேல்.
அவர்கள் தாங்கள் விரும்புகிற அரசியலை மற்றவர் மேலும் ஏற்றி விட விரும்புகிறார்கள். இதற்காகத் தங்களுடைய உத்தியோக எல்லையை – அதிகார எல்லையை – நிர்வாக விதிமுறைகளைக் கூடக் கடந்து போய்விடுகிறார்கள். என்ன செய்வது, அரசியல் படுத்தும் பாடு அப்படி.
இப்படி எல்லை கடந்த நிலையில் உத்தியோகம் பார்த்தால் அதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான். அரசியலைப் பேசுவதற்கும் அரசியலில் ஈடுபடுவதற்கும் இவர்களுக்குத் தாராளமாக உரிமையுண்டு. ஆனால், அது வேறு களத்தில். வேறொரு முறையில் இருக்க வேண்டும். அந்த அடிப்படையே வேறு.
அப்படி ஒரு தீராத ஆசை இருக்குமென்றால், தங்களுடைய உத்தியோகத்தை விட்டு விலகிக் கொண்டு தாராளமாக அரசியல் செய்யலாம். உத்தியோகத்திலும் உத்தியோகத்தில் இருந்து கொண்டும் அரசியல் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அது அதிகார துஸ்பிரயோகம் மட்டுமல்ல, குலநாசம் என்பதைப்போல ஊர்நாசமாகத்தான் போய்முடியும்.
கடந்த 18.11.2015 அன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கண்டாவளைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிவபுரம், உழவனூர், நாதன் திட்டம் பகுதி மக்கள் ஒரு ஊர்வலத்தை நடத்தினார்கள். தங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதைக் கவனப்படுத்துவதே இதன் நோக்கம். இதுவரையிலும் இந்த மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் கிடைக்காமலிருப்பதற்குக் காரணம், காணிப் பிணக்கே.
இந்தக் காணிப்பிரச்சினையைத் தீர்த்தால்தான் வீட்டுத்திட்டங்களை இவர்களுக்கு வழங்க முடியும். இதைப்பற்றி அந்த மக்களுக்கும் தெரியும். அரச உத்தியோகத்தர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் எனச் சகலருக்கும் தெரியும். இவர்கள் குடியிருக்கும் காணிகள் மத்தியவகுப்புத் திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளுக்கு முன்பாக வேறு ஆட்களுக்கு அபிவிருத்திக்காக என்று அரசாங்கத்தினால் வழங்கப்பட்டவை.
இந்தக் காணிகளைப் பெற்றவர்கள் அவற்றைத்திருத்தி, பண்படுத்தி, அவற்றை உரிய முறையில் அபிவிருத்தி செய்யவில்லை. இதனால் இந்தக் காணிகளில் பின்னாளில் காணியற்ற வேறு பல குடும்பங்கள் குடியேறி நீண்டகாலமாகக் குடியிருக்கின்றன. மனிதாபிமான அடிப்படையிலும் நியாயத்தின் படியும் இவர்களுக்கே இந்தக் காணிகளை வழங்க வேண்டும்.
ஆனால் சட்டத்தின் மூளை வேறு. அது வேறு விதமாகவே யோசிக்கும். இந்தக் காணிகளுக்கான உரிமம் யாரிடமிருக்கிறதோ அவர்களே இந்தக் காணிகளைப் பொறுத்துப் பலமான உரித்துடையோர். ஆகவே அதை எப்படியாவது மாற்றி எடுக்க வேண்டும்.
அதாவது முன்னர் இந்தக் காணிகளை மத்திய வகுப்புத்திட்டத்தின் கீழ்ப் பெற்றிருந்தவர்களிடமிருந்து மீளப் பெற்று அல்லது அவர்களுடைய உரிமத்தை ரத்துச் செய்தே இப்பொழுது குடியிருப்போருக்குக் காணிகளை வழங்க முடியும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? அதையெல்லாம் எப்படிச் செய்வது? அப்படிச் செய்வது இலகுவான காரியமல்ல. அது ஒரு அரசியற் செயற்பாடும் தீர்மானமுமாகும் என்ற செய்திகளெல்லாம் ஊடகங்களில் ஏற்கனவே தாராளமாக வெளியாகியிருக்கின்றன.
அது மட்டுமல்ல, இந்தக் காணிகளைக் குடியிருப்புகளில் இருப்போருக்கு வழங்குவதற்கு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்ததும் இதற்கான நிர்வாக நடவடிக்கைகளில் கண்டாவளைப் பிரதேச செயலகமும் பிரதேச செயலரும் முழுமையாக ஈடுபட்டமையும் ஊரறிந்த சங்கதிகள்.
ஆகவே, இந்தக் காணிப் பிரச்சினையைத் தீர்த்து, இந்தக் காணிகளில் நீண்டகாலமாகவே குடியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு இவற்றை வழங்குவது அவசியம். தொடர்ந்து இந்த மக்கள் வீட்டுத்திட்டங்களையும் பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவையும் ஏற்கனவே பலருக்கும் தெரிந்தவை.
ஆனால், இதையெல்லாம் மறந்து போனதைப்போல, ஊர்வலமாக மாவட்டச் செயலகத்துக்கு வந்த மக்களிடம் அவர்களுடைய பிரேரணையைப் பெற்றுக்கொண்ட மேலதிக மாவட்டச் செயலர் திரு. எஸ். சத்தியசீலன் புதிய கதைகளைப்பேசியிருக்கிறார். இதுதான் பலருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாகும்.
இந்தக் காணிகளை உங்களுக்கு (அதாவது காணிகளில் இப்பொழுது குடியிருப்போருக்கு) வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் உங்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வடமாகாணக் காணி ஆணையாளரின் மூலமாக வழங்கப்பட்டு விடும். அதைத் தொடர்ந்து வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்குரிய முயற்சிகளை வடமாகாணக் கல்வி அமைச்சர் திரு. த. குருகுலராஜாவும் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனும் செய்திருக்கின்றனர் என்று தெரிவித்திருக்கிறார் சத்தியசீலன்.
சத்தியசீலனின் இந்த அறிவிப்பைச் செவிமடுத்துக் கொண்டிருந்த பலருக்கும் பல கேள்விகளை எழுப்பியது. அங்கே நின்ற ஊடகவியலாளர்கள் பகிரங்கமாகவே ஒரு உண்மை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்று சொல்லிக்கொண்டனர்.
எப்போதும் நிதானமாகவும் ஒழுங்கான முறையிலும் தன்னுடைய கடமைகளைச் செய்து பலருடைய பாராட்டுகளையும் பெற்ற சத்தியசீலன், மாவட்டத்தின் நன்மதிப்பைப்பெற்ற இளநிலை உயர் அதிகாரியாக அடையாளம் காணப்பட்டவர். இப்பொழுது யாருடைய வற்புறுத்தலுக்காக இப்படி சார்புடைய கருத்துகளைத் தெரிவிக்கிறார் என்று கவலை தெரிவிக்கின்றனர் பலரும்.
இந்த மாதிரி அரசியல் சார்புத்தன்மைகள் நிர்வாகத்தினுள் நுளையுமாக இருந்தால் அந்த நிர்வாகம் சீர்கெட்டுப்போகும். அதனால் மக்களுக்கே பெரும் பாதிப்புகள் ஏற்படும். அண்மையில் கிளிநொச்சி, வட்டுக்கோட்டை, உடுவில் போன்ற இடங்களில் உள்ள பல பாடசாலைகள் இந்த மாதிரியான அரசியல் விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. அதைப்போல வடக்கின் ஏனைய நிர்வாக இயந்திரங்களிலும் இந்த அரசியற் தொற்றுப் பீடிக்கப்போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படியான ஒரு அரசியற் தொற்று வருமாக இருந்தால் அது இந்த இனத்தின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்குமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆகவே வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் சிலவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்து, களைகளை அகற்றி நல்ல பயிர் வளர்ப்போம்.
உண்மைகளைத் தயக்கமின்றி, அச்சமின்றி உண்மையாகவே சொல்லும் மரபொன்றை உருவாக்குவோம். அதுதான் நாட்டுக்கும் நமக்கும் ஜனநாயகத்துக்கும் எதிர்காலத்துக்கும் செய்கின்ற மாபெரும் கடமையாகும்.
0 comments :
Post a Comment