ஈழத்தமிழர்களின் கோசம் போடும் வேஷதாரி அரசியல்.
தமிழீழப் போராட்டத்தின் காரணமாக இலங்கையில் இருந்த அற்ற சொற்ப ஜனநாயகமுறைமை அழிக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. அதுவே ஜனநாயகம் எனும் பெயரில் சர்வாதிகாரத்தையும் , பெரும்பான்மையினரின் அடக்கு முறைக்கும் வன்முறைக்கும், வழிகோலியது. இது ஒரு குடும்ப அரசியலாக மாற்றம் பெற்றுவந்தமையை அறிந்த இந்தியாவும் பலமேற்குலகும் தாம் இலங்கையில் காலடி வைப்பதற்கும், குடும்ப அரசியலை ஒழித்துக் கட்டுவற்கும், முக்கியமாக தன் பொருளாதார, பிராந்திய நலனைக் கருத்தில் கொண்டுமே இராஜபக்சவின் குடும்ப ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
மீண்டும் ஜனநாயகத்தைக் கட்டி எழுப்புவது என்பது மிக இலகுவானது அல்ல. அதற்கான முயற்சியை இந்த அரசு செய்கிறது என்பதில் ஐயம் இல்லை. இப்படியாக ஜனநாயகமுறை கட்டி எழுப்பப்படும் வேளை நாமும் எமது நலன்களை இராஜதந்திர முறையில் சில ஒருமைப்பாடு விட்டுக் கொடுப்புக்களுடன் கட்டி எழுப்புவது அவசியம். இதை ததேகூட்டமைப்பு முன்னெடுக்கிறது என்பதை எதிர்பார்க்கலாம்.
புயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டோரை அரசியல் கைதிகள் என்ற போர்வையில் விடுவது என்பது இலகுவான காரியம் அல்ல. ஜனாயகத்தைக் கட்டி எழுப்புபவர்களே ஜனநாயகத்தை மீற இயலாது. அதற்கான வழிமுறைகளின் ஊடாக இராஜதந்திரமாக நடந்தே அதை வெற்றி கொள்ள முடியும். தமிழர்கள் கடைப்பிடித்து வந்த எதிர்பரசியல் காலவதியாகிய ஒன்றாகும். தொடர்ந்தும் எதிர்ப்பரசியலைத்தான் கடைப்பிடிப்போம் என்று அடம்பிடித்தால் எம்மினம் அழிவது உறுதி.
அரசு உறுதியளித்தபடி கட்டங்கட்டமாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் முயற்சியில் முதலில் 32 பேர் நீதிமன்றின் சமர்ப்பிக்கப்பட்டு 2சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களைப் பிணையில் எடுக்க வக்கில்லாதவர்கள் நிலத்திலும், புலம் பெயர் நாடுகளிலும் கொடிபிடித்தனர் ஊர்வலம் நடத்தினர். பிணையில் அழைத்துச் செல்ல யாரும் முன்வராதவர்கள் மீண்டும் சிறைக்குள் தள்ளப்பட்டனர். இவ்வளவு கைதிகளுக்கும் சரீரப்பிணை கொடுப்பதற்கு த.தே.கூட்டமைப்பால் முடியாது. அவ்வளவுற்கு ஆட்களும் இல்லை. அதையும் இவர்கள் தானா செய்யவேண்டும்? இப்படித்தானே ஏத்தி விட்டபின் ஓடித்தப்பும் போக்கிலித்தனமான அரசியலும் போரட்டமுமே எம்மை அழித்தது என்பதை எப்போ உணரப்போகிறீர்கள்?
புலிகள் சாதாரணமான அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் தாங்கிய ஒரு குழுவின் பலநாடுகளால், இன்றும் இலங்கையால் பயங்கரவாத அமைப்பு என்று சட்டத்தால் அறிவிக்கப்பட்ட அமைப்பு ஆகும். இதில் உள்ளவர்களை விடுவிப்பது என்பது இலகுவானது அல்ல என்பதை உணர்க. அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணை எடுக்க யாருமில்லாது திரும்பிப்போகும் அரசியல் கைதிகள் கூறிய வார்த்தைகள் நன்றி கெட்டு சமூகம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. உள்ளே இருந்து கொண்டு வெளியே என்ன நடக்கிறது என்பதை உணர முடியாது இருந்து புலித்தலைமைகள் போல்தான் இந்த அரசியல் கைதிகளின் பேச்சு இருந்தது. தவிகூட்டமைப்பு என்றாவது சொன்னதா புலிகளில் சேருங்கள் அரசியிலில் ஈடுபடுங்கள் என்று. எப்படி இவர்கள் தவிகூ பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இதைக் கேட்கலாம் இராஜனாமாச் செய்யவற்புறுத்தலாம்?
ஆரம்பத்தில் இருந்து இன்றுவரையிலான தமிழர்களின் போராட்டத்தைப் பாருங்கள். கத்துவார்கள், குளறுவார்கள் தங்களை மையப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்வார்கள். என்றும் இனத்தை மையப்படுத்தி எக்காரியத்தையும் திட்டமிட்டுக் கட்டமைத்துச் செய்தது கிடையாது. மீண்டும் திருப்பிப்பாருங்கள் இலங்கை அரசியலை அறிவீர்களாயின் இது நன்கு புரியும். வெள்ளையன் வெளியேறியபோது வடக்குக்கிழக்கை ஏன் பிரிக்க முடியாது போனது? தம்மை மையப்படுத்திய இருவர் கை தூக்கி ஐக்கிய இலங்கையை ஆதரித்தனர். தமிழீழக்கோரிக்கை தமிழரசுக்கட்சியில் இருந்து பிரிந்து போன நவரட்ணத்தால் முன்வைக்கப்பட்டபோதும் தமிழரசுக்கட்சியும் தமிழ் காங்கிரசும் எதிர்த்து, பின் இருகட்சிகளும் தமிழர்கூட்டணி என்று இணைந்து பண்ணாகத்தில் அதையே பிரகடப்படுத்தினர். மாடான நவரத்தினம் சொன்னால் பிழை, மணிகட்டிய மாடுகள் இவர்கள் தான் சொல்ல வேண்டுமோ? இங்கேயும் தனிநபர் தனிப்பட்ட கட்சிகளின் நலனே முன்னிறுத்தப்பட்டிருந்தது.
சரி தமிழீழம் கேட்டீர்கள் அதற்கான தெளிவான பாதையை வகுத்தீர்களா? அதற்கான திட்டம், கட்டமைப்பு, நிகழ்ச்சி நிரல் எது இருந்தது. பாராளுமன்றத்தில் இலவசமாக தமிழீழம் கொடுக்கிறார்கள் என்று சொன்னார்களா? மக்களை மந்தையாக்கி சுயவரசியலே நடந்தது. இதை உணர்ந்த இளைஞர்கள் கிளர்தெழுந்து ஆயுதம் தூக்கியபோது ஏற்பட்ட சில சிறு வெற்றிகள் அவர்களை ஆயுதத்தில் நம்பிக்கை கொள்ள வைத்தது. இனிப்புலிகளை எடுத்தால் முதலில் உமாவை தலைவராகத் தெரிவு செய்த பிரபாவே ஊர்மிலா என்ற நங்கைக்காக வேட்டுவைத்தார். சரி பிரபாகரன் கேட்கின்றார் என உமா ஊர்மிலாவை கைவிட்டாரா? இல்லை மத்திய செயற்குழு கலைந்தது, இயக்கம் பிரிந்தது. இங்கும் தனிப்பட்ட செயற்பாடுகள், தனிமனிதத் துதிபாடல்கள் என பல தம்மைச்சுற்றியே மையம் கொண்டிருந்தது. இங்கே மக்கள் நலன் கருத்தில் கொள்ளப்பட்டதா? மக்கள் விடுதலைக்கழகம் புலிகளின் தனிநபர் அத்துமீறல்களையும் ஆயுதப்போர்திட்டத்தையும் எதிர்த்துப் பிரிந்தவர்கள் அதையே தான் இவர்களும் செய்தார்கள். இங்கே மக்கள் எங்கே? மக்களின் விடுதலைக்கான போக்கு எங்கே?
இனி இறுதிப்போராட்டத்தை எடுத்துக் கொள்வோம். ஆயுதமே இல்லாத தமது சொந்த மக்களை ஆயுதங்களைக் கொண்ட புலிகள் கேடயமாக்கி ஒளித்திருந்தார்கள். இங்கே மக்களைப்பற்றி நோக்கம், மக்களின் நலன் கருத்தில் கொள்ளப்பட்டதா? நாமே எமது மக்களின் அக்கறை கொள்ளாதபோது எதிரி எப்படி எம்மக்களில் கருணை காட்டுவான்? தலைமையில் ஒருசிலர் வாழ்வதற்குகாக எத்தனையாயிரம் அப்பாவித்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்? இங்கேயும் மக்களின் நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை.
சரி எல்லாவற்றையும் விடுங்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய் என்று கோசம் போட்டு கொடிபிடித்த கோழைகள் எங்கே? இன்னும் ஏன் அவர்களை பிணை எடுக்கவில்லை. கோசம் போட்டது உங்களை உங்கள் முகங்களை வெளியில் காட்டுவதற்கா? பிணை எடுக்கவே வக்கில்லாதவர்கள் எதற்குக் கோசம் போடுகிறீர்கள்? இறுதிப்போர் காலத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் புலன் பெயர்ந்து வெறும் கோசம் போட்டு கோசம் போட்டு வேசம் காட்டினீர்கள். ஆக்க பூர்வமாக என்ன செய்து முடித்தீர்கள்? ஒரு தனி சனல் 4 செய்த விடயத்தில் ஒருபங்கு.....?
முதலில் வேடங்களைக் கலையுங்கள். மக்களை நோக்கமாகக் கொண்டு கட்டமைப்புக்களை கட்டுங்கள். வேலைத்திட்டங்களை முன்வையுங்கள். நிகழ்ச்சி நிரலை ஒழுங்கு செய்யுங்கள். போலி வேசதாரி அரசியலை கைவிட்டு இனியாவது மக்களுக்காக உழையுங்கள். ஜனநாயக முறைப்படி மக்களின் ஆணையை கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் மக்களின் நலனை மட்டும் கருத்தில் கொள்வீர்களானால் நீங்கள் யாருடனும் ஏன் அரசுடன் கூட இணைந்து வேலை செய்யலாம். நோக்கமே முக்கியமானது. நோக்கம் NO COME (நோ கம்) என்கிறீகளா?
நோக்கம் நோக்கும்
நோர்வே நக்கீரா 12.11.2015
0 comments :
Post a Comment