அவசரகால நிலையும் பிரெஞ்சு ஜனநாயகத்தின் உருக்குலைவும். Alex Lantier
பாரிஸில் வெள்ளிக்கிழமையன்று நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கான பதிலிறுப்பாய் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு முன்கண்டிராத தாக்குதலை உள்ளடக்கியதாக இருக்கிறது.
சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் அவசரகால நெருக்கடிநிலையை அறிவித்துள்ளதோடு நாடு முழுவதிலும் வழமையான போலிஸ், ஆயுதப்படையினர், துணைஇராணுவ கலகத்தடுப்பு போலிசார் மற்றும் இராணுவப் படைகளோடு, மேலும் 100,000க்கும் அதிகமான பாதுகாப்புப் பணியாட்களை அணிதிரட்டியுள்ளது. எந்த ஒரு பெரிய நகரிலும் சீருடையில்லாமலோ அல்லது கறுப்பு உடையிலோ தானியங்கி துப்பாக்கிகளை சுமந்தபடி நடந்து செல்கின்ற மனிதர்கள் கண்ணில் தட்டுப்படாமல் இருப்பது சாத்தியமில்லை. இந்த துணைஇராணுவப் படைகள், அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகங்களிடம் இருந்தான எந்த எதிர்ப்பும் இல்லாமல், எந்த வீட்டையும் சோதனையிடுவதற்கும் அச்சுறுத்தலாக அறிவிக்கப்பட்ட எவரொருவரையும் கைதுசெய்வதற்கு அல்லது கொல்வதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளன.
காலவரையற்று நீடிக்கத்தக்க அவசரகால நெருக்கடிநிலை ஆட்சி உத்தரவை பிறப்பிக்க ஜனாதிபதியை அனுமதிக்கும் வகையிலும், அத்துடன் இராணுவம் மற்றும் போலிசுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை மிகப்பெரும் அளவில் விரிவுபடுத்துவதற்கு ஏதுவாகவும் இப்போது ஹாலண்ட் பிரெஞ்சு அரசியல் யாப்பில் திருத்தங்களை முன்மொழிந்து வருகிறார். இணையத்தில் வெளியாகியிருக்கும் இந்த முன்மொழிவுகள் பிரான்சை ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரமாக மாற்றுவதற்கு தேவையான சட்ட அடிப்படையை வழங்குவதாய் இருக்கிறது.
இப்போதிருக்கும் 1955 சட்டம், அவசரகால நெருக்கடிநிலை காலத்தின்போது ஜனாதிபதிக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் மிகவிரிவான அதிகாரங்களை அளிக்கிறது. பிடியாணைகள் இல்லாமல் தேடுதல் வேட்டை நடத்த முடியும் பறிமுதல் செய்ய முடியும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடியும் பொதுவெளியில் மக்கள் கூடுவதைத் தடைசெய்ய முடியும், “பாதுகாப்புக்கும் பொது ஒழுங்குக்கும் அச்சுறுத்தலாய் நிரூபணமாகும் எந்த ஒரு நடவடிக்கையில்” ஈடுபடுவோரையும் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட முடியும், அத்துடன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்போருடன் தொடர்புடைய, பொது ஒழுங்கின் சீர்குலைவில் “பங்கேற்கின்ற, அல்லது வழிவகுக்கின்ற அல்லது தூண்டி விடுகின்ற” எந்த அமைப்பையும் கலைக்க முடியும்.
சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் யாப்பு திருத்தத்தால் அறிமுகம் செய்யப்படும் மாற்றங்கள் இந்த சட்டத்தை இன்னும் அதிக ஆபத்தானதாய் ஆக்குகின்றன. ISIS போன்ற எந்த பயங்கரவாதக் குழுவிடம் இருந்துமான ஒரு அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ் முகம்கொடுத்திருக்கின்ற வரைக்கும் - அதாவது முடிவேயில்லாத ஒரு காலத்திற்கு - அதனைப் புதுப்பிக்க, தான் நோக்கம் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஹாலண்ட் அறிவித்திருக்கிறார்.
எப்படிப் பார்த்தாலும், சிரியாவில் ஆட்சியை மாற்றுவதற்கான போரை நடத்துவதற்கான பினாமிப் படைகளாக இஸ்லாமிய போராளிக் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் நேட்டோ சக்திகளது சொந்தக் கொள்கையில் இருந்தே எழுந்திருந்ததான ISISக்கு எதிராகப் போராடுவதற்காய் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது இந்த சட்டத்திருத்தத்தை ஆய்வு செய்தால் தெளிவாகிறது. ISIS முன்வைத்த அச்சுறுத்தலைக் கொண்டு பகுத்தறிவான முறையில் விளக்கப்பட முடியாத சர்வாதிகார நடவடிக்கைகளை அமலாக்குவதற்கான போலிச்சாக்காக பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ISISக்கு எதிராக போராடுகிறோம் என்ற போர்வையில், பிரெஞ்சு அரசானது “பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு”க்கு எதிரான ஒரு அச்சுறுத்தலாக அது கருதும் எவரொருவருக்கும் எதிரான முற்றுமுதலான அதிகாரங்களை தனக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த தெளிவற்ற, பொத்தாம் பொதுவான வகைப்பாடானது, சென்ற ஆண்டு காஸாவில் இஸ்ரேலிய அரசின் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தடைசெய்வதற்கு சோசலிஸ்ட் கட்சி முடிவெடுத்த சமயத்தில் கண்டதைப் போல, அரசியல் யாப்புரீதியாக பாதுகாக்கப்பட்டிருக்கும் வேலைநிறுத்த மற்றும் ஆர்ப்பாட்ட உரிமைக்கு எதிராகவே வெகுகாலமாய் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
சோசலிஸ்ட் கட்சி ஆவணங்களால் அறிமுகப்படுத்தப்படும் சட்டரீதியான மாற்றங்கள், எதிர்ப்புணர்வின் எந்த வெளிப்பாட்டையும் கைது செய்யப்படுவதற்கான சாத்திய முகாந்திரங்களாக ஆக்குகிறது. “பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு ஆபத்தாக நிரூபணமாகும் நடவடிக்கைகளை” கொண்ட மனிதர்களை கைதுசெய்ய போலிசை அனுமதிப்பதற்கு பதிலாக, திருத்தப்படுகின்ற சட்டமானது “ஒருவரது நடத்தை பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கான ஒரு அச்சுறுத்தலை உள்ளடக்கியதாக இருக்கிறது என்று நம்புவதற்கு காரணத்தை அளிக்கின்றபட்சத்தில்” அவரைக் கைதுசெய்வதற்கு அனுமதிக்கிறது. “தமது நடத்தையாலும், நட்புகளாலும், பேச்சுகளாலும் அல்லது திட்டங்களாலும் போலிஸ் அல்லது உளவுத் துறையினரின் கவனத்தை ஈர்க்கக் கூடியவர்களை” இலக்கில் வைத்துக் கொள்வதற்கு போலிசை இது அனுமதிக்கிறது என்று சோசலிஸ்ட் கட்சி விளக்குகிறது.
இந்த யோசனைகளின் தாக்கங்கள் மிகத் தீவிரமானவையாகும். ஒருவர் கூறிய ஒரு விடயத்தையோ அல்லது அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்ட ஒன்றையோ அல்லது அவர் தொடர்பு வைத்திருக்கும் ஒருவரையோ காரணமாகக் காட்டி, இந்த மனிதர் வருங்காலத்தில் பொது ஒழுங்கிற்கு சீர்குலைவை ஏற்படுத்துவார் என்று நம்புவதாக போலிஸ் திட்டவட்டமாகக் கூறினாலே, அவரைக் கைதுசெய்வதற்கும் சிறைப்படுத்துவதற்கும் அதற்கு மேல் ஒன்றும் செய்யத் தேவையிருக்காது.
ஒரு ஊதிய வெட்டு அல்லது ஆலைமூடலுக்கு எதிராகவோ, போருக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டத்திற்காகவோ, அல்லது வேறு எந்த சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்காகவும் வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்க விடுக்கப்படும் அழைப்புகளுக்கு அனுதாபமாக கூறப்படும் ஒரு வாசகமும் கூட கைது அல்லது வீட்டுக் காவலுக்கான முகாந்திரமாக ஆகிவிட முடியும்.
பிரெஞ்சு காலனித்துவ ஆட்சிக்கு எதிரான 1954-1962 போரில் சுதந்திரத்திற்கான அல்ஜீரிய மக்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு தோல்வியடைந்த முயற்சியின் போது பாரிய சித்திரவதை மற்றும் ஒடுக்குமுறையை நடத்துவதற்கு பிரான்சுக்கு ஒரு சட்டபூர்வ கட்டமைப்பை உருவாக்கித் தருவதற்காக 1955 இல் வடிவமைக்கப்பட்ட சட்டத்தைத் தான் சோசலிஸ்ட் கட்சி இப்போது விரிவாக்குவதற்கு ஆலோசிக்கிறது என்பதை நினைவுகூர்வது அவசியமானதாகும். அந்த மூர்க்கத்தனமான போர் 250,000 முதல் 400,000 வரையான அல்ஜீரியர்களின் உயிரைக் குடித்தது. 1968 மே-ஜூன் காலத்து பொதுவேலைநிறுத்தத்தில் வெடித்தெழுந்த பிரான்சுக்குள்ளான ஆழமான சமூகப் பதட்டங்களுக்கு கட்டியம் கூறுவதாகவும் அவற்றுக்கு எண்ணெய் வார்ப்பதாகவும் இது இருந்தது.
பிரான்சில் ஜனநாயக உரிமைகளை இல்லாதுசெய்வதற்கு எடுக்கப்பட்டு வரும் இப்போதைய நடவடிக்கைகள் வர்க்க ஆட்சியின் இதேபோன்றதொரு நெருக்கடியாலேயே உந்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முதலாவதாய், சென்ற ஆண்டின் காஸா போர் ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்வதற்கு எடுக்கப்பட்ட இறுதியில் தோல்விகண்ட முயற்சியானது எடுத்துக்காட்டியதைப் போல, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் இராணுவக் கொள்கைகளுக்கு எதிரான அத்தனை எதிர்ப்புகளையும் ஒடுக்குவதற்கு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் மிகத் தீவிரமாய் இருக்கிறது. பிரெஞ்சு ஆளும் வர்க்கம் உலக அரங்கில் தனது நலன்களை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பாகமான சிரியாவிலான பிரான்சின் குண்டுவீச்சுப் பிரச்சாரத்தை, பாரிஸ் தாக்குதல்களுக்குப் பின்னர், துரிதமாக விரிவுபடுத்துவதற்கு ஹாலண்ட் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
இரண்டாவதாய், சமகால முதலாளித்துவ சமூகத்தின் தீவிரமான மற்றும் நாளுக்குநாள் பெருகிச் செல்கின்ற கட்டுப்படுத்தமுடியாத சமூகப் பதட்டங்களை முதலாளித்துவ ஜனநாயகத்தினால் இனியும் கையாளுவதற்கோ நீதி வழங்குவதற்கோ முடியாதிருக்கிறது. பிரான்ஸ் உள்ளிட முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் அத்தனையிலுமே, அரசைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் ஒரு மிகச் சிறு எண்ணிக்கையிலான பெரும்-செல்வந்த உயரடுக்கானது உழைக்கும் பரந்த மக்களிடம் அதிகரித்துச் செல்லும் அதிருப்தியை வெறுப்புடனும் அச்சத்துடனும் பார்க்கிறது.
நிதிப் பிரபுத்துவத்தின் மேலாதிக்கத்திற்கு ஹாலண்டின் அரசாங்கம் மகுடம் சூட்டுகிறது. “சிக்கன நடவடிக்கை என்பது நமது தலைவிதியாக இருக்கவில்லை” என்ற தேர்தல் வாக்குறுதிகளின் மீது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஹாலண்ட், வெகுவிரைவிலேயே, அதிகரித்துச் செல்லும் வேலைவாய்ப்பின்மை மற்றும் “பூச்சிய வளர்ச்சி” பொருளாதாரத்திற்குத் தலைமைகொடுக்கும் சிக்கனநடவடிக்கை-ஆதரவு அரசியல்வாதியாய் நிரூபணமானார்.
பிற்போக்குத்தனமான உள்நாட்டுக் கொள்கைகளுக்கு எழுகின்ற சமூக எதிர்ப்பை இராணுவவாதம் மற்றும் போரை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெளியுறவுக் கொள்கையின் மூலமாக திசைதிருப்பி விடுகின்ற ஒரு மூலோபாயத்தை நோக்கி சோசலிஸ்ட் கட்சி திரும்பியது. ஹாலண்ட் 2013 இல் மாலியில் ஒரு போரைத் தொடக்கிய சமயத்தில், பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சரது “1983 இல் மீண்டும் அவர் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிசெய்த ஒரு இராணுவ சாகசமான” ஃபால்க்லாண்ட் தீவுகள் போரின் தங்களது பதிப்பாகவே சோசலிஸ்ட் கட்சி நம்பியது என்று அதிகாரி ஒருவர் Le Point பத்திரிகையிடம் கூறினார். ஆயினும் பிரான்சின் பழைய காலனித்துவ சாம்ராஜ்யமெங்குமான போர்கள், பிரான்சுக்குள்ளாக சமூகப் பதட்டங்கள் பெருகுவதற்கே பங்களித்திருக்கின்றன.
பிரான்சில் காணும் அரசியல் இயக்கவியல் ஒவ்வொரு முக்கிய முதலாளித்துவ நாட்டிலும் பிரதிபலிக்கின்ற ஒன்றாகவே இருக்கிறது. 2001 இல் “பயங்கரவாதத்தின் மீதான போர்” தொடங்கியது முதலாகவே, அமெரிக்காவின் தலைமையில், உலகெங்குமான அரசாங்கங்கள், அடிப்படை ஜனநாயக உரிமைகளை தேய்வடையச் செய்வதற்கும் அகற்றுவதற்குமே முனைந்து வந்திருக்கின்றன. கைதிகளை சித்திரவதைக்காக “அசாதாரணவகையில் ஒப்படைப்பது”, முகாந்திரமற்ற பாரிய ஒட்டுக்கேட்பு மற்றும் நீதிமன்ற எல்லைக்குள் வராத ஆளில்லாவிமானக் கொலைகள் ஆகியவற்றில் பங்குபற்றி வந்திருக்கின்றன. பெரும் ஆயுதங்கள் தாங்கிய இராணுவப் பிரிவுகளை உள்நாட்டில் பயன்படுத்துவது இப்போது சாதாரணமாகி விட்டிருக்கிறது.
2011 இல் லண்டனில் இளைஞர் கலகங்கள் மீதான போலிஸ் ஒடுக்குமுறை தொடங்கி, சென்ற ஆண்டில் மிசௌரியின் ஃபெர்குசனில் மைக்கேல் பிரவுன் போலிசாரால் கொல்லப்பட்டதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் மீது பலமான ஆயுதப் பிரயோகம் செய்து ஒடுக்கப்பட்டது வரை, இந்த நடவடிக்கைகள் முன்னெப்போதை விடவும் தெளிவான வகையில் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதை நோக்கி செலுத்தப்படுகின்றன.
அரசியல் அல்லது பெருநிறுவன ஸ்தாபகங்களுக்குள் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கென ஏறக்குறைய எந்தவொரு தனியிடமும் இருக்கவில்லை. ஜனநாயகக் கோட்பாடுகளுக்கென ஒரு ஆழமான உறுதிப்பாட்டை பாதுகாத்து வருகின்ற தொழிலாள வர்க்கத்தின் தோள்களிலேயே இந்தப் பணி விழுகிறது. ஆயினும், அரசியல் மெத்தனம் காட்டுவதற்கு எந்த இடமும் இல்லை. ஆளும் வர்க்கமானது உள்நாட்டு நெருக்கடிகளுக்கு தன்னிடம் தீர்வில்லாத நிலையில், அதனைக் கையாளுவதற்கு சர்வாதிகார நடவடிக்கைகளைக் கொண்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறது.
ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பும் போலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களுக்கு எதிரான எதிர்ப்பும் ஏகாதிபத்தியப் போர், சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் முதலாளித்துவ ஆட்சிமுறையில் இருக்கும் அவற்றின் மூலங்கள் ஆகியவற்றுக்கு எதிரானதொரு போராட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக சுயாதீனமாய் அணிதிரட்டப்படுவதில் வேரூன்றியதாக இருப்பது கட்டாயமாகும்.
0 comments :
Post a Comment