Saturday, November 21, 2015

மலேசிய மாநாட்டை சீர்குலைக்க 10 பயங்கரவாதிகள் தயார்!

பாரிஸ், மாலி தீ ஆகியவற்றைத் தொடர்ந்து மலேசியாவிலும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். மலேசியாவில் நடைபெறும் ஆசியானா மாநாட்டை சீர்குலைப்பதற்காக தற்கொலைப்படையாக மாறிய 10 பயங்கரவாதிகள் மலேசியாவிற்குள் நுழைந்திருப்பதாக மலேசிய போலீஸ் எச்சரித்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்றும், நாளையும் ( நவம்பர் 21,22) 13வது ஆசியான் மாநாடு மற்றும் 10 வது கிழக்காசிய மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக இந்திய பிரதமர் மோடி, சீன பிரதமர் லி கிகுயாங் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்கள் கோலாலம்பூர் சென்றுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் மலேசியாவும் உள்ளதாகவும், மாநாட்டை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும் மலேசிய போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனால் மலேசியா முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாரிஸ், எகிப்து, லிபனான், மாலே தீவை தொடர்ந்து மலேசியாவில் பெரிய அளவில் தாக்குதலை நடத்துவதற்காக தற்கொலைப்படையாக மாறிய 10 பயங்கரவாதிகள் மலேசியாவிற்குள் நுழைந்து, பதுங்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் மலேசியாவில் பயங்கரவாத தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோலாலம்பூர் நகரிற்குள் தான் பயங்கரவாதிகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் மாநாடு நடைபெறும் இடத்தில் 2000 ராணுவ வீரர்களும், பிற இடங்களில் 2500 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில், தங்கள் அமைப்பை ஏற்படுத்த நினைக்கும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், மலேசியாவில், வெடிகுண்டுகள் தயாரிக்கும் வல்லுனர்களை தேடி வருகின்றனர்,'' என, மலேசிய உள்துறை இணையமைச்சர் நுார் ஜஸ்லான் முகமது தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தென் கிழக்கு ஆசியாவில், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை உள்ளடக்கிய, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ள, அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்கள், மலேயா பல்கலை கழக முன்னாள் பேராசிரியர் முகமது அஹமது என்பவரை தலைவராக்க முயன்றனர். இதை அறிந்த மலேசிய போலீசார், அந்த முயற்சியை தடுத்து, சிலரை கைது செய்துள்ளனர். வெடிகுண்டுகளை தயாரிக்கும் திறன் படைத்த பேராசிரியர்களுக்கும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் வலை விரித்திருந்தனர்; அதையும், தகர்த்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், மலேசியாவின் பயங்கரவாத தடுப்புப்படை தலைவர் கூறும் போது, 'தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஆங்காங்கே, கொஞ்சம், கொஞ்சமாக உள்ள, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், பிலிப்பைன்சை, தங்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் தலைமையகமாக மாற்ற திட்டமிட்டுள்ளதை முறியடித்துள்ளோம்' என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com