சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர தோள்கொடுத்த மத்தியதர வர்க்க குழுக்கள் அதிருப்தியடைகின்றன. W.A. Sunil
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ’நல்லாட்சிக்கான’ ஐக்கிய தேசிய முன்னணியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக வக்காலத்து வாங்கிய மத்தியதர வர்க்க அமைப்புகள் மற்றும் குழுக்களும், இப்போது அரசாங்கம் சம்பந்தமாக தமது கவலைகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன. பிரமாண்டமான அமைச்சரவையை கொண்ட தேசிய அரசாங்கத்தை அமைத்தமை, அநியாயக்காரர்களுக்கும் இலஞ்ச-ஊழல்காரர்களுக்கும் எதிராக சட்ட நடவடக்கை எடுப்பதில் அரசாங்கம் “தோல்வியடைந்துள்ளமை” தொடர்பாகவே அவர்களது பிரதான விமர்சனங்கள் உள்ளன.
நியாயமற்ற முறையில் பெருந்தொகை அமைச்சர்களை நியமித்தமை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ சென்ற பாதையிலேயே வெட்கமற்று செல்கின்றது, என செப்டெம்பர் 10 நடத்திய ஊடக சந்திப்பில் சமூக நியாயத்துக்கான தேசிய இயக்கத்தின் (ச.நி.தே.இ.) தலைவர் மாதொலுவாவே சோபித தேரர் அரசாங்கத்தை குற்றம் சாட்டினார். “இது தொடருமெனில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் அமைச்சர்களாவதை நாம் விரைவில் காண்போம்” என அவர் குறிப்பிட்டார். அப்படியெனில் “19வது அரசியலமைப்புத் திருத்தமும் கேலிக்கூத்தாக்கப்படக் கூடும்” என அவர் மேலும் கூறினார்.
ச.நி.தே.இயக்கமானது அரச சார்பற்ற அமைப்புகள், தொழிற்சங்கள், கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களும் அடங்கிய அமைப்பாகும். இராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தமது வரப்பிரசாதங்களை இழந்த உயர் மத்தியதர வர்க்க சமூகத் தட்டையே அவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
19வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ், அமைச்சரவை 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் ஒன்றை அமைக்கும் போது அந்த எல்லையை கடந்து செல்லும் விதிகள் குறிப்பிட்ட யாப்பு திருத்தத்தில் சேர்க்கப்பட்டமை, ஆளும் வர்க்கத்துக்கு தேவையானவாறு அரசியல் இலஞ்சம் கொடுப்பதற்கே. தாம் 19வது அரசியலமைப்புத் திருத்தத்தில் அத்தகைய ஒன்று இருந்து என்பதை அறிந்திருக்கவில்லை என்று சுட்டிக்காட்டுவதற்கு சோபிதவும் ச.நி.தே.இயக்கமும் இப்போது எடுக்கும் முயற்சி முற்றிலும் வஞ்சத்தனமானதாகும்.
ச.நி.தே.இ., “ஜனநாயகத்தின் முன்நகர்வாக” 19வது திருத்தத்தை வருணித்தது. அதே போல் நிறைவேற்று ஜனாதிபதி முறை தூக்கி வீசப்பட்டு, நியாயமான “ஜனநயாகமும் நல்லாட்சியும்” நாட்டுக்குள் ஸ்தாபிக்கப்படும் என ச.நி.தே.இ. மக்கள் மத்தியில் ஆழமான பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தது.
எதிர்கால பரம்பரைக்காக மிகவும் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்பும் தமது முயற்சிக்கு கிடைத்துள்ள பதிலிறுப்பையிட்டு தனது குழு “வெட்கப்படுகிறது” என ச.நி.தே.இ. முன்னணி செயற்பாட்டாளரும் நாடக திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான தர்மசிறி பண்டாரநாயக்க கடந்த வாரத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பிரமாண்டமான அமைச்சரவையை அமைப்பதை மக்கள் எதிர்பார்க்கவில்லை என கூறிய பண்டாரநாயக்க, மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர்களை ஆட்சிக்கு கொண்டுவருவதை “மாற்றம்” என ஏற்றுக்கொள்ளமளவுக்கு தமது குழு “அறிவற்றது” அல்ல, என குறிப்பிட்டார். நல்லாட்சி பற்றிய எதிர்பார்ப்பு தகர்ந்து போன மக்கள் கேள்வி எழுப்புவது, அரசாங்கத்திடமோ அமைச்சர்களிடமோ அல்ல, தமது குழுவிடமே என பண்டாரநாயக்க கூறினார்.
மற்றொரு முன்னணி ச.நி.தே.இ. உறுப்பினரும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் கலாநிதி சந்திரகுப்த தேநுவர, “தேசிய அரசு பற்றிய கலந்துரையாடலின் மத்தியில், தேசியக் குற்றங்கள் தரைவிரிப்புக்கு அடியில் தள்ளப்பட்டுள்ளன,” என குற்றம் சாட்டினார். ஏகாதிபத்திய மற்றும் மஹிந்த இராஜபக்ஷவின் ஊழல் மற்றும் விரோத செயல்களுக்கு எதிராக தாம் குரல் எழுப்பி இருந்த போதிலும், நல்லாட்சியின் கீழும் அவை தொடர்ந்தும் இடம்பெறுவதாக தேநுவர வாய்ச்சவடால் விடுத்தார்.
தாமே ஜனநாயக மற்றும் நல்லாட்சி என்ற போர்வையை அணிவித்துவிட்ட சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அதிக காலம் எடுப்பதற்கு முன்னரே, முன்னாள் ஜனாதிபதியை போலவே ஜனநாயக விரோதிகள் என தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் கண் முன்னால் அம்பலப்படத் தொடங்கியுள்ளதால், இந்தக் “கல்விமான்கள்” இன் வால் மிதிபட்டு குழப்பிப் போயுள்ளனர். சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவும், ஊழல்காரர்களாக தோலுரிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து ஐ.தே.க.-ஸ்ரீ.ல.சு.க. கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டிருப்பது ஏன்? என கேட்காகாமல் இருப்பது உண்மையை மூடி மறைப்பதற்காகும்.
“தேசிய அரசாங்கம்” ஒன்று அமைக்கப்பட்டிருப்பது பிரதானமாக இரண்டு விடயங்களின் அடிப்படையில் ஆகும். ஒன்று, சீனாவுக்கு எதிரான போர்வாத “ஆசியாவில் முன்னிலையில்” கொள்கையை முன்னெடுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அணிதிரள்வதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகும். மற்றையது பூகோள பொருளாதார நெருக்கடியின் பாகமாக இலங்கையின் நெருக்கடியும் ஆழமடைந்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ், சிக்கன நடவடிக்கைகளை கொடூரமாக முன்னெடுக்கவும், அதற்கு எதிராக வெடிக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் போராட்டங்களை ஒடுக்குவதற்கும் முதலாளித்துவ ஆட்சியின் கைகளைப் பலப்படுத்திக்கொள்வதற்கே ஆகும்.
ச.நி.தே.இ. தலைவர்களுக்கோ ”கல்விமான்கள்” மற்றும் கலைஞர்களின் சபைகளுக்கு சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அமெரிக்கச் சார்பு வேலைத் திட்டம் பற்றி “வெட்கம்” இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஜனநாயகத்தை உருவாக்கத் தலையீடு செய்துள்ளதாக அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். போலி-இடது நவ சம சமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன செய்தது போலவே, சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவுக்கு தோள் கொடுத்ததன் மூலம், அவர்கள் அமெரிக்கா நேரடியகா இலங்கைக்குள் மேற்கொண்ட ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்தனர்.
அரசாங்கத்துக்கு எதிராக, தமது உரிமைகளுக்காக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வறியவர்கள் போராட்டங்களுக்கு வரும்போது, அவற்றுக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாத்தல் என்ற பெயரில் இந்த மத்தியதர வர்க்க அமைப்புகள் எகிறிப் பாய்ந்தமை புதுமையானது அல்ல.
0 comments :
Post a Comment