தமிழினியை முன்வைத்துத் தொடங்கும் உரையாடல். -கனக சுதர்சன்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியற்துறை பெண்கள் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த தமிழினி அண்மையில் நோயின் காரணமாக மரணமடைந்து விட்டார். இதனையொட்டித் தமிழ் மற்றும் சிங்களத்தரப்பில் பல வகையான உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இலங்கைக்கு அப்பால் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ்நாட்டிலும் கூட தமிழினியின் மரண நிகழ்வும் கவனத்தைப் பெற்றிருக்கிறது.
யுத்தம் முடிவுக்குப் பிறகு நிகழ்ந்திருக்கும் புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மரணம் அது. புலிகளின் மரணங்களில் அநேகமானவை யுத்தகளச் சாவுகளாகவே அமைவது வழமை. அதனால்தான் அந்த மரணங்கள் முக்கியத்துவம் மிக்கனவாகவும் அந்த நாட்களில் கவர்ச்சி கூடியவையாகவும் இருந்தன. இது யுத்த முடிவுக்குப் பிறகான மரணம். நோயின் காரணமாக நிகழ்ந்த மரணம். யுத்தம் முடிந்து, வழக்கு விசாரணை, சிறைத்தண்டனை, புனர்வாழ்வு எல்லாவற்றையும் பெற்று, அனுபவித்த பின் தன் சொந்த வாழ்க்கையை இயல்பு நிலையில் வாழ முற்பட்டபோது நிகழ்ந்திருக்கும் ஒரு போராளியின் - முக்கிய பொறுப்பிலிருந்தவரின் - மரணம். அதிலும் ஒரு மூத்த பெண் போராளியின் மரணம் இது.
இந்த மரணம், சாதாரணமான ஒரு மரணத்தைப் போலக் கடந்து சென்று விட முடியாத அளவில் தவிர்க்க முடியாமல் எல்லோரின் முன்னிலையிலும் கேள்விகளாகவும் குற்றவுணர்ச்சிகளாகவும் இரக்கத்தை வரவழைப்பதாகவும் எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது.
எனவேதான் தமிழினியின் மரணத்தைத் தொடர்ந்து பல இடங்களிலும் உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
அப்படியென்றால் தமிழினியின் இந்த மரணம் சில சேதிகளையும் பல கேள்விகளையும் நமக்களித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா?
நிச்சயமாக. இதனை நாம் மேலும் விளங்கிக்கொள்ள வேண்டுமானால் இந்த மரணத்தையொட்டி நடந்த நிகழ்ச்சிகளை அறிவது அவசியம்.
தமிழினி நோயினால் மரணமடைந்து விட்டார் என்ற சேதியை ஒருவிதமான பரபரப்புடன் ஊடகங்கள் வெளியிட்டன. இதைத் தொடர்ந்து மெல்ல மெல்ல அவருடைய மரணத்தைப் பற்றிய ஒரு மதிப்பு மிக்க சித்திரம் உருவாகியது. இந்தச் சேதியைக் கேள்விப்பட்ட – அறிந்த – தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் அவருடைய இறுதி நிகழ்வைப்பற்றி அறிவதில் ஆர்வம் காட்டத்தொடங்கினார்கள். அப்படியே ஒவ்வொருவராக தமிழினியின் மரணச்சடங்கு எங்கே நடைபெறவுள்ளது என்பதை அறியத்துடித்தனர். அது அவருடைய சொந்த ஊரான பரந்தனில்தான் நடைபெறவுள்ளது என்ற செய்திகள் வெளியானதும் பரந்தனில் அரசியற்பிரமுகர்கள் கூடத்தொடங்கினார்கள். அரசியற் பிரமுகர்கள் கூடினால் ஊடகங்களும் கூடத்தொடங்கிவிடுமல்லவா. பிறகென்ன, எல்லாமே அட்டகாசமாகியது. அங்கே ஒரு சிறப்பான நாடகம் அரங்கேறியது.
மரணச் சடங்கிற்கு வந்திருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களும் அமைச்சர்களும் தமிழினிக்குப் புகழாரம் சூட்டினார்கள். அங்கே கூடியிருந்த தமிழினியின் உறவினர்களைவிட, தமிழினியோடு ஒன்றாகப் பயிற்சி எடுத்தவர்கள், களமாடியவர்கள், அரசியற்பணி செய்தவர்கள், தோழமையோடு உறவாடியவர்கள், நெருங்கிப் பழகியவர்கள் எல்லோரையும் விட, அங்கே பிரசன்னமாகியிருந்த அரசியற் பிரமுகர்கள்தான் அவரைப்பற்றி அதிகமாகக் கதைத்தார்கள். தங்களுக்கும் தமிழினிக்கும் ஏதோ ஆத்மார்த்தமான உறவும் பாசப் பிணைப்பும் போராhட்ட உறவும் இருந்ததைப்போல உரையாற்றினார்கள். அதை நிரூபிப்பதற்காகச் சிலர் என்னென்னவோ கதைகளையெல்லாம் சொன்னார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கும் தலைசுற்றி மயக்கம் வராததே குறை.
ஏனென்றால், தமிழினியின் மரணம் இவர்களுடைய நிகழ்கால – எதிர்கால அரசியலுக்கான ஒரு சிறப்பான முதலீடாக இருந்தது. அதனால், அதைக் குறிவைத்து அவர்கள் தங்கள் வியாபாரத்தை நடத்தினார்கள்.
இதேவேளை இந்த அரசியற் பிரமுகர்களோ இவர்களுடைய கட்சிகளோ தமிழினி சிறையில் இருந்தபோதும் சரி, வழக்கு விசாரணைகளின் போதும் சரி அவருக்கு உதவ முன்வரவுமில்லை. அவரைச் சென்று பார்த்து ஆறுதல் கூறவும் இல்லை. சிறையிலிருந்து வெளியே வருவதற்காக அவர் சட்ட உதவியை நாடியபோது அதைச் செய்வதற்கு – வழக்காடுவதற்கான சட்டவாளரை ஏற்பாடு செய்து கொடுப்பதில்கூட எவரும் முறையான ஆதரவையும் உதவிகளையும் செய்திருக்கவில்லை. புலம்பெயர் சமூகத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் கூடப் பெரிய அளவிற் கிட்டவில்லை. வாக்குறுதியளித்தவர்களும் உரிய நேரத்தில் பின்வாங்கினர்.
பின்னர் சிங்களச் சமூகத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளின் உதவியோடு தனிப்பட்ட ரீதியில் தமிழ்ச் சட்டத்தரணிகளும் இணைந்தே தமிழினியின் விடுதலைக்கு உதவினார்கள். அவர்களுடைய வழிகாட்டலின்படியே தமிழினி புனர்வாழ்வு முகாமற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து விரைவில் விடுதலை செய்யப்பட்டார்.
புலிகளின் உயர்மட்டத்தலைவர்களில் விரைவில் விடுதலையானவர்களில் முக்கியமானவர் தமிழினி. தமிழினியின் இந்த விடுதலைக்கு சர்வதேச நெருக்குவாரங்களும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அவசியச் சமிக்ஞையை வெளிப்படுத்துவதற்கான அரசியலுமே காரணமாகின என்று சொல்லப்படுகிறது. எப்படியோ அவர் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவில் விடுதலையாகினார்.
அவர் விடுதலையாகிய சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடந்தது. இதனாtamilini-12ல் அவர் மாகாணசபைத் தேர்தலுக்காகவே அரசாங்கத்தினால் விரைவில் விடுவிக்கப்பட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்டது. கூடவே வடக்கு மாகாணசபைத்தேர்தலில் அவர் களமிறக்கப்படுகிறார் என்றும் அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் தயார் என்பதாகவும் சில ஊடகங்கள் எழுதின. இதை அடியொற்றி அந்த நாட்களில் பெரிய அளவில் ஊகநிலைச் செய்திகள் பரவின. முகப்புத்தகக் கணக்குகளில் தமிழினி முக்கிய பேசுபொருளாக்கப்பட்டார். ஏறக்குறைய தமிழரின் போராட்டத்திற்கு அவர் துரோகமிழைக்கிறார் என்ற சாரப்படவே அனைத்து அபிப்பிராயங்களும் இருந்தன.
எனினும் இவற்றையெல்லாம் அவர் தன்னுடைய நிதானத்தினாலும் கனத்தை மௌனத்தினாலும் அமைதியாகக் கடந்தார். அதேவேளை தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைத் தொடர்வதற்கான திருமண பந்தத்தில் இணைந்தார். தொடர்ந்து நிலைமைகளை அவதானித்தபடி அவருக்கிருந்த திறமையின் அடிப்படையில் எழுத்துலகில் இயங்கினார். எழுதத் தொடங்கிய தமிழினி மீண்டும் பொதுவெளியில் பிரவேசித்தார்.
இப்பொழுது அவர் தன்னுடைய கடந்த கால அனுபவங்களின் வழியில் இரண்டாவது பிறப்பாக புதிய பார்வைகளையும் புதிய அணுகுமுறைகளையும் கருத்தியலையும் கொண்டு எழுதினார், சிந்தித்தார். இன்னொரு பரிமாணத்தில் இயங்கினார்.
இப்படியிருக்கும்போதுதான் தமிழினி புற்றுநோய்த்தாக்கத்துக்குள்ளாகினார். அவரைத் தாக்கிய நோய் கண்டுபிடிக்கப்பட்டு – சிகிச்சை அளிக்கத்தொடங்கிய ஆறு மாதத்தில் அவர் மரணத்தைத் தழுவிக்கொண்டார்.
தமிழினி போராளியாக இருந்தபோது அவர் வகித்த பதவிநிலையினாலும் அவருடைய ஆளுமை காரணமாகவும் மிகப் பிரபலம் பெற்றிருந்தார். யுத்தத்தின் பிறகு அவர் தனிமைப்பட்ட நிலையில், ஆதரவற்றிருந்தார். விடுதலைக்குப் பின்னான காலத்தில் அவரைப் புரிந்து கொண்டு மணமுடித்த கணவரையும் அவருடைய குடும்பத்தினரையும் மிகச் சில நெருங்கிய நண்பர்களையும் தவிர, அவருக்கு எவருடைய ஆதரவும் உதவியும் கிட்டியதில்லை.
ஆனால், அவருடைய மரணத்தைக் கொண்டாட எதிர்பாராத முனைகளிலிருந்தெல்லாம் தலைகள் நீண்டன. இதுதான் வியப்பிலும் வியப்பு. விந்தையிலும் விந்தை.
தமிழினியின் மரணம் சொல்கின்ற சேதிகள் என்ன?
புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கு இன்னும் மவிசு உண்டு. அவர்களின் மரணம் கூட தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுடைய நிகழ்கால – எதிர்கால அரசியலுக்குத் துணைபுரிகிறது.
அவர்கள் தங்களுக்குப் போட்டியாகவும் பங்காளிகளாகவும் வராமல் இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள். பங்காளிகளாகவும் போட்டியாளர்களாகவும் வந்தால் துரோகிகள் - எதிரியின் ஆட்கள்.
ஒரு காலம் போராடியவர்கள், மதிப்போடும் வாய்ப்புகளோடும் இருந்தவர்கள் இப்பொழுது துயரங்களின் மத்தியில் அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையைப் போக்குவதற்கு யாரும் தயாரில்லை. ஆனால், இவர்களுடைய மரணத்தையும் பாதிப்புகளையும் வைத்து, இவர்களைப் புகழ்ந்து அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற நிலை.
போராளிகளாக இருந்தோரைப் பராமரிக்க வேண்டியதும் அவர்களுக்கு உதவ வேண்டியதும் அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும் என்பதே தமிழ்த்தேசியவாதிகளுடைய நிலைப்பாடு. ஆனால், அப்படி அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் முன்வந்தால் அவர்கள் அரசாங்கத்தின் ஆட்களாகவே பார்க்கப்படுவர். அரசாங்கத்தின் உதவியைப் பெறாதிருந்தால் அநாதரவான நிலையே தவிர, தேசியவாதத்தைப் பேசும் தமிழர்களால் ஒரு சுகமும் இல்லை.
ஆகவே முன்னர் போராடியவர்கள் இன்றைய அரசியல்வாதிகளுக்கான துரப்புச் சீட்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களைப் போற்றும் அளவுக்கு அவர்களை அரவணைக்கவும் அவர்களுக்காக ஆறுதலாக இருக்கவும் தயாரில்லை.
.அதேவேளை அவர்களின் அந்தரிப்புக்கும் கஸ்டமான நிலைக்கும் அரசாங்கமே முழுப்பொறுப்பும் என்று தொடர்ந்து பழியை அரசின் மீது சுமத்திவிட்டுத் தப்பித்து விடுதல்.
இப்படியே நாம் இந்தப் பட்டியலை எழுதிக்கொண்டு போகமுடியும். அந்த அளவுக்கு தமிழ் அரசியல் போராளிகளைச் சுற்றிப் படர்ந்திருக்கிறது. ஆனால், அது போராட்டத்தை விட்டு விலகியிருக்கிறது. கூடவே நாடகமயப்பட்டுள்ளது. பெரும் நடிகர்களால் நிரம்பியுள்ளது. இதையே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சில மாதங்களுக்கு முன், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் பிரமுகரான யதீந்திராவும் கவலையோடும் ஆத்திரத்தோடும் குறிப்பிட்டிருக்கிறார். மரணவீடுகளிலேயே நாடகமாடும் நடிகர்களாக மாறியிருக்கும் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் என்று.
மக்களுக்குச் சேவை செய்கின்ற அரசியல் கலாச்சாரம் மாறி, மக்களை வைத்து, அவர்களுடைய துயரங்களையும் அவலங்களையும் வைத்து அரசியல் செய்கின்ற ஒரு நிலை இன்று வளர்ச்சியடைந்துள்ளது. அதுதான் இன்றைய தமிழ்த்தேசிய அரசியலின் பிரதானமான போக்காகும்.
இதற்கு அவர்களுக்கு எப்பொழுதும் துணைநிற்பது, அல்லது அப்படியொரு வியூகத்தில் அவர்கள் கையாள்வது அரச எதிர்ப்பையும் சிங்கள எதிர்ப்புணர்வையுமே. இப்பொழுதும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழினியின் மரண நிகழ்வு எழுப்பும் சில கேள்விகள்
தமிழினி விச ஊசி ஏற்றப்பட்டதால்தான் அவர் விரைவில் இப்படியானார் என்று சொல்லப்படும் கட்டுக்கதையின் பின்னாலுள்ள அரசியல். இந்த அறியாமைக்கும் முட்டாள்தனத்துக்கும் முடிவென்ன? எதிர்காலத்தில் புனர்வாழ்வு பெற்று வெளியானவர்களின் உளவியலில் இந்த வதந்தி ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் எப்படியிருக்கப்போகின்றன?
தமிழினியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வந்தவர்கள் அன்றுதான் அவருடைய குடும்பத்தையும் அவர்கள் இருக்கின்ற வீட்டையும் வாழ்க்கையையும் பார்த்தனர். இதையொட்டி எழுந்த விமர்சனங்களை மெல்ல அரசாங்கத்தின் பக்கமும் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களில் முக்கிய பங்களிப்பைச் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மீதும் வைத்து விட்டுத் தாம் தப்பித்துக்கொண்டார்கள். இது எந்த அளவிற்கு நியாயமானது? எந்த வகையில் நியாயமானது?
.தமிழினியின் குடும்பத்தினர் இருக்கின்ற பரந்தன் - சிவபுரம் பகுதியில் உள்ள காணிகள் மத்திய வகுப்புத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே தனியாருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டவை. காணியைப் பெற்றவர்கள் அவற்றை உரிய காலத்தில் அபிவிருத்தி செய்யாத காரணத்தினால் அந்தக் காணிகளில் காணியற்றவர்கள் குடியேறினார்கள். அவர்களில் ஒரு குடும்பம் தமிழினியுடையது. ஆனால் இந்தக் காணிகளில் குடியிருப்போருக்கான ஆவணத்தை முறைப்படி சட்டரீதியாக வழங்க முடியாது. அப்படி வழங்கினால்தான் இவர்களுக்கான வீட்டுத்திட்டத்தையும் இவர்கள் குடியிருக்கும் பிரதேசத்துக்கான வீதிகள் உள்ளிட்ட அபிவிருத்தியையும் செய்ய முடியும். அப்படியானால் முதலில் காணியை சட்டபூர்வமாக வழங்குவதற்கான நடவடிக்கையே முதலில் தேவை. அப்படியான நடவடிக்கையை முன்னெடுத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியைத் தடுத்து நிறுத்தும் விதமாகச் செயற்பட்டதே தமிழ்த்தேசியக்கூட்டமைப்புத்தான். பாராளுமன்றத்தில் இந்தக் காணிகளில் குடியிருப்போரை அங்கிருந்து அகற்றுவதற்கான சட்டமூலம் கொண்டு வந்து விரட்ட முனைந்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே. இது எதற்காக?
.தமிழினியைப்போல ஆயிரக்கணக்கான போராளிகளும் போராட்டகாலத்தில் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனரே. அவர்களையாவது இவர்கள் காப்பாற்ற மாட்டார்களா? அவர்களுக்கான உதவிகள் கிடையாதா? அதற்கான ஏற்பாடுகளை எப்படிச் செய்வது? அதை யார் செய்வது? அதை எப்போது செய்வது?
.புலம்பெயர் தமிழர்கள் தங்களிடையே ஒரு உதவிக்கட்டமைப்பை உருவாக்க இன்னும் தயங்குவதேன்? அவர்கள் இலங்கையில் தமிழர்களின் அரசியலில் தலையீடு செய்வதற்கு முண்டியடிக்கும் அளவுக்கும் போரை நடத்துவதற்காக உதவிய அளவிற்கும் போருக்குப் பின்னரான மீள் நிலைக்கு உதவப் பின்னிற்கும் காரணமென்ன?
.தங்களுடைய அரசியல் வெற்றிகளுக்கும் இருப்பிற்கும் புலிகள் தேவை. ஆனால், அவர்களுக்கு உதவவோ, அவர்களை மீட்கவோ உதவத்தயாரில்லை. அவர்கள் நலிவடைந்து இறந்து பட்டபின் அவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது நியாயம்தானா? இதை இன்னும் எவ்வளவு காலத்துக்கு நாம் அனுமதிக்கப்போகிறோம்?
போர் முடிந்து ஆறு ஆண்டுகள் முடிந்து விட்டன. புனர்வாழ்வு பெற்ற போராளிகள் பலர் வீடு திரும்பி விட்டனர். வடக்கு மாகாணசபை இயங்கத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பல நூறுதடவை புலம்பெயர் நாடுகளுக்குப் பயணம் போய் வந்திருக்கிறார்கள் இந்த மக்கள் பிரதிநிதிகள். இப்படியான நிலையில் ஏன் இன்னும் ஒரு சிறு உதவித்திட்டத்தையோ அதற்கான கட்டமைப்பையோ உருவாக்காமல் இந்தப் போராளிகளைச் சீரழிய விட்டிருக்கின்றனர்?
.விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்காக எப்போதும் நீலிக்கண்ணீர் விடும் தமிழ்த்தேசிய அரசியற் தரப்பினர், அவர்களை தங்களுடைய அரசியற் பங்காளிகளாக ஏற்க மறுப்பதேன்?
.தமிழினி இறந்ததைப்போல ஒவ்வொருவரும் இறந்து படத்தான் வேணுமா? அப்போதுதான் அந்த மரண நிகழ்வுகளை அரசியல் மேடையாகப் பயன்படுத்துவதற்குச் சாத்தியங்கள் கிடைக்குமா?
எனவே இதுபோன்ற உண்மை நிலையை தமிழினியை முன்வைத்து இன்று பலரும் சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழினி போரின் இறுதியின்போதும் சிறை வாழ்வுக்காலத்திலும் புனர்வாழ்வுக்காலத்திலும் பெற்றுக்கொண்ட அனுபவங்களும் அதன் பின்னான அவருடைய சிந்தனைகளும் முற்றிலும் வித்தியாசமானவை. இதை அவருடைய முகப்புத்தகக்குறிப்புகளில் யாரும் அவதானித்திருக்க முடியும். அவர் பின்னாளில் எழுதிய இலக்கியப்பிரதிகளிலும் இது பிரதிபலித்திருக்கிறது. அவர் வடக்கு மாகாணசபையின் இயங்குதிறனற்ற நிலையைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தமிழ்த்தேசியத்தை முகமூடியாகப் பாவித்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் கயமைத்தனத்தைக் கண்டு கோபமடைந்திருக்கிறார். இதையெல்லாம் புரிந்து கொண்டு சிந்திப்பதுதான் அவருக்குச் செய்கின்ற மரியாதையாகும். அதுவே அவருக்கான உண்மையான அஞ்சலியுமாகும்.
0 comments :
Post a Comment