Saturday, October 24, 2015

ஐ.நா. சபையின் விசாரணை தமிழ்த் தேசியத்தின் ஒரு கானல்நீர்!

இலங்கையின் 1977 ஆவணி இனக் கலவரத்தைத் தொடர்ந்து நாட்டில் அரசுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கத் தொடங்கின. 1978 அக்டோபர் 5ம் நாள் ஐ.நா.சபைக் கூட்டத் தொடரின் போது அனுமதியின்றி உள்ளே நுழைந்து மேடை ஏறிய திரு வைகுந்தவாசன் பின்வருமாறு உரை நிகழ்த்தினார்.

"பேரவைத் தலைவர் அவர்களே! உலகத் தலைவர்களே!! தமிழ் ஈழம் போன்ற ஒடுக்கப்படும் நாடுகளைக் கொண்ட நாடுகள் உலக நாடுகளின் உச்சப் பேரவையான இங்கே எங்கள் இன்னல்களைக் கூறாமல் வேறு எங்கே போய் எடுத்துக் கூறுவது? அருள் கூர்ந்து என்னை ஒரு மணித்துளி பேசுவதற்கு அனுமதியுங்கள்!

என் பெயர் கிருஸ்ணா. இந்தியாவிற்கும் சிறீலங்காவுக்கும் இடையேயுள்ள 25 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட 'தமிழீழம்" நாட்டிலிருந்து பிரதிநிதியாக வந்திருக்கிறேன். சிறீலங்கா அரசு சிறுபான்மை இனத்தோரைத் துன்புறுத்தி ஒடுக்கும் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. தனிநாடாக வாழ்வதற்கு எங்களுக்குள்ள உரிமையை நாங்கள் பயன்படுத்துவதற்கு அறிவித்துள்ளோம். தமிழர் சிக்கல் இந்தியப் பகுதியின் அமைதியையும் அச்சுறுத்திக் கொண்டுள்ளது. உலகத் தலைவர்களாகிய நீங்கள் இதில் தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால் எங்கள் பிரச்சனையும் பாலஸ்தீனியர்களினதும் சைப்ரஸ் நாட்டினதும் போராட்டம் போல் உருவெடுக்கும்"

1979ல் இலங்கையின் வடபகுதியில் அவசரகாலச் சட்டம் அமுல் செய்யப்பட்டு இராணுவத்தினரால் தமிழ் இளைஞர்கள் கைது செய்ப்பட்டுக் கொலையுண்டும் காணாமலும் போயினர்.

1981ல் இலங்கையில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக ஒரு இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பலர் கொல்லப்பட தப்பியோர் அகதிகளாக வவுனியாவுக்கு வந்து சேர்ந்தனர்.

1983 யூலைக் கலவரமும் அதில் ஆயிரக்கணக்கில் இடம்பெற்ற படுகொலைகளும் இலட்சக் கணக்கில் இலங்கைத் தமிழர்களை தமிழ்நாட்டுக்கும் மேற்கத்தைய நாடுகளுக்கும் தப்பி ஓட வைத்தது. சர்வதேசம் இலங்கைத் தமிழர்கள் நிலைபற்றி பூரணமாக அறிந்து கொண்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி 10 இலட்சம் கையொப்பம் இட்ட மனு ஒன்றை ஐ.நா.வுக்கு அனுப்பி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தனது ஆலோசகரான அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனை இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியுடன் நியூயோக் அனுப்பி பிரதமர் முன்னிலையில் ஐ.நா.சபையில் இலங்கைத் தமிழர் சார்பாக அவரைப் பேச வைத்தார். அத்துடன் (25.11.83 திகதியில்) இராமச்சந்திரன் இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்களை நிரூபணம் செய்யும் ஆவணங்களை அன்றைய ஐ.நா.வின் பொதுச் செயலாளர் ஜாவியர் பேரஸ் டி கூலர் ( Javier Pérez de Cuéllar) கையில் கையளித்தார். அதே சமயம் கூட்டத் தொடர் முடிந்ததும் திருமதி இந்திராகாந்தி அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தமிழர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை நன்கு கேட்டறிந்து கொண்டார்.

1987 மார்ச் மாதம் இடம் பெற்ற ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக செனகல் நாடு முன்மொழிந்த தீர்மானத்தை ஆர்ஜன்டீனா கனடா நோர்வே ஆகிய நாடுகள் ஆதரித்து இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை உலகத்திற்குப் பகிரங்கப்படுத்தின. அதனையடுத்து அதேயாண்டு யூலையில் இலங்கைக்கு இந்திய அமைதிப்படை வந்ததன் மூலம் உலகம் முழுவதும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளை ஐயந்திரிபறப் புரிந்து கொண்டன.

2009ல் வன்னி யுத்தத்தின் பிற்பகுதி வரைக்கும் நேரடிப் பார்வையாளராகவும் போரின் இறுதி நாள் வரைக்கும் ஆழ்ந்த கவனிப்பாளராகவும் செயற்பட்ட ஐ.நா.சபை தனது இயலாமை பற்றி பகிரங்கமாகவே வருத்தம் தெரிவித்துக் கொண்டது.

2012 முதற் கொண்டு இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இலங்கையின் இனப்படுகொலை தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை இடம்பெறும் என பிரச்சாரம் நடாத்தப்பட்டு வந்தது. 2015 அக்டோபர் மாதம் அது 'யுத்தக் குற்றம்" பற்றி வெளிநாட்டு ஆலோசனை அடங்கிய உள்ளக விசாரணை என்ற முடிவை எட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (ஐ.நா.சபை) என்பது தற்போது 193 உலக நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை உள்ளது. 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் இந்தப் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் 5 நிரந்தர உறுப்பினர்களும் 10 நிரந்தரமற்ற (இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை தெரிவு செய்யப்படும்) உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகியவையே நிரந்தர உறுப்பினர்களாகும். ஐ.நா.அமைப்பு விதிகளின் பிரகாரம் இந்த 5 நாடுகளுக்கும் 'வீட்டோ" எனப்படும் அதிகாரம் உண்டு. ஐ.நா.பொதுச் சபையினால் நிறைவேற்றப்டும் தீர்மானம் எதனையும் இந்த 5 நாடுகளும் தங்களது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப தங்களது 'வீட்டோ" அதிகாரத்தைப் பாவித்து நிராகரித்து விடமுடியும்.

இதற்கு நல்ல உதாரணம் மத்திய கிழக்கு நெருக்கடியாகும். 1948ல் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட நாள் முதல் பாலஸ்தீன்-இஸ்ரேல் மோதல் கடந்த 67 வருடங்களாக தொடருகிறது. இதுவரை ஐ.நா.பொதுச் சபையால் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் அமெரிக்காவின் 'வீட்டோ" அதிகாரத்தினால் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளது. பல இலட்சம் பாலஸ்தீனியர்கள் கடந்த 67 வருடங்களாக பிறந்த மண்ணிலும் உலக நாடுகளிலும் அகதிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அரபுக் கண்டத்தின் ஒரு கண்காணிப்பு நிலையமாக இஸ்ரேல் இயங்குவது போல் இந்து மகா சமுத்திரப் பிராந்தியத்தின் கண்காணிப்பு நிலையமாக இலங்கையை மாற்றும் நகர்வுகளே வல்லாதிக்க சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1977ல் ஜெயவர்த்தனா நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பை உலகத்தின் புதிய தாராளவாதப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் இலங்கையையும் இணைத்துக் கொள்வதற்காகவே உருவாக்கினார். முன்-பின் யுத்தத்தின் போதும் அந்தப் பொருளாதார நடைமுறை செயற்பட்டுக் கொண்டே வருகிறது. இன்றைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு நாளும் பொழுதும் மில்லியன் தொகை கணக்கில் இந்தியா, சீனா, ரஷ்யா, யப்பான் உட்பட மேற்குலக நாடுகள் யாவுமே உதவியாகவும் அபிவிருத்தியாகவும் தங்கள் பணத்தை வாரி இறைக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் பிளவுபட்ட அபிலாஷைகளும் அரசியல் வழிகாட்டிகளின் சுயநலப் போக்குகளும் சேர்ந்து இன்று தமிழ்ப் பேசும் மக்களை நிர்க்கதியான கையறு நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது. தமிழ்ப் பேசும் மக்களுக்கான தலைவர்கள் தோன்றாமல் அவர்களைப் பிரித்தாளும் தமிழ்த் தேசியப் பிரதிநிதிகளே நமக்கு கிடைத்துள்ளனர். இலங்கை அரசுடன் முரண்பட்டு இந்தியாவிடம் போனோம். இந்தியாவை உதறித் தள்ளி இலங்கை அரசிடம் அடைக்கலம் புகுந்தோம். மறுபடி இலங்கை அரசுடன் மோதிக் கொண்டு சர்வதேசம் சென்றோம். இப்போது மறுபடி இலங்கை அரசை நம்புகிறோம்.

ஒரு நாட்டின் அரச கட்டமைப்பு தங்கள் நலனுக்கு ஏற்புடையதாக அமையாவிட்டால் அந்தந்த நாடுகளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளைத் தூண்டி விட்டு வன்முறையை வளர்த்துப் பின் பயங்கரவாதமாக்கி மக்களைப் பலிக்கடாக்களாக்கி விட்டுத் தங்கள் அரசியல் லாபத்தை அடைவதற்கான செயற்பாட்டுத் தளமே ஐ.நா.சபையாகும். ஒரு நாட்டில் சர்வாதிகாரத்தைப் பராமரிப்பதும் பின்னர் அது தனது கட்டுப்பாட்டை மீறும்போது ஜனநாயகம் எனக் கூறி அதை சின்னாபின்னப் படுத்துவதையும் இந்த 'வீட்டோ" நாடுகள் ஐ.நா.சபை ஊடாக நாகரீகமாக செய்து வருகின்றன.

எனவே இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் ஐ.நா.வின் கரிசனையைப் பெற்றுள்ளதாகவும் அதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புவதும் எம்மை நாமே ஏமாற்றுவதாகும். நிலவைத் தேடி பரதேசம் போகிறோம் நாம். பெயர் இல்லாத ஊருக்கு வழி தேடுகிறோம் நாம். எமது பிரச்சனைகளைத் தீர்க்கும் சுலபமான வழிமுறை இலங்கைக்கு உள்ளேயே இருக்கையில் எமது அதிகார ஆசையாலும் அரசியல் அறியாமையாலும் பரம்பரையில் விளைந்த சுயநலம் காரணமாக அந்நியருக்குப் பணிந்து நடக்கும் அடிமை மனப்பான்மையாலும் ஐ.நா.விசாரணை என்ற கானல்நீரை உண்மையென நம்பி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com