Tuesday, October 20, 2015

டேவிட் ஐயாவின் மறைக்கபட்ட இருண்ட பக்கங்களில் ஒன்று. பீமன்.

தமிழரின் விடுதலைக்காக, அவர்களின் மேம்பட்ட வாழ்வுக்காக அனலாக கொழுந்துவிட்டெரிந்த எஸ்.ஏ.டேவிட் என்ற அக்கினிப்பிழம்பு இந்தியாவில் தனக்கே அளவான சிறியதொரு அறையில் நுளம்புக்கு எரியும் சுக்குவிறகுக்கட்டைபோன்று கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக புகைந்துகொண்டிருந்து இறுதியாக கிளிநொச்சியில் அணைந்திருக்கின்றது. இறுதிக்கிரிகையும் முடிந்தாயிற்று. பலர் டேவிட் ஐயாவின் புகழ் பேசியிருக்கின்றார்கள். பலர் அவரின் தியாகம், திறமை, வாழ்வியல் என்பன பற்றி எழுதியிருக்கின்றார்கள். ஆனால் அக்கினி பிழம்பு வெறும் புகையாக மாற காரணம் யாது , 3 தசாப்தங்கள் அவர் இருண்ட யுகத்தில் வாழக் காரணம் யாது என்ற கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும்.

புகைந்து கொண்டிருந்த அந்த விறகுக்கட்டை மீது கொஞ்சம் எண்ணையூற்றி பிரகாசிக்கச்செய்வோம் என சிலர் முயற்சி செய்திருக்கின்றார்கள். ஆனால் அவையாவும் முறியடிக்கப்பட்டிருக்கின்றது. காரணம் ஐயாவின் அற்பணிப்பில், விடுதலையின் மீது அவர் கொண்டிருந்த பற்றுறுதியின்பால், திறமையின்பால் சந்தேகமோ அல்ல. அவரை யாரும் சந்தேகிக்கவும் இல்லை அதற்கு அவர் வாழ்நாளில் இடமளிக்கவுமில்லை மாறாக டேவிட் ஐயா தான் நேசித்த அமைப்பிடம் „இல்லாத கடுவன் புனைக்குட்டியை கண்ணிரண்டும்தெரியாத குருடனொருவன் இருட்டறையில் தேடியதுபோல்' சமத்துவத்தையும், மனிதநேயத்தையும் , தலைமைத்துவப் பண்புகளையும் எதிர்பார்த்தமையேயாகும். வெளிப்படையாக கூறினால் உள்வீட்டு படுகொலையை நிறுத்து! என்று கூறியதால்.

புளொட் அமைப்பு ஒர் தனிமனிதனின் சர்வாதிகார ஆளுகையின் கீழ் கொண்டுவரப்படுவதை உணர்ந்த டேவிட் ஐயா, சமரசத்திற்கோ, விட்டுக்கொடுப்புக்கோ வழிவிடாது போர்கொடி தூக்கிக்கொண்டு அவ்வமைப்பை விட்டு வெளியேறியிருக்கின்றார். புளொட் தனது சகதோழர்களை கொலைசெய்வதை தடுப்பதற்கு அபார முயற்சிகளை எடுத்திருக்கின்றார். தமிழ் மக்களின் விடுதலை வேண்டி தம்மை அர்ப்ணித்த உயிர்கள் உமாமகேஸ்வரனின் தலைமைவெறிக்கு காவுகொடுக்கப்பட முடியாதவை என உரக்க குரல் கொடுத்திருக்கின்றார் அந்த உயர்ந்த மனிதர்.

தவறுகளை தட்டிக்கேட்டமைக்காக டேவிட் ஐயா 02.08.1985 ம் ஆண்டு இரவு 10.30 மணியளவில் அண்ணாநகர் பஸ்நிலையத்தின் பின்னால் வைத்து 4 இளைஞர்களால் அடித்து வீழ்த்தப்பட்டு அரைப்பிணமாக வான் ஒன்றி அள்ளிச்செல்லப்பட்டிருக்கின்றார். இக்கடத்தல் தன்மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி என தனது Tamil Eelam Freedom Struggle ( An inside Story) எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள டேவிட் ஐயா, தான் கடத்தப்பட்ட வாகனச் சாரதியின் தயவால் அன்று விடுதலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தெருவோரத்தில் வீசிச்செல்லப்பட்ட டேவிட் ஐயா அவ்வழியால் வந்த சைக்கிளோட்டி ஒருவரால் மீண்டும் அண்ணா நகருக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றார். அன்று உடனடியாகவே 11.45 மணியளவில் திருமங்களம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை விபரித்திருக்கின்றார். சந்ததியாரை கொல்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பிலும் முறையிட்டிருக்கின்றார். முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் கணக்கிலெடுக்கவில்லை என குற்றஞ்சுமத்தியுள்ள டேவிட் ஐயா அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் ஈழப் போராளிகள் தொடர்பிலான எந்த முறைப்பாடுகளையும் பதிவு செய்யவேண்டாமென அரச மேல்மட்ட உத்தரவு எனவும் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் எழுதியுள்ளார்.

பொலிஸாரின் நடவடிக்கையில் திருப்தியடையாத டேவிட் ஐயா, தான் கடத்தப்பட்ட விடயத்தையும் , சந்ததியாருக்கு நேரவிருக்கும் அபாயத்தையும் அதேவாரம் அன்றைய தமிழ் நாடு முதலமைக்சர் எம்.ஜி ராமச்சந்திரனுக்கும் இந்திய ஊடகங்களுக்கும் முறையிட்டிருக்கின்றார். அம்முயற்சியும் பயனற்றதாகவே முடிவுற்றிருக்கின்றது.

19.09.1985 அன்று சந்ததியார் கடத்தப்பட்டிருக்கின்றார். டேவிட் ஐயாவுடன் ஒரே அறையில் தங்கியிருந்த சந்ததியார் அன்று மாலை வெளியே சென்று திருப்பி வராததையடுத்து 20.09.1985 திருமங்களம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருக்கின்றார். தொடர்ந்து தமிழ் நாட்டு முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் நாட்டின் அன்றைய பிரதமர் ரஜீவ் காந்தி ஆகியோருக்கும் முறையிட்டிருக்கின்றார். தீப்பொறி பத்திரிகை மற்றும் பல ஊடகங்கள் ஊடாக சந்ததியாரின் விடுதலைக்காக பாடுபட்டிருக்கின்றார்.

இச்செயற்பாடுகளால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளான டேவிட் ஐயா இந்தியாவின் பல மூலைகளில் தலைமறைவு வாழ்கை வாழ்ந்து தனது உயிரை காத்திருக்கின்றார். உமா மகேஸ்வரன் இலங்கை அரசுடன் கைகோர்த்துக்கொண்டு கொழும்பில் நிலைகொண்டவுடன் தனது தலைமறைவு வாழ்வு முடிவுக்கு வந்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் டேவிட் ஐயா.

தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை நியாயமான வழியில் வெல்லவேண்டுமென நேரிய வழிகாட்டிய உயரிய சிந்தனையாளர்கள், அப்பழுக்கற்ற தியாகிகள் தமிழீழ விடுதலை போராட்ட அமைப்புக்களின் சர்வாதிகாரப்போக்கினால் எண்ணிலடங்கா இன்னல்களை சந்தித்திருக்கின்றார்கள். அவர்களது கனவுகள் கலைக்கப்பட்டிருக்கின்றது. அவர்களது அறிவு , ஆற்றல் , அனுபவங்களை தாங்கள் நேசித்த சமூகத்திற்கு பயனுள்ளாதாக்க முடியாத செல்லாக்காசாக்கப்பட்டிருக்கின்றார்கள். தவறுகளை தட்டிக்கேட்ட நேர்மையான மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதற்கெல்லாம் டேவிட் ஐயாவின் வாழ்வும் முடிவும் சிறந்த உதாரணமாகும்.




உங்களுக்கு பாடம் படிப்பிக்க எனக்கு தெரியும். டேவிட் ஐயாவை மிரட்டிய உமா மகேஸ்வரன்



மட்டக்களப்பு சிறை உடைப்பு குறித்து டேவிட் ஐயா ...




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com