Sunday, October 18, 2015

டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா?- நிலாந்தன்

தனது பல தசாப்த கால அலைந்த வாழ்வின் முடிவில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் எல்லையோரக் கிராமங்கள் நெடுக மைல் கணக்காக நடந்த கால்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் தமது பயணத்தை முடித்துக் கொண்டன.

ஒரு செயற்பாட்டாளராக, கைதியாக, நாடு கடந்து வாழ்பவராக முதிய வயதிலும் தேடப்படும் ஒருவராக ஆறுதலின்றி சதா அலைந்த ஒரு பெருவாழ்வு கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அதிகம் பேருடைய கவனத்தை ஈர்க்காமல் அமைதியாக முடிந்து போயிற்று.

அவருடைய இறுதி நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. அது அண்மைத் தசாப்தங்களில் அங்கு நடந்த இறுதி நிகழ்வுகள் எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டுக் காணப்பட்டது. கட்சி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் வேறுபட்டு நிற்கும் எல்லாத் தரப்புக்களும்; பங்குபற்றிய ஓர் இறுதி நிகழ்வு அது. எல்லாக் கட்சிக்காரர்களும், செயற்பாட்டாளர்களும் அந்த நிகழ்வில் போற்றிப் பேசுவதற்கு ஏதோ ஒன்று டேவிட் ஐயாவின் வாழ்க்கை முழுவதிலும் இருந்திருக்கிறது.

பெருமளவில் அரசியல் பிரமுகர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்ட அந்நிகழ்வில் மிகக்குறைந்தளவு பொது ஜனங்களே பங்குபற்றியிருக்கிறார்கள். இந்நிகழ்வு நடந்து இரண்டு நாட்களின் பின் நடந்த மற்றொரு இறுதி நிகழ்வில் ஒப்பீட்டளவில் கூடுதலான பொதுமக்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். அதுவும் ஒரு செயற்பாட்டாளரின் இறுதிக் நிகழ்வுதான். தமிழ் ஐயா என்று அழைக்கப்படும் கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு செயற்பாட்டாளரின் இறுதி நிகழ்வு அது. அவர் அந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அதில் பொதுமக்கள் கூடுதலாகக் கலந்து கொண்டார்கள். ஆனால் டேவிட் ஐயா கிளிநொச்சியில் வசித்திருக்கிறார் என்பது அவர் இறந்தபொழுதே பலருக்கும் தெரியவந்தது.

தனது நாடு திரும்புதலை அவர் பிரசித்தப்படுத்த விரும்பவில்லைப் போலும். கிளிநொச்சியில் உள்ள குருகுலத்தை ஸ்தாபித்த மகா ஆழுமைகளில் ஒன்று. நான்கு மாதங்களாக தங்கள் மத்தியில் சந்தடியின்றி வாழ்ந்து மறைந்திருக்கிறது என்பதை அந்த மக்களுக்கு யார் எடுத்துக் கூறுவது?

அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட எல்லா அரசியல்வாதிகளை விடவும் அவர் அதிகம் ‘ரிஸ்க்’ எடுத்திருக்கிறார். அதிகம் அர்ப்பணித்திருக்கிறார். அந்த அர்ப்பணிப்புக்களுக்குப் பரிசாக எதையுமே பெற்றுக் கொள்ளவில்லை. திருமணம் செய்யவில்லை. சொத்து எதையும் சேர்த்து வைத்திருக்கவில்லை. யாரோடும் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளவில்லை. இப்படிப் பார்த்தால் அவருடைய அஞ்சலி நிகழ்வில் பங்குபற்றிய எல்லா அரசியல்வாதிகளை விடவும் அவர் உயர்ந்து நிற்கிறார்.

அரசியல்வாதிகளுக்கும் செயற்பாட்டாழுமைகளுக்கும் அவர் ஓர் அரிதான முன்னுதாரணம். குறிப்பாக ஜனவரி 08 இற்குப் பின் தமிழ் சிவில் வெளியை செயற்பாட்டு இயக்கங்கள் எவ்வாறு கையாளலாம் என்று சிந்திக்கப்படும் ஓர் அரசியல் சூழலில் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் அவரிடமிருந்து குறிப்பாக இரண்டு முக்கிய முன்னுதாரணங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

01. ஒரு மெய்யான சத்தியாக்கிரகி எப்படி மெய்யாகவே ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டி வந்தது? என்பது.

02.ஒரு செயற்பாட்டு இயக்கம் ஆயுதப் போராட்ட இயக்கங்களோடு தொடர்புறுவதால் வரக் கூடிய பின்விளைவுகள் பற்றியது.
இவை இரண்டையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ் மிதவாதிகள் அடிக்கடி கூறுகிறார்கள் சத்தியாக்கிரகத்தில் ஏற்பட்ட தோல்வியே ஆயுதப் போராட்டத்திற்குக் காரணம் என்று. அது ஒரு முழு உண்மை அல்ல என்பது ஏற்கனவே எனது கட்டுரைகளில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அகிம்சை என்பது சாகப் பயந்தவர்களின் ஆயுதம் அல்ல. அது சாகத் துணிந்தவர்களின் வாழ்க்கை முறையாகும். காந்தியைப் பொறுத்தவரை அது ஒரு வாழ்க்கைமுறையாக இருந்தது. அதனால்தான் அவர் “எனது வாழ்க்கையே எனது செய்தி” என்று கூறத் தக்கதாக இருந்தது. ஆனால் எமது மிதவாதிகளைப் பொறுத்தவரை அகிம்சை எனப்படுவது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கவில்லை. அது ஒரு போராட்ட உத்தியாகத்தான் காணப்பட்டது. கடந்த ஆறாண்டுகால அனுபவமும் அத்தகையதே. அதாவது சாகப் பயந்தவர்களின் போராட்ட உத்தியாகவே சத்தியாக்கிரகம் கையாளப்பட்டு வருகிறது.

இத்தகைய ஒரு பின்னணியில் ஈழத்தமிழர்கள் மத்தியில் அகிம்சையை ஒரு வாழ்க்கை முறையாக வாழ்ந்து காட்டிய ஆளுமைகள் மிக அரிதாகவே தோன்றியிருக்கிறார்கள். டேவிட் ஐயா அத்தகைய ஒருவர். மற்றொருவர் மு. தளையசிங்கம். டேவிட் ஐயா ஒரு சமூக அரசியல் செயற்பாட்டாளார். தளையசிங்கம் ஓர் ஆன்மீக மற்றும் சமூக அரசியல் செயற்பாட்டாளர். இருவரும் சத்தியாகிரகத்தை தமது நடைமுறை வாழ்வில் விசுவாசமாகக் கடைப்பிடிக்க முற்பட்டார்கள். டேவிட் ஐயா காந்தியம் என்ற பெயரிலேயே அமைப்பினை உருவாக்கினார்.

தளையசிங்கம் பூரண சர்வவோதயம் என்ற ஒரு அமைப்பைக் கட்டி எழுப்ப முற்பட்டார். காந்திய இயக்கம் அதன் ஆரம்பக் கட்டங்களில் வெளியிட்ட ஒரு அரிதான சிறிய நூலை அதன் ஆரம்பகாலச் செயற்பாட்டாளர்களில் ஒருவரும் பின்னாளில் புளொட் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவருமாகிய ஒருவர் வைத்திருந்தார். . GANDHIYAM : VAVUNIYA-SRILANKA என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்நூலில் காந்திய இயக்கத்தின் குறிக்கோள்களும் செயற்திட்டங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.ஒருங்கிணைந்த பண்ணைகளுக்கூடாக காந்திய விழுமியங்களை கட்டி எழுப்புவதே டேவிட் ஐயா, மற்றும் மருத்துவர் ராஜசுந்தரம் ஆகியோரின் அடிப்படை இலக்குகளாக அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

வாகன வசதிகள் குறைந்த அந்நாட்களில் டேவிட் ஐயா கென் பாம் டொலர் பாம் போன்ற பகுதிகளை நோக்கி கிட்டத்தட்ட பதினைந்து மைல்களுக்கு மேலாக நடந்து சென்று பணிபுரிந்ததாக காந்தியச் செயற்பாட்டாளரகள் கூறுகிறார்கள்.

கிட்டத்தட்ட 45000 பேர்களையாவது இவ்வாறு எல்லைப்புறங்களிலும் வவுனியா மற்றும் கிழக்குப் பிரதேசங்களிலும் காந்தியம் குடியேற்றியது என்று கூறப்படுகிறது. திருமலையில் உருவாக்கப்பட்ட குடியேற்றங்கள் பின்நாட்களில் அகற்றப்பட்டுவிட்டன. மட்டக்களப்பில் சில குடியிருப்புக்கள் மிஞ்சியிருப்பதாகக் கூறப்படுகிறது. வவுனியா மாவட்டத்தில் குறிப்பிடத்தக்களவு குடியிருப்புக்கள் தப்பிப்பிழைத்துள்ளன.

1977 இல் நிகழ்ந்த இன வன்முறையின் விளைவாக தமிழ்ப்பகுதிகளை நோக்கி வந்த மக்களை குடியமர்த்தும் நோக்கத்தோடு ஒருங்கிணைந்த பண்ணைகள் உருவாக்கப்பட்டதாக மேற்சொன்ன நூலில் கூறப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் காந்தியம் உருவாக்கிய ஒருங்கிணைந்த பண்ணைகளில் அநேகமானவை இன வன்முறையின் விளைவுகளே எனலாம். அவை ஒருங்கிணைந்த பண்ணை வடிவிலான குடியேற்றங்கள் மட்டுமல்ல. அரசாங்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட குடியேற்றங்களுக்கு எதிரான ஒருவித தற்காப்புக் கவசங்களும் தான்.

நாட்டின் பல்லினத் தன்மையை உறுதி செய்வதற்காகவே அரசின் ஆதரவுடனான குடியேற்றங்கள் செய்யப்படுவதாக தென்னிலங்கையில் இருப்பவர்கள் விளக்கம் கூறுவார்கள். இலங்கை தீவின் எல்லா மாவட்டங்களையும் பல்லினத் தன்மைமிக்கவைகளாக உருவாக்க வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும் கூறப்பட்டிருக்கிறது. ஆகப்பிந்திய கணக்கெடுப்புக்களின்படி இப்பொழுது இலங்கைததீவின் எல்லா மாவட்டங்களுமே பல்லினத்தன்மை மிக்கவைகளாக ஆக்கப்பட்டுவிட்டன.

ஆனால் மெய்யான பொருளில் பல்லினத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தை ஸ்தாபிப்பது என்பது ஒரு மக்கள் கூட்டத்தின் தனித்துவமான இருப்பை ஏற்றுக் கொள்வதில் இருந்தே தொடங்குகிறது. ஒரு மக்கள் கூட்டத்தின் தனித்துவமான இருப்பை கரைப்பதில் இருந்து அல்ல. அரசாங்கத்தால் திட்டமிட்டுச் செய்யப்படும் குடியேற்றங்கள் ஒரு மக்கள் கூட்டத்தின் தனித்துவமான இருப்பை நீர்த்துப் போகச் செய்து கரைத்துவிடும் உள்நோக்கம் உடையவை. நிச்சயமாக அது பல்லினத்தன்மை மிக்க ஒரு சமூகத்தை உருவாக்காது. மாறாக அது எல்லாவற்றையும் ஒன்றாகக் கரைத்துவிடும் அதாவது பெரிய இனத்துள் சிறிய இனத்தை கரைத்தழித்துவிடும் உள்நோக்கம் உடையது.

காந்தியம் கட்டி எழுப்பிய ஒருங்கிணைந்த பண்ணைகள் மேற்சொன்ன அரசின் உதவியுடனான குடியேற்றங்களுக்கு எதிரான ஒருவித தற்காப்புப் பொறிமுறைதான். இவ்வாறு காந்திய விழுமியங்களுக்கூடாகச் சிந்தித்த டேவிட்ரும் ராஜசுந்தரமும் எப்படி ஆயுதப் போராட்டத்தின் ஆதரவாளர்கள் ஆயினர்? அவர்கள் மட்டுமல்ல. மு. தளையசிங்கம் அணியினரும் கூட பின்னாளில் ஆயுதப் போராட்டத்தை ஆதரிப்பவர்களாகவே மாறினர். ஆயின் ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றிய மெய்யான சத்தியாக்கிரகிகள் ஏன் ஒரு கட்டத்திற்குப் பின் அதற்கு முற்றிலும் மாறான ஒரு வழிமுறையை தெரிந்தெடுத்தார்கள்?. அவர்கள் தமது நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை. போராட்ட வழிமுறைகளைத்தான் மாற்றிக் கொண்டார்கள். ஆனால் தமிழ் மிதவாதிகளில் எத்தனைபேர் அவ்வாறான ஒரு இறந்தகாலத்தைக் கொண்டிருக்கிறார்கள்? காந்தி சொன்னது போல “எனது வாழ்க்கையே எனது செய்தி” என்று கூறத்தக்க எத்தனை மிதவாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.? இது முதலாவது. குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் டேவிட் ஐயாவிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டியது.

இரண்டாவது தமிழ் செயற்பாட்டாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது.
1998 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு படைநடைவடிக்கையின் போது வவுனியாவில் பாலமோட்டைக் கிராமத்திற்கு ஊடாக இடம்பெயர்ந்துகொண்டிருந்தோம். அப்பொழுது மூத்த அசியல் செயற்பாட்டாளர் ஒருவர் பாலமோட்டையில் இருந்த காந்தியப் பண்ணையைக் சுட்டிக்காட்டி பின்வருமாறு சொன்னார். “காந்திய இயக்கத்தை அதன் போக்கிலேயே விட்டிருக்கலாம். ஆயுதப் போராளிகள் அதற்குள் நுழைந்திருக்கக் கூடாது. காந்தியமும் அதற்கு இடம்விட்டிருக்கக் கூடாது. இப்பொழுது அந்த இயக்கமும் இல்லை. காந்தியப் பண்ணைகளும் இல்லை. ஆனால் ஆயுதப் போராட்டத்தோடு நேரடியாக சம்பந்தப்படாது விட்டிருந்திருந்தால் காந்தியப் பண்ணைகள் தனித்துவமான ஒரு வளர்ச்சியைப் பெற்றிருந்திருக்கும்” என்று.

இது தொடர்பில் காந்தியச் செயற்பாடுகளோடு அதிகம் தொடர்புபட்டிருந்த புளொட் இயக்க உறுப்பினர்கள் சிலரோடு உரையாடினேன். அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் டேவிட் ஐயா ‘எழுநா’ இதழுக்கு வழங்கிய நேர்காணலின் அடிப்படையிலும் ஒரு தொகுதி தகவல்களைத் திரட்டமுடிந்தது. ஆனால் அவை முடிந்த முடிவுகள் அல்ல. காந்திய இயக்கத்தின் வரலாற்றின் ஒரு பகுதியும் புளொட் இயக்கத்தின் வரலாற்றின் ஒரு பகுதியும் ஓரிடத்தில் சந்திக்கின்றன. எனவே இதில் சம்பந்தப்பட்ட இந்த இரண்டு இயக்கங்களையும் சேர்ந்தவர்கள் வெளிப்படையாகப் பேசும்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்படும் ஒரு வரலாறே ஒப்பீட்டளவில் முழுமையானதாக இருக்க முடியும்.

டேவிட் ஐயா கூறுகிறார். புளொட் இயக்கத்தைச் சேர்ந்த சந்ததியாருக்கும் தனக்கும் இடையிலிருந்த தனிப்பட்ட உறவு காரணமாகவே காந்தியத்துக்கும் புளொட்டுக்கும் இடையே நெருக்கம் உண்டாகியது என்று. ஆனால் டேவிட் ஐயாவை விடவும் மருத்துவர் ராஜசுந்தரமே புளொட் இயக்கத்தோடு அதிகம் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது. டேவிட் ஐயா அதிகபட்சம் திட்டமிடல் பணிகளையே மேற்கொண்டதாகவும் மருத்துவர் ராஜசுந்தரம்தான் அதிகபட்சம் பண்ணைகளில் களத்திலிறங்கி வேலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ் மிதவாதிகளிடம் அதிருப்தி அடைந்த இளைஞர்கள் குறிப்பாக இளைஞர் பேரவையைச் சேர்ந்தவர்கள் காந்தியத்தில் தொண்டர்களாக இணைந்தார்கள். இவர்களில் பலர் சந்ததியாரின் தொடர்பு காரணமாக பின்னாளில் புளொட்டில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. புளொட் இயக்கத்தைச் சேர்ந்த சுந்தரத்தால் வெளியிடப்பட்ட “புதியபாதை” என்ற பத்திரிகையை காந்தியத் தொண்டர்கள் விநியோகித்திருக்கிறார்கள். சுந்தரம் பிந்நாளில் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுந்தரம் கொல்லப்பட்டதை அடுத்து காந்தியத்துக்கும் புளொட்டுக்கும் இடையிலான உறவு ஓரளவுக்கு வெளியரங்கமாகியது என்று ஒரு மூத்த புளொட் உறுப்பினர் சொன்னார்.

ஆனால், தமது இயக்கத்தில் வினைத்திறன்மிக்க தொண்டர்களாக உள்ள பலரும் புளொட் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பது டேவிட்டுக்கும் ராஜசுந்தரத்துக்கும் நன்கு தெரிந்திருந்தது என்று நம்ப இடமுண்டு. இக்கட்டுரைக்காக நான் சந்தித்த மூத்த புளொட் உறுப்பினர் ஒருவரிடம் கேட்டேன். காந்தியத்தில் புளொட் சம்பந்தப்பட்டிராவிட்டால் காந்தியம் எப்படிப்பட்ட ஒரு வளர்ச்சியைப் பெற்றிருக்கும்?என்று. அவர் சொன்னார் – “காந்தியத்தின் வினைத்திறன்மிக்க தொண்டர்களாக இருந்தவர்களில் பலர் எமது இயக்கத்தோடு தொடர்புடையவர்கள்தான். அவர்கள் இல்லை என்றால் காந்தியம் அப்படி ஒரு வளர்ச்சியைப் பெற்றிருக்காது. தவிர எமது இயக்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்காவிட்டாலும் அரசாங்கம் காந்தியத்தை நீண்ட காலத்துக்கு அனுமதித்திருக்காது” என்று.

சிறையுடைப்பில் தப்பிச் சென்ற பின் இந்தியாவில் டேவிட் ஐயா புளொட் இயக்கத்தின் தலைமைத்துவத்தோடு முரண்படத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் புளொட் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற தீப்பொறி அணியோடு அவர் சேர்ந்து இயங்கத் தொடங்கினார். அதன் பின் புளொட் இயக்கத்தால் அவருக்கு வழங்கப்பட்ட உதவிகள் எதையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய போதும் அந்த இயக்கத்திற்கு அறிவித்திருக்கவில்லை. ஆனால் அவருடைய இறுதி நிகழ்வை அந்த இயக்கமே ஒழுங்கு செய்தது.

ஒரு செயற்பாட்டு இயக்கத்தின் ஒழுக்கத்திற்கும் ஆயுதப் போராட்ட ஒழுக்கத்திற்கும் இடையே வேறுபாடுகள் உண்டு குறிப்பாக மக்கள் மயப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு இயக்கமானது ஆயுதப் போராட்ட இயக்கத்தோடு நேரடியாக தொடர்புறுகையில் அந்த ஆயுதப் போராட்ட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அந்த செயற்பாட்டு இயக்கத்தின் போக்கையும் தீர்மானிக்கின்றன. அந்த ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்படுமாக இருந்தால் அந்த செயற்பாட்டு இயக்கமும் தோற்கடிக்கப்படுகிறது.

ஈழத்தமிழ் வரலாற்றில் காந்தியம் இயக்கத்தைப் போலவே மற்றொரு உதாரணமும் உண்டு. யாழ். பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு எழுந்த பொங்தமிழ் என்று அழைக்கப்படும் ஒரு பேரரங்கச் செயற்பாடு அது. இலங்கைத்தீவின் வரலாற்றிலேயே முன்னுதாரணமற்ற ஒரு பேரரங்கச் செயற்பாடு அது. முதலிரு பொங்குதமிழ் நிகழ்வுகளும் ஒப்பீட்டளவில் சுயாதீனமானவை என்று கூறப்படுகின்றது.

ஆனால் அதன் பின் நிகழ்ந்தவை ஆயுதப் போராட்டத்தின் அதிகரித்த செல்வாக்குக்கு உட்பட்டுவிட்டதாக ஒரு விமர்சனம் உண்டு. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் கடந்த சுமார் ஆறு ஆண்டுகளிலும் பொங்குதமிழை ஒத்த ஒரு பேரரங்க நிகழ்வை பல்கலைக் கழகத்தை மையமாகக் கொண்டு உருவாக்க முடியாமல் போயிற்று. ஒரு செயற்பாட்டு இயக்கமானது ஆயுதப் போராட்டத்துடன் தொடர்புறுகையில் அதன் தனித்துவம் மிக்க அடிப்படை ஒழுக்கத்தை இழக்காமல் இருப்பது அவசியம். இல்லையென்றால் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்படும் போது அந்த செயற்பாட்டு இயக்கமும் பின்தள்ளப்பட்டுவிடும்.

தமிழ் சிவில் இயக்கங்கள் டேவிட் ஐயாவின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது.

ஆயுதப்போராட்டம் கருக்கொண்ட அதே தசாப்தகாலப்பகுதியில் உருவாகிய ஒரு மகத்தான செயற்பாட்டியக்கம் இடையிலேயே தடைசெய்யப்பட்டடு விட்டது. இப்பொழுது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளான பின்னரும் அப்படியொரு செயற்பாட்டியக்கத்தை கட்டியெழுப்ப முடியவில்லை. ஜனவரி எட்டுக்குப் பின் அதிகரித்து வரும் தமிழ் சிவில் வெளியை வெற்றிகரமாகக் கையாளத்தக்க செயற்பட்டியக்கங்கள் எதையும் அரங்கில் காணமுடியவில்லை. தமிழ்மக்கள் செயலுக்குப் போகாமல் கூடுதலாகக் கதைத்துக் கொண்டிருக்கிறார்களா? இறந்தகாலத்திலிருந்து எதையுமே விரைவாகக் கற்றுத்தேற மாட்டார்களா?


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com