Sunday, October 18, 2015

அக்னி ஏவுகணையை ஏவுவதற்கு முன்னர், அதை நிறுத்த அப்துல் கலாமுக்கு அதிகாலை 3 மணிக்கு வந்த அவசர போன் அழைப்பு !

அக்னி ஏவுகணையை ஏவுவதற்கு முன்னர், அதை தடுத்து நிறுத்த அதிகாலை 3 மணிக்கு முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை மனிதருமான அப்துல் கலாமுக்கு வந்த அவசர போன் அழைப்பைப் பற்றிய அரிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, அமரர் அப்துல் கலாம் எழுதி விரைவில் வெளியாகவுள்ள ’சவால் முதல் வாய்ப்புவரை: இந்தியாவின் சிறப்பம்சம்’ ("Advantage India: FromChallenge to Opportunity") என்ற நூலில் அவர் ஒரு நிகழ்வை பதிவு செய்துள்ளார்.

அதில் அப்துல் கலாம் தெரிவித்துள்ளதாவது:-

22-5-1989 அன்று அக்னி ஏவுகணையை விண்ணில் ஏவுவதற்கு நாள் நிர்ணயிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம், சண்டிப்பூரில் உள்ள ஏவுகணை பரிசோதனை முகாமில் நானும் மற்றவர்களும் முன்நாள் நள்ளிரவில் இருந்தே அதற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தோம்.
அப்போது அதிகாலை 3 மணியளவில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த நேரத்தில் வருவது சாதாரண அழைப்பாக இருக்க முடியாது என்பது எனக்கு புலனானது.

எதிர்முனையில், அந்நாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மந்திரிசபை செயலாளரான டி.என். சேஷன் (பின்நாளில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர்) பேசினார். அக்னியை ஏவும் திட்டத்தில் நாம் எவ்வளவு தூரத்தில் உள்ளோம்? என அவர் கேட்டார்.

என்னுடைய பதிலுக்காக காத்திருக்காமல் தொடர்ந்து பேசிய சேஷன், இந்த ஏவுகணை பரிசோதனையை தாமதப்படுத்துமாறு அமெரிக்கா மற்றும் பன்னாட்டு ராணுவமான ‘நேட்டோ’விடம் இருந்து நமக்கு (இந்தியா) ஏகப்பட்ட நெருக்கடிகள் வந்துகொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக, ராஜாங்க ரீதியாக ஏகப்பட்ட காய்நகர்த்தல்கள் நடைபெற்று வருகிறது’ என்றார். அக்னியை ஏவும் திட்டத்தில் நாம் எவ்வளவு தூரத்தில் உள்ளோம்?’ என மீண்டும் கேட்டார்.

அடுத்த சில வினாடிகளில் எனது சிந்தனை பல்வேறு நீள,அகலங்களை அகழத் தொடங்கியது. பல விஷயங்களை நான் கணக்கிட்டுப் பார்த்தேன்.

இந்தியாவை குறிவைத்து அமெரிக்கா ஏவுகணைகளை தயார்படுத்தி வருவதாக நமக்கு உளவுத்தகவல்கள் வந்திருந்தன. எனவே, நமது அக்னி ஏவுகணை பரிசோதனையை தாமதப்படுத்தும்படி பிரதமர் ராஜீவ் காந்ந்திக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் அளிக்கப்பட்டு வந்ததையும் நான் அறிந்திருந்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு மோசமான தகவலாக.., அடுத்த ஓரிரு நாட்களில் சண்டிப்பூர் பகுதியை புயல் தாக்கும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையும் வெளியாகி இருந்தது.

அதேவேளையில், மற்றொரு புறத்தில் இந்த அக்னி ஏவுகணை திட்டத்தை செயல்படுத்த சுமார் பத்தாண்டுகளாக அர்ப்பணிப்பு உணர்வுடன், ஓயாமல், கடுமையாக உழைத்துவரும் இந்த குழுவில் உள்ள ஆண், பெண் நிபுனர்களைப் பற்றியும் ஒருபுறம் எண்ணிப் பார்த்தேன்.

இவர்கள் அனைவரும் பல்வேறு இடையூறுகளை கடந்து இந்த அளவுக்கு அக்னி ஏவுகணை திட்டத்தை முன்னெடுத்து வந்துள்ளனர்.

தொழில்நுட்ப உதவிகள் பற்றாக்குறை, நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை, இதற்கு முன்னர் போதிய தொழில்நுட்ப உபகரணங்கள் கிடைக்காததால் இதைப்போன்ற பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது தொடர்பான முந்தைய கசப்பான அனுபவங்கள், இவை தொடர்பான ஊடகங்களின் சாடல் விமர்சனங்கள் ஆகியவற்றுக்கு இடையிலும் அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக உருவாக்கி, பரிசோதனையையும் நடத்திவிட வேண்டும் என்பதில் இவர்கள் வெகு தீவிரமாக பணியாற்றியுள்ளனர்.

இவற்றை எல்லாம் சில நொடிகளில் எனது மனக்கண்ணில் ஓடவிட்டு, சிந்தித்துப் பார்த்த நான், எனது குரலை சீர்படுத்திக் கொண்டு, சேஷனிடம் பேசினேன்.

‘சார், இந்த அக்னி ஏவுகணை திட்டம் பின்நோக்கி திரும்பி வரமுடியாத கட்டத்தை கடந்துவிட்டது. இதை பரிசோதிப்பதில் இருந்து பின்வாங்கவே முடியாது. அதற்கான காலம் கடந்து விட்டது’ என நான் தீர்மானத்துடன் தெரிவித்தேன்.

இதுதொடர்பாக, பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சேஷனிடம் இருந்து கேள்விகள் எழலாம், பெரிய வாக்குவாதத்தில் நாம் ஈடுபட வேண்டி இருக்கும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால், அதற்குள் அதிகாலை நான்கு மணி நெருங்கி விட்டது. கிழக்கு வானம் மெல்ல,மெல்ல வெளுக்கத் தொடங்கியது.

பின்னர், ’சரி’ என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்த டி.என்.சேஷன், நீண்ட பெருமூச்சு மற்றும் சில வினாடி மவுனத்துக்குப் பின்னர், ’நடத்துங்கள்’ என்று தெரிவித்தார். அடுத்த சில மணிநேரத்தில் அக்னி ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இந்த பிரபஞ்சத்தில் எந்த சக்தியாலுமே தடுத்து நிறுத்த முடியாத இளைய விஞ்ஞானிகளின் நம்பிக்கை மற்றும் உத்வேகத்துக்கு கிடைத்த வெற்றியாக அக்னி ஏவுகணையின் அந்த குறிதப்பாத பரிசோதனை அமைந்திருந்தது. அந்த வெற்றியின் மூலம் ஒரு வரலாற்றை நாம் உருவாக்கினோம்.

அதற்கு அடுத்தநாள், சண்டிப்பூரை தாக்கிய புயலால் அங்குள்ள நமது ஏவுகணை பரிசோதனை தளத்தின் ஒருபகுதி நாசமடைந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே அக்னி பந்தயத்தில் நாங்கள் வென்று விட்டோம்.

இவ்வாறு அந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தேசபக்தி, இந்தியாவை உலகின் மிகப்பெரிய வல்லரசாக உருவாக்க வேண்டும் என்ற உத்வேகம் போன்ற உயரிய அருங்குணங்கள் ஒருங்கே அமையப்பெற்ற அமரர், ”பாரதரத்னா” அப்துல் கலாம் எழுதிய கடைசி நூல் இது என்பது, குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com