மாவையின் பாராளுமன்ற உரை (22-10-2015) சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கு ஊக்கமளிப்பது. வி.சிவலிங்கம்
மாவையின் பாராளுமன்ற உரை - கண்டிக்கத்தக்கது. - - பிற்போக்குத்தனமானது. - - சந்தர்ப்பவாத அரசியல் நோக்கம் கொண்டது. - - சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கு ஊக்கமளிப்பது.
சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் ஜெனீவா தீர்மானம் தொடர்பான விவாதம் இடம்பெற்றிருந்தது. இவ் விவாதத்தின் போது தமிழர் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவரும் தமிழரசுக் கட்சியின் செயலாளருமான மாவை அவர்கள் ஆற்றிய உரை பல சந்தேகங்களை உருவாக்கி உள்ளது. பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பதற்கான முயற்சியில் கட்சியின் தலைமை ஈடுபட்டுள்ள அதேவேளை பிரிவினைக் கருத்துக்களை மீண்டும் அவர் வற்புறுத்துவது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.
கடந்த வியாழக்கிழமை ( 22-10-2015) பாராளுமன்றத்தில் ஐ நா சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானம் தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச உறுப்பினர்களை இணைப்பது தொடர்பான விவாதம் மிகவும் காரசாரமாக இடமபெற்றது. இவ் விவாதங்களின் போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச அவர்கள் சர்வதேச தலையீட்டை வன்மையாக கண்டித்து உரையாற்றினார். அவரின் உரையின்போது சிங்கள மக்களின் அடையாளத்தினையும், அரசின் இறைமையையும் பாதுகாப்பதற்கு சகல சிங்கள மக்களும் இணைய வேண்டும் என அறைகூவல் விடுத்தார். மிகவும் இனவாத கருத்துக்கள் செறிந்த அவரது உரையை ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர எவரும் ஆதரிக்கவில்லை. இவ்வாறான மிகவும் பிற்போக்குத்தனமான பெருந்தேசியவாத வெறித்தனமான அரசியலை மக்கள் கடந்த ஆகஸ்ட் 17ம் திகதிய பொதுத் தேர்தலின்போது நிராகரித்திருந்தனர். சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்ட சிங்கள பௌத்த தீவிரவாத சக்திகள் பாராளுமன்றத்திலும் பலம் குறைந்த நிலையில் தமது அரசியலைத் தக்க வைக்க இவ் அரசியலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இவை மாவை சேனாதிராஜா அவர்களுக்கு இவை தெரியாத சங்கதிகள் அல்ல. ஆனால் இவ் விவாதத்தின் பொது அவர் பதிலளித்த விதம் தமிழரசுக்கட்சி, கூட்டமைப்பின் அரசியலின் முதிர்ச்சி தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை அரசு தர மறுக்கும் பட்சத்தில் சர்வதேச அரசுகளின் உதவியுடன் தனியான அரசை நிறுவ தாம் நிர்ப்பந்திக்கப்படுவோம் என எச்சரித்திருப்பது அரசிற்கும் கூட்டமைப்பிற்குமிடையேயான பேச்சுவார்த்தைகளின் உள் நோக்கம் குறித்த சந்தேகங்களை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. தமிழீழக் கோரிக்கைiயை தாம் ஏற்கவில்லை எனவும், பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கத்தின் அடிப்படையிலான தீர்வை நோக்கி அரசுடன் பேசுவதாகவும் கூறிவரும் தமிழரசுக் கட்சியும், கூட்டமைப்பும் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்து கொண்டுள்ள அடிப்படைகளில் தற்போது கேள்வி எழுந்துள்ளது.
ஐக்கிய இலங்கைக்குள்ளான தீர்வு என்பது ஓர் தற்காலிக, சந்தர்ப்பவாத நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டதா? பிரிவினைக் கோரிக்கை என்பது நிரந்தரமாக கைவிடப்பட்டதா? அல்லது தற்காலிக முடிவா? தேசிய இனப் பிரச்சனைக்கான முயற்சிகள் சர்வதேச உதவிகளுடன் எடுக்கப்பட்டு வரும் இவ் வேளையில் மாவையின் கருத்துக்கள் சிங்கள பௌத்த தேசியவாதிகளை உற்சாகப்படுத்தி நிலமைகளைச் சீரழிக்க எடுத்த முடிவா? இம் முடிவின் பின்னால் செயற்படும் சக்திகள் யார்? இவ் விவாதத்தின் போது ஐ நா சபை மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தினையும் அவர் கண்டித்திருப்பது மேலும் சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது. மனித உரிமை ஆணக்குழவின் தீர்மானத்தினை வடிவமைப்பதில் அமெரிக்காவும், இலங்கையும் ஈடுபட்டிருந்தபோது கூட்டமைப்புடனும் சம காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இவற்றில் சுமந்திரன் அவர்கள் ஈடுபட்டிருந்தார். அவ்வாறானால் தீர்மானத்தில் கூட்டமைப்பின் சம்மதமும் பெறப்பட்டதாகவே நாம் கொள்ள முடியும்.
இந்த விவாதங்களின் போது கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்கள் உரையாற்றும் போது உண்மை, நீதி, வந்தி செலுத்துதல், மீள எழாமல் தடுத்தல் என்ற தீர்மானத்தின் வார்த்தைப் பிரயோகங்களின் உள்ளார்ந்த அர்த்தங்கள் உண்மையான நல்லிணக்க முயற்சிகளில் வெளிப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டதோடு, பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறினார். அதாவது பாராளுமன்றத்தில் நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதை அவர் தெரிவித்த அதேவேளை மிகவும் குறைந்த தொகையிலுள்ள விமல் வீரவன்ஸ போன்றோரின் கருத்துக்களுக்கு மாவை அவர்கள் இவ்வாறு பதிலளித்தமைக்கான காரணம் என்ன? தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்த அரசு முயற்சிக்க வேண்டுமென சம்பந்தன் அரசைக் கேட்டிருந்தார். அவ்வாறானால் மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தினை கட்சியின் முக்கிய தலைவரான சம்பந்தன் அவர்கள் ஆதரித்துள்ளதாகவே நாம் கொள்ள வேண்டும். இந் நிலையில் மாவை அதனை எதிர்த்துப் பேசியதன் நோக்கமென்ன?
கட்சிக்குள் மிக மோசமான பிளவுகள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. கட்சியின் ஒரு சாரார் அக் கட்சியின் புதிய அணுகுமுறையை முழமையாக ஏற்கவில்லை என்பது தெளிவாகிறது. ஒரு புறத்தில் வட மாகாண முதல்வர் கூட்டமைப்பிற்கு எதிராக பேசி வருகிறார். இன்னொரு புறத்தில் மாவை பேசுகிறார். கட்சி கட்டுப்பாட்டை இழந்து விட்டது. ஆளுக்ககொருவராக, ஆளுக்ககொரு கொள்கையை, ஆளுக்கொரு கோணத்தில் வலியுறுத்துகிறார்கள். தமிழரசுக் கட்சி, தமிழர் கூட்டமைப்பு என்பன மிகவும் செயலிழந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. புதிய அரசியல் நிலமைகளுக்கு ஏற்ப தமது அணுகுமுறைகளை மாற்றும் சக்தியை இக் கட்சி இழந்து விட்டது. இதனால் இன்னொரு முள்ளிவாய்க்கால் ஆபத்து காத்திருக்கிறது. கூட்டமைப்பின் இத்தகையை மோசமான அரசியலைத் தட்டிக் கேட்க தமிழ்ப் பிரதேசங்களில் வலுவான கட்சியோ அல்லது சமூக இயக்கங்களோ இல்லாதது மேலும் பல ஆபத்துகளை ஏற்படுத்தப்போகிறது. மாவை போன்றவர்களின் தலைமை குறித்த பல கேள்விகள் எழுகின்றன. கட்சி எடு;த்துள்ள முடிவுகளை அக் கட்சியின் முக்கியஸ்தர்களே ஏற்றுக் கொள்ளாத நிலையில் இத் தீர்மானங்களை யார் எடுத்தார்கள்? இந்த சக்திகள் யார்? தற்போதைய நல்லிணக்க சூழலை குலைக்க பின்னணியில் செயற்படும் சக்திகள் யார்?
இவ் விவாதங்களின் போது ஜே வி பி இன் தலைவர் அனுரா குமார திஸாநாயக்கா அவர்கள் கூட்டமைப்பினரை நோக்கி எமது மக்கள் எதிர்நோக்கியுள்ள இச் சிக்கல்களைத் தீர்க்க இந்தியாவை அல்லது சர்வதேச சமூகத்தை நோக்கி ஓட வேண்டாமென வேண்டுகோள் விடுத்தார். இக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சம்பந்தன் அவர்கள் பண்டா – செல்வா ஒப்பந்தம் புதுடெல்கியில் ஏற்படவில்லை எனவும், அதே போல டட்லி- செல்வா ஒப்பந்தம் அமெரிக்காவில் ஏற்படவில்லை எனவும் கூறி அவை கிழித்ததெறியப்பட்டதற்கான காரணங்களை விளக்கினார். இவ் விவாதத்தில் சம்பந்தன் அவர்கள் பிரச்சனைக்கான தீர்வு உள்நாட்டில் காணப்படவேண்டுமென்பதை வெளிப்படுத்தியதோடு சர்வதேச உதவி தேவைப்படாது என்பதையும் மறைமுகமாக கோடிட்டிருந்தார். கட்சியின் தலைவரின் உரை மிகவும் காத்திரமானதாகவும், சிங்கள மக்கள் நம்பிக்கை கொள்வதற்குமான முயற்சியில் இறங்கும் போது சர்வதேச உதவியுடன் தனிநாடு காணப்போவதாக மாவை கூறுவது நிலமைகளை மிக மோசமாக்க உதவுகிறது.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இவ் விவாதங்களை உற்று நோக்கும்போது பிரச்சனைகள் பேசித் தீர்க்கப்படுவதை இழுத்தடிப்பதற்கான முயற்சிகள் தற்போது தமிழ்ப் பகுதிகளில் ஆரம்பித்திருப்பதை காணக்கூயதாக உள்ளது. கட்சிகளின் முக்கியமான பதவிகளில் இருப்பவர்களின் மத்தியிலே காணப்படும் முரண்பாடுகள் மிக மோசமான விளைவுகளை நோக்கித் தள்ளப் போகின்றன. சிங்கள பௌத்த தீவிரவாத சக்திகள் தம்மால் முடிந்த அளவிற்கு இனவாத விஷங்களை வெளிப்படுத்துவதன் மூலம் தமிழ் இனவாத சக்திகளை தூண்ட முயற்சிக்கின்றன. இதனால் பதில் இனவாத அரசியலில் தம்மை வளர்த்தவர்கள் புதிய இணக்க அரசியலின் தாற்பரியங்களைப் புரிந்து கொள்ளச் சக்தியற்ற நிலையில் உள்ளனர். இவர்கள் தலைமைப் பீடங்களிலிருந்து வெளியேறி புதிய நிலமைகளுக்கு ஏற்ற புதிய தலைமுறையினருக்கு வழிவிடுவதே சாலச் சிறந்தது.
இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் தற்போது பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. உலக நாடுகளின் சட்ட திட்டங்கள் யாவும் ஓர் பொதுவான கட்டமைப்பிற்குள் செல்வதை நாம் அவதானிக்கலாம். அரசின் இறைமை அதிகாரம் என்பது புதிய வியாக்கியானங்களுக்குள் செல்கிறது. தமிழ் இறைமை, சிங்கள இறைமை என்பது காலாவதியாகியுள்ள கோட்பாடுகளாகும். இதிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் விமல் வீரவன்ச போன்றோர் மாவை போன்றோருக்கு பிரதான அரசியல் எதிரிகளாக தோற்றப்படலாம். அதேவேளை பெருந்தொகையான சிங்கள உறுப்பினர்களின் ஆதரவு அவரது கவனத்திற்குச் செல்லவில்லை. இது மிகவும் ஆச்சரியமானது. நிலமைகள் வெகுதூரம் சென்றுவிட்டன. மக்கள் இம் மாற்றங்களைப் புரிந்து கொள்ளாதவரை இரண்டாவது முள்ளிவாய்க்காலும் தவிர்க்க முடியாதது.
0 comments :
Post a Comment