Sunday, August 30, 2015

ISIS இன் அட்டூழியங்களும், அமெரிக்காவின் சமூகப்படுகொலை போர்களும். Bill Van Auken

செவ்வாயன்று சமூக வலைத் தளங்களில் பதியப்பட்ட படங்கள், சிரியாவின் பால்ம்ரா நகரிலுள்ள 2,000 ஆண்டு பழமையான பால் ஷாமின் கோயில் ISIS ஆல் (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசால்) சிதைக்கப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. ISIS போராளிகள் அந்த பழமையான கட்டிடமெங்கிலும் வெடிமருந்துகளை வைத்து, பின்னர் அவற்றை வெடிக்க செய்வதை அப்படங்கள் எடுத்துக்காட்டுகின்றன, அக்கோயில் வெறும் இடிபாடுகளாக ஆக்கப்படுகிறது.

பண்டைய உலகின் மிக முக்கிய கலாச்சார மையங்களில் ஒன்றும், கிரேக்க-ரோமானிய எஞ்சிய இருப்புகளில் பாதுகாக்கப்பட்டு வந்த சிறந்த ஒன்றுமான அவ்விடத்தை மனம்போனபோக்கில் இடிப்பதற்கு, ஒரு வாரத்திற்கு முன்னதாக பேராசிரியர் கஹலெத் அசாத் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்டார். பால்ம்ராவில் எஞ்சியிருந்தவற்றை அகழ்வதிலும், மீளமைப்பதிலும் பங்கு வகித்து வந்த 82 வயதான சிரியாவின் அந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர், அங்கே சுமார் அரை நூற்றாண்டுகளாக தொல்பொருள்துறை தலைவராக இருந்து வந்தவராவார். அவ்விடத்தைச் சூறையாடுவதில் ISISக்கு அவர் உதவ மறுத்தமைக்காக அவரைக் கழுத்தறுத்து கொன்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும் கல்வித்துறை அமைப்பான யுனெஸ்கோ, அந்த அட்டூழியங்களை "போர் குற்றங்களென" நியாயப்படுத்தக்கூடிய வகையில் கண்டித்ததுடன், “அதற்கு பொறுப்பான குற்றவாளிகள் அவர்களது நடவடிக்கைக்காக கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும்" என்பதையும் சேர்த்துக் கொண்டது.

அந்த நடவடிக்கைக்கும் மற்றும் சிரிய மக்களுக்கு எதிராக மிக இரத்தந்தோய்ந்த அட்டூழியங்களுக்கும் பொறுப்பான குற்றவாளிகள், கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும் என்பது கேள்விக்கிடமற்றது. ஆனால் வெள்ளை மாளிகை, பெண்டகன் மற்றும் சிஐஏ இன் முன்னாள் மற்றும் இப்போதைய தலைமை அதிகாரிகள் தான் அதற்கான பிரதான பொறுப்பாளிகள் என்ற உண்மையே அவர்களை நீதியின் முன் கொண்டு வருவதற்கு தடையாகி விடுகிறது.

மதசார்பற்ற அரபு அரசாங்கங்களுக்கு எதிராக அவர்களது தொடர்ச்சியான ஆட்சி-மாற்ற நடவடிக்கைகளுக்காக, ISIS உள்ளடங்கிய இஸ்லாமிய சக்திகளுடன் இயங்கி கொண்டே, மத்திய கிழக்கில் அவர்கள் தான் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டை வீணடித்தார்கள்.

ஒரு கலாச்சார பாரம்பரியத்தை ISIS திட்டமிட்டு அழித்தமை, 1975 இல் தொடங்கி 1979 வரையில் கம்போடியாவில் பொல் பொட் ஆட்சி (Pol Pot) மற்றும் கெஹ்மர் றூஜ்ஜின் குற்றங்களில் ஒரு வரலாற்று முன்னுதாரணத்தைக் கொண்டுள்ளது. அந்த ஆட்சி அந்நாட்டின் கலாச்சார பாரம்பரியங்களை அழிக்க துணிந்தபோது, அது மக்களுக்கு எதிராக பாரிய படுகொலைகள் மற்றும் பயங்கரவாத ஆட்சியை நடத்தி கொண்டிருந்தது.

ISIS மற்றும் கெஹ்மர் றூஜ்க்கு இடையிலான பொருத்தங்கள் கலாச்சாரம் மற்றும் மனிதர்கள் மீதான அவற்றின் காட்டுமிராண்டித்தன தாக்குதல்களோடு முடிந்துவிடவில்லை. இரண்டு விடயங்களிலுமே இத்தகைய அட்டூழியங்களுக்கான முன்நிபந்தனைகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஒட்டுமொத்த சமூகங்களைச் சீரழித்ததன் மூலமாக உருவாக்கப்பட்டிருந்தன.
கம்போடியாவில், அமெரிக்க குண்டுவீச்சு நடவடிக்கை நான்காண்டுகளில் அந்நாட்டின் மீது சுமார் 532,000 டன் வெடிகுண்டுகளை வீசியது — இது இரண்டாம் உலக போர் முழுவதிலும் ஜப்பான் மீது வீசப்பட்ட டன் கணக்கிலான குண்டுவீச்சை விட மூன்று மடங்கு அதிகமாகும். அதன் விளைவாக ஏற்பட்ட மரண எண்ணிக்கை அதிகபட்சம் 600,000 ஆக மதிப்பிடப்படுகிறது, அதேவேளையில் 7 மில்லியன் மக்கள்தொகையில் 2 மில்லியன் பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டு, அவர்களது பொருளாதார வாழ்க்கை சிதைக்கப்பட்டது.

சிரியா மற்றும் ஈராக் எங்கிலும் இப்போது ஓடும் இரத்தஆறும் மற்றும் ISIS உம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாகமாக நடத்தப்பட்ட அதேபோன்ற சமூகப்படுகொலை நடவடிக்கைகளின் நேரடி விளைபொருள்களாகும். ஈராக்கில், சட்டவிரோத 2003 அமெரிக்க படையெடுப்பும், அதை தொடர்ந்த ஆக்கிரமிப்பும் மற்றும் அரபு உலகிலேயே மிக நவீன சுகாதார மற்றும் சமூக உள்கட்டமைப்புகளில் ஒன்றாக விளங்கிய அந்நாட்டைத் படிப்படியாக அழித்தமையும், 1 மில்லியனுக்கும் அதிகமான ஈராக்கியர்களின் உயிர்களைப் பறித்ததுடன், கூடுதலாக 5 மில்லியன் பேரை அகதிகளாக்கியது. பென்டகனால் பின்பற்றப்பட்ட பிரித்தாளும் மூலோபாயம், ஈராக்கின் ஷியா மற்றும் சுன்னி மக்களிடையே வேண்டுமென்றே பதட்டங்களை தூண்டிவிட்டு, ஒரு வகுப்புவாத உள்நாட்டு போரை மூட்டியது.

இக்கொள்கையின் துணைவிளைவுகள் தான், அதிகரித்தளவில் பேரழிவுகரமான விளைவுகளோடு, அப்போதிருந்து நீண்டகாலமாக, தேசிய எல்லைகளைக் கடந்து பரவியுள்ளது, இவையனைத்தும் எண்ணெய்வளம் மிகுந்த மத்தியகிழக்கு மற்றும் மத்திய ஆசியா மீது மேலாதிக்கம் செலுத்தும் அதன் குறிக்கோளை முன்னெடுக்க வாஷிங்டன், இராணுவவாதத்தில் புகலிடம் தேடியதால் உந்தப்பட்டதாகும்.

சோவியத்-ஆதரவிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக ஆட்சி மாற்ற போரை சிஐஏ முடுக்கிவிட்டதிலிருந்து தொடங்கி, இதுவரையில், அமெரிக்கா 35 ஆண்டுகளுக்கும் மேலாக போர்களில் ஈடுபட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் அதுவே ஒசாமா பின் லேடன் மற்றும் அல் கொய்தாவின் ஏனைய ஸ்தாபகர்கள் உட்பட இஸ்லாமிய சக்திகளுடன் பிணைந்திருந்தது.

டிசம்பர் 2011 இல் ஈராக்கிலிருந்து கடைசி அமெரிக்க துருப்புகள் திரும்பப்பெறப்படுவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னர், வாஷிங்டனும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் லிபியாவில் மௌம்மர் கடாபியின் அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் மற்றும் எண்ணெய் வளம்மிக்க அந்த வட ஆபிரிக்க நாட்டின் மீது அவர்களது சொந்த கைப்பாவை ஆட்சியை நிறுவுவதற்கும் தூண்டுதலற்ற மற்றொரு ஆக்கிரமிப்பு போரைத் தொடங்கினர். லிபிய அரசை சீரழித்தமை மற்றும் கடாபியின் படுகொலை அந்நாட்டை குழப்பத்தில் மூழ்கடித்ததுடன், இதுநாள் வரையில் அங்கே இரத்தஆறு ஓடுகிறது. லிபிய போரில், கைப்பற்றப்பட்ட டன் கணக்கான லிபிய ஆயுதங்களோடு சேர்ந்து, இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் அமெரிக்க பினாமிகளாக பயன்படுத்தப்பட்டனர், அதற்கடுத்து அது — சிஐஏ உதவியுடன் — சிரியாவின் உள்நாட்டு போருக்குள் நீண்டது, இது ISIS ஐ பலப்படுத்தியதுடன் ஈராக்கின் மூன்று மடங்கிற்கும் அதிகமான பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு நிலைமைகளை உருவாக்கியது.

முடிவில்லா "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில், ஈராக்கின் சுன்னி மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் வாஷிங்டன் ISIS க்கு எதிராக ஷியா அடித்தளத்தைக் கொண்ட பாக்தாத் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து மற்றொரு இராணுவ நடவடிக்கையை நடத்தி வருகிறது, அதேவேளையில் துருக்கி, சவூதி அரேபியா மற்றும் இதர சுன்னி வளைகுடா முடியாட்சிகளின் கூட்டணியுடன் சிரியாவில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்ற போதினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் போரில் "மிதவாத" சுன்னி இஸ்லாமியர்களையும் அதன் பினாமிகளாக பயன்படுத்தலாமென அவர்களைக் காண முயன்று வருகிறது.

நியூ யோர்க் டைம்ஸ் செவ்வாயன்று பிரசுரித்த ஒரு நீண்ட கட்டுரையில், அல் கொய்தாவுடன் பல்வேறு தொடர்புகளைக் கொண்ட ஒரு சுன்னி இஸ்லாமிய போராளிகள் குழுவான அஹ்ரர் அல்-ஷமாம் க்கு அமெரிக்கா மிக நேரடியாக உதவி வழங்கலாமா என்பதன் மீது ஒபாமா நிர்வாகத்திற்குள் ஓர் உள்விவாதம் நடந்துவருவதை எடுத்துக்காட்டியது. இக்குழு ஏற்கனவே முக்கிய அமெரிக்க கூட்டாளிகளான துருக்கி மற்றும் கட்டாரிடமிருந்து பெருகிய ஆதரவைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தசாப்தகால அமெரிக்க போர்களின் பயங்கர விளைவுகள் இப்போது ஐரோப்பாவிற்குள் பரவி வருகின்றன. அதிகரித்தளவில் நூறு ஆயிரக் கணக்கான அகதிகள் மோசமான நிலையில், வாஷிங்டன் கொலைக்களமாக மாற்றிவிட்ட அவர்களது தாய்நாட்டை விட்டு — பலர் அவர்களின் உயிரையே பணயம் வைத்து — வெளியேறி வருகிறார்கள்.

அவர்கள் தொடங்கிய இந்த பல்வேறு ஆக்கிரமிப்பு போர்களால் விளைந்த இந்த சகல குற்றங்களுக்கும், அட்டூழியங்கள் மற்றும் மனிதயின அவலங்களுக்கும் மொத்தமாக, அரசியல்ரீதியிலும் தார்மீகரீதியிலும், அமெரிக்க அரசாங்கமும் புஷ் மற்றும் ஒபாமாவில் தொடங்கி அதன் உயர்மட்ட நிர்வாகிகளுமே பொறுப்பாகிறார்கள்.

அவர்களில் யாருமே கணக்கில் கொண்டு வரப்படவில்லை. பெருநிறுவன பில்லியனர்களின் ஒரு செல்வந்த அடுக்கைப் பாதுகாப்பவர்களும் மற்றும் அவர்களது பிரதிநிதிகளும் தற்போதைய அரசியல் அமைப்பின் கீழ், அமெரிக்க மக்களுக்கு — இவர்களது போர் எதிர்ப்பை வழமையாக மட்டுப்படுத்திவிடும் அவர்கள் — பதில் கூறக் கூடியவர்களாக இல்லை.

இந்த போர் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வந்து, அடுத்தடுத்த போர்களையும் மற்றும் அதிகரித்துவரும் ஒரு புதிய உலக போர் அச்சுறுத்தலையும் முடிவுக்குக் கொண்டு வரும் பணியைத் தொழிலாள வர்க்கம் தாங்கியுள்ளது. அது முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதற்கான ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்ட, ஒரு பாரிய சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தில் அதன் சுயாதீனமான பலத்தை ஒன்றுதிரட்ட வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com