Monday, August 3, 2015

மோசடி அரசியல் . - சுகு-ஸ்ரீதரன்

நெஞ்சு பொறுக்குதில்லையே- பாரதி

சாதாரண வறிய இளைஞர்களை ஐரோப்பாவிற்கும்- வட அமெரிக்காவிற்கும் அனுப்புவதாக அல்லது மத்திய கிழக்கில் சிறந்த வேலை வாய்ப்பை உருவாக்கித்தருவதாக வறிய பெண்களை ஏமாற்றும் முகவர்களைப் போலத்தான,; TNA MPS

“தவித்த முயல் அடித்த” கணக்காக பணம் கறப்பதற்காக இவர்கள் இதனைச் செய்கிறார்கள். ஒருவிதத்தில் இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மோசடி அரசியலும் இந்த வகைப்பட்டதே. இது ஒன்றும் மிகையல்ல.

“பிரிவினையை ஆதரிக்க மாட்டோம்”; என்று வழமையாக சத்தியப்பிரமாணம் செய்யும் இவர்கள், 13 வதை குப்பைக் கூடையில் போடவேண்டும் , அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்று கூறும் இவர்கள் மாகாணசபைத்தேர்தல்களையோ- உள்ளு}ராட்சி மன்றத்தேர்தல்களையோ கைவிடவில்லை.

தமிழ் மக்களை ஏமாற்றுவது- மோசடி செய்வதோடு ,தமிழ் மக்களின் அரசியல் தமது தனிப்பட்ட உரிமை என்று இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆணவம் பிடித்த கனவான்கள் கருதுகிறார்கள். அதற்கேற்றபடியே தமிழ்மக்களும் செயற்படுகிறார்கள் -நடந்து கொள்கிறார்கள்.

13 வது மற்றும் சில உரிமைகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது, தமிழ் மக்களின் பிரச்சனைகள் உலகறியச் செய்யப் பட்டிருக்கிறது என்றால் அது பல்வேறு தரப்பு இளைஞர் யுவதிகளின் தியாகத்தால் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களால், இந்தியாவின் தயவால் நிகழ்ந்தது.

அது ஒன்றும் சம்பந்தன் விக்கினேஸ்வரன் வகையறாக்கள் நிகழ்த்திய மந்திரவித்தைகளால் அல்ல. இரண்டு தலைமுறைகளின் போராட்டத்தின் பலாபலன்களை இந்த கனவான்களும் அவர்களின் பரிவாரங்களும் அறுவடை செய்திருக்கிறார்கள்.

தமிழ் மக்களும் இந்த மோசடிப்பேர்வழிகளிடமே தமது தலைவிதியை ஒப்புவித்திருக்கிறார்கள். யாழ்மையவாத சமூக? சிந்தனைக்கு நன்றியற்ற இயல்பொன்றுண்டு . அது இறந்தவர்கள் தியாகம் செய்தவர்களைப்பற்றி வாய்ப்பந்தல் போடும். ஆனால் தனது தலைவர்களாக திருடர்களையும் போலிக் கனவான்களையே அனேகமாக ஏற்றுக் கொள்ளும்.

புலம்பெயர் கனவான் நிறுவனங்கள் வரிசையாக இறந்தவர்களின் படத்தைப்போட்டு தமது ஊடகங்களில் -கருத்தரங்குகளில் -மனித உரிமைக் கூட்டங்களில் கண்ணீர் விடும் . புகழாரம் சூட்டும் . . ஆனால் “காளாஞ்சியை” உள்ளுர் மற்றும் சர்வதேச திருடர்கள் கனவான்களுக்கே வழங்கும்.

அவர்கள் ஒரு சிறு கல்லைக் கூட தூக்கி போட்டிருக்க மாட்டார்கள். எத்தகைய வேறுபாடுகள் முரண்பாடுகள் இருப்பினும் அனைத்து இயக்கங்களில் இருந்து இறந்தவர்கள் அனைவரும் சாமானியர்களின் பிள்ளைகளே. அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.

ஆனால் இவர்களின் பேரில் தலைவர்களாகி இருப்பவர்கள் லண்டனிலும-; ஒட்டேவாவிலும் பவுண்- டொலர் விருந்தில் திளைக்கிறார்கள். இந்த விருந்து கொண்டாட்டங்கள் நடத்துபவர்கள் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வாழும் யாழ்மையவாத கனவான்கள்.

அவர்கள் தேர்தல் மேடையில் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கப்போவதாக , அந்நிய காலனி ஆதிக்க காரரிடமும் ,பேரினவாதிகளிடமும் இழந்த இறையாண்மையை வென்றெடுக்கப்போவதாக எல்லா மேடைகளிலும் முழங்குகிறார்கள்.

பிரபாகரனால் அடித்தளமிட்டு உருவாக்கபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புகாரார்கள் இப்போதெல்லாம் பிரபாகரன் பற்றி மூச்சு விடுவதில்லை. ஆனால் மேடையில் பாசாங்காக எங்கள் தலைவன் பிரபாகரன் என்று வலிப்பு நோய் கண்டவர்கள் போல் யாராவது கத்தும் போது மேடைக்கு முன்னால் இருப்பவர்கள் உருக் கொண்டவர்கள் போல் ஆடுகிறார்கள்.

“புலிகள் இருந்த காலத்தில் ரொறன்ரோ காசு கலெக்சன் - வடம் கழுத்து சங்கிலி வசூல் ராஜாக்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் ஒரு பெண் தலை விரி கோலமாக இங்கு உள்ளுர் கோவில் வேள்விகளில் ஆடுவது போல மேடைக்கு முன்னால் சுழண்டு சுழண்டு ஆடி வருவா. வந்து மேடைக்கு முன்னால் தாலிக் கொடியை கழற்றி எறிவாவாம். அங்கு கூடியிருக்கும் மகாசனங்கள் -ஏமாளிகள் காசை வாரி இறைப்பார்களாம். அருவரி தொப்பிவியபாரி குரங்குகளின்ர கதைபோல.”

வடம் கழுத்து சங்கிலியுடன் காசு கலெக்சன் செய்யும் திருடர்களால்- வசூல் ராஜாக்களால் அரங்கேற்றப்படும் நாடகம் இது. இது ஐரோப்பா- வட அமெரிக்கா எங்கணும் பரவலாக காணப்பட்டது. இந்த திருட்டுக் கூட்டம், வசூல் ராஜாக்கள் புலிகளின் பணத்துடன் உலகம் முழுவதும் இலங்கை உட்பட சகல ஐசுவரியங்களுடனும் இப்போது வாழுகிறது.

ஆனால் புலிகள் உட்பட எல்லா இயக்கங்களிலும் இருந்த பிள்ளைகளின் குடும்பங்கள் தெருவுக்கு வந்ததும் வராத குறையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த திருட்டு கூட்ட வசூல் சக்கரவர்த்திகளின் மொடலில் தான் இங்கு தேர்தல் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

பம்மாத்தாக பாசாங்காக ரிஎன்ஏ மேடைகளில் பிரபாகரனின் பேரைச் சொன்னவுடன் முன்னால் ஐந்தறிவு மந்தை கூட்டம் போல் உட்கார்ந்திருப்பன எழும்பி உருக் கொண்டது போல் ஆடுதுகள். இந்த கபடதாரிகள் இந்த அறியாமையை தமது மூலதனம் ஆக்கியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் மரணித்த போராட்டத்தின் பெறுபேறு மக்களை அருவருக்கும் கபடதாரிகளான கனவான்களின் கையில் தமிழர்களின் தலைவிதி மாட்டுப்பட்டிருக்கிறது.

யாழ்மைய-மத்தியதரவர்க்க மனம் எப்போதும் சேர். பொன் ராமநாதன் பாரம்பரிய அரசியல்தலைமையை நாடுவது. அவர்களைத்தான் கல்வியாளர் எனக்கருதுவது. இவர்கள் கூறும் சுயநிர்ணய உரிமையும் -இறையாண்மை மீட்பும் 2016 இல் இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டிடுவோம் என்பதும் இவர்களின் பாரம்பரியமான ஏமாற்றின் மோசடியின் மறுவார்ப்பே. அடுத்த பொங்கல் தமிழீழத்தில், அடுத்த மேதினம் தமிழீழத்தி என்பதுபோல.

விதிவிலக்கானவர்கள் சிலர் இருக்கலாம்.

குறிப்பாக 1976 வட்டுக் கோட்டை மாநில மாநாட்டு பிரகடனத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் சொல்கிறார்கள.; பொய்- பித்தலாட்டம்- போகமுடியாத இடத்திற்கு வழி சொல்கிறார்கள். செப்டெம்பர் ஐ.நா மனித உரிமை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மனித உரிமைக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை ஆழமாக சிந்தித்தால் அதிர்ச்சியான விடைதான் கிடைக்கும்!

இனவாத அடிப்படையிலானதும் ,சகோதரப்படுகொலைக்கானதுமான பாசிச கருத்தியலை இவர்கள் தான் உருவாக்கி கொடுத்தார்கள். இப்போதும் அதன் வழியே தான் செயற்படுகிறார்கள். எனவே ஐ. நா அறிக்கையும் இதன் நதிமூலம் ரிசி மூலத்தையும் உள்ளடக்கவேண்டும்.

பொய்யையும் போகமுடியாத இடத்திற்கு வழி சொல்வதுமான இந்த பாரம்பரியத்தை எல்லாப்பாதையும் ரோமாபுரிக்குகே என்பதுபோல பாராளுமன்றம் புகுவதற்காக பயன்படுத்துகிறார்கள்.

இதுதான் உண்மை

தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கொள்கையற்ற -கபடமும்- -வஞ்சகமும் -குழிபறிப்பும் -களவாணித்தனமும் -அயோக்கியத்தனமும்- சுயநலமும-; மோசடியும் ஏமாற்றுமான ஒரு கதம்ப கூட்டத்தை உலகெங்கும் அவதானிக்கமுடியாது. இதனை தலைமையென ஏற்றிவைத்திருக்கும் தமிழ் சமூகத்தை என்னென்பது

இவர்கள் பேரினவாதத்திற்கு தீனி போட்டு அதனை ஓயாமல் ஊதிப் பெருப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். பேரினவாதத்தை இந்த உணர்ச்சியூட்டும் போதை அரசியல் பேணிப்பாதுகாக்கிறது. டந்த 30 ஆண்டுகளில் லட்சக்கணக்கான மக்களின் மரணங்களுக்கும் இளைஞர் ,பெண்களின் மரணங்களுக்கும் இவர்கள் பொறுப்புச் சொல்லவேண்டும்.

தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மரணித்தவர்களின் தொகையை எண்ணிக்கை கணக்கில் பட்டியிலிட்டுள்ளனர். இவர்களின் ஏமாற்றுமோசடி அரசியல் தான் பேரினவாத அரசியலை பலப்படுத்தியது. தமிழ் பாசிச அரசியலை உருவாக்கியது.

பேரழிவிற்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் பிரதானமாக இவர்களே. இளைய தலைமுறையின் பேரழிவில் தமக்கு சம்பந்தமில்லை, நாம் வன்முறையாளர்கள் இல்லை என கைகழுவி விட்டு இப்போது கனவான்களாக உள்ள+ர் திருடர்களாக அரசியல் செய்ய புறப்பட்டிருக்கிறார்கள்.

காலாகாலத்திற்கு “வாராது வந்துற்ற மாமணிகளாக” இந்த திருடர்களையும் கனவான்களையும் யாழ்மையவாத தமிழ் அரசியல் கண்டு பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் வரலாறு இத்தகைய போக்குகளுக்கு கருணை காட்டுவதில்லை.

இந்த யுத்தமும் அழிவும் நிகழ்ந்த போது அலுங்காமல் நலுங்காமல் தமது கல்வியை மேற் கொண்டவர்கள், எதுவித சமூகப் பிரக்ஞையும் அற்றிருந்தவர்கள் ,கூழைக் கும்பிடு போட்டு கோள் மூட்டிச் சீவித்தவர்கள், நாலாந்தரவழிகளில் பணம் சம்பாதித்தவர்கள் எல்லோரும் இப்போது தமிழர்களின் தலைவர்கள் .

சமூகத்தின் மன நிலை பண்பாட்டு நிலைகளுக்கேற்பவே அவர்களின் தலைவர்களும் இருக்கிறார்கள். மூகத்தின் நேர்மையல்ல இவர்களை தலைவர்களாக உருவாக்குவது. யாழ்மையவாத சமூகத்தில் நிலவும் களவாணித்தனம் தான் இவர்களை தலைவர்களாக உருவாக்குகிறது.

இன்று சகல விதமான நுகர்வுகலாச்சாரத்திற்கும் ஆட்பட்டிருப்பவர்கள் வாய்திறக்கமுடியாத எமது பிரதேசங்களுக்கு சுதந்திரமாக செல்லமுடியாத அன்றாடம் படுகொலைகள் பேரழிவு நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தை “அது ஒரு காலம் அழகிய காலம்” என்கிறார்கள்.

இந்த வேசதாரித்தனத்தை என்னவென்பது. தமது மனச்சாட்சியின் படியா இவர்கள் பேசுகிறார்கள்? இப்போதிருக்கும் ஜனநாயக இடைவெளி- அறத்தை நிலைநாட்டுவதற்கு உதவா விட்டால் பொய்யும் மோசடியும் கோலோச்சுமானால் அதனை மறுதலித்த இந்த போவழிகள் மீது கருணையற்ற இன்னொரு வரலாறு உருவாகும் பாரதியின் பாப்பா பாட்டு “பாதகம் செய்பவரை கண்டால் பயங்கொள்ளலாகாது மோதி மிதித்து விடு முகத்தில் உமிழ்ந்து விடு” என்பது கவிஞனின் சத்திய ஆவேசத்தில் இருந்த தான் வருகிறது.

இவர்கள் கூறும் சுயநிர்ணய உரிமையையும் ,இறையாண்மையையும் வென்றெடுப்பதற்கான பாதை பாராளுமன்றத்தேர்தல் ! ஆனால் இவர்களில் பலருக்கு சுயநிர்ணய உரிமை- திம்பு கோரிக்கைகள் -13 வது திருத்த சட்டமூலம் பற்றி இந்த சொற்களுக்கப்பால் எதுவும் தெரியாதவர்கள் .இந்த கும்பலை தலைவர்களாகத் தெரிவு செய்யும் தமிழர்களை என்ன வென்பது.

இந்த பேர்வழிகள் காலம் காலமாக பாராளுமன்றத்தில் தானே குடியிருக்கிறார்கள். அங்கு குடி இருப்பதற்காக எத்தகைய பேரழிவுப்பாதையைத்திறந்து விட்டார்கள். இது பற்றிய பிரக்ஞை எப்போதாவது இவர்களுக்கு இருந்ததா? இன்று யுத்தத்தின் அவலவாழ்வில் மிச்ச மீதியாக இருக்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், இராணுவமயமக்கலில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் , காணாமல் போனவர்கள் , சிறைகளில் வாடுபவர்கள் , புலம் பெயர்ந்து தமிழக அகதி முகாம்களில் வாழ்பவர்கள்

எல்லாரையும் விற்று தமது அதிகாரக் கதிரை கனவுகளை நிறைவு செய்கிறார்கள். அப்பட்டமான சொந்த நலன்களுக்காக இரத்தமும் சதையுமான மக்களின் பிரச்சனைகளுடன் விளையாடுகிறார்கள். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு என்பவற்றுக்காக என்ன செய்திருக்கிறார்கள். ஒரு மில்லியன்; பேரை புலம் பெயர் சமூகமாக கொண்டுள்ள சமூகத்திலிருந்து உள்ள+ர் வளங்களிலிருந்து சர்வதேச உதவிகள் அரச உதவிகளிலிருந்து எதையெல்லாம் செய்திருக்க முடியும்.

அப்படியான ஈடுபாடான மனப்பாங்கு இவர்களுக்கு இருக்கிறதா.

19 வது 20 வது என அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைப்பற்றி பேசப்படும் காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு இவர்கள் என்ன முயற்சியை மேற்கொண்டார்கள். தமிழ் மக்கள் சுயமரியாதை -கண்ணியத்துடன் வாழ்வதற்கான வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான திட்டம் ஏதாவது இவர்களிடம் இருக்கிறதா? நிலமற்றவர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாணல் ,கிராமங்களின் வீதிகளைச் செப்பனிடல் ,சுகாதார வசதிகளை விருத்தி செய்தல், கல்வி இலவசமாக அனைத்துமட்டங்களிலும் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்

தண்ணிர் வளத்தை பாதுகாப்பது ,விருத்தி செய்வது, மாசடைதலில் இருந்து மீட்பது, தடுப்பது சேமிப்பது உள்ளிட்ட விடயங்களில் விரிவான அறிவு கிடையாது. உரிய ஆற்றல் கொண்ட மனிதர்களை இணைத்து வேலை செய்வது பற்றியும் அக்கறை இல்லை.

சமூக அக்கறை மற்றது போராட்டதில் பங்கு பற்றாத கோஸ்டிகள் மாகாண மட்டத்தில் அமைச்சர்களாகியிருக்கும் சூழ்நிலையில் சுயமாக வெளிநாடுகளில் இருந்து முதலீடு செய்ய முன்வருபவர்களை மனங்குன்றிப்போகச் செய்கிறார்கள். சமூக பிரக்ஞையற்ற இந்த கோஸ்டிகள் தமது சுயலாப நோக்கங்களுக்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் சிரேஸ்டர்கள் எனச் சொல்லப்படுபவர்களால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர்கள். இதனால் யாரும் இங்கு முதலிட ஆர்வமாக இல்லை. உள்ள+ராட்சி சபைகளில் இருந்து மாகாண சபை வரை கோரும் தட்சணைகள் திடக்கிட வைப்பனவாம்.

வழமையான அரசியலில் தட்சணை மாமூலான ஒன்றாக இருப்பதால் பெருமளவு இரத்தம் சிந்தப்பட்ட தமிழ் சூழலில் வெட்கம் அற்று இந்தப்பிரகிருதிகள் இதனை எதிர்பார்க்கின்றனவாம். அது உள்ள+ராட்சி மட்டம் வரையில் விரவிக்காணப்படுகின்றன.

புரையோடிப்போன தீண்டாமை ,வறியவர்களின் நிலப்பிரச்சனை ,பெண்கள் மீதான வன்முறைகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த சமூகப்பிரச்சனைகள் பற்றிய பிரக்ஞை ,சமூக நீதி- சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அக்கறை இருக்கிறதா? போதை வஸ்து பாவனை, வன்முறைகள்- ஆடம்பரங்கள் ,உதாரித்தனம் ,இயற்கை சுற்றாடல் அழிக்கப்;படுவது, மீள்சுழற்சி இல்லா குப்பை கிடங்காக எமது பிரதேசங்கள் மாறி வருவது பற்றி எமது கல்வி முறை இதில் சீர் திருத்தம் தேவைப்படுகிறது. அது பற்றிய பிரக்ஞை இருக்கிறதா,

இன உரிமைகள், இனங்களின் சமத்துவம் ,இன சமூகங்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்கு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள். பல்லினங்களின் நாடாக இலங்கையை உறுதிப்படுத்துவதில் இவர்களின் பங்களிப்பென்ன. சமூகம் மீள் எழுவதற்கான -சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான- சமூக அநீதிகளைத் துடைத்தளிப்பதற்கான சமூக நல்லெண்ணங்களை உருவாக்குவதற்கான எந்த திட்டமும் இவர்களிடம் கிடையாது. புலம்பெயர் வசதி படைத்தோரின் வேறுநாடுகள் வழங்கும் தனிப்பட்ட தட்சணைகளில் தான் கவனம்.

சாதாரண மக்களின் பிரச்சனைகள் அல்ல. சாதாரண மக்களின் பிரச்சனைகளை விற்று இங்கு பிழைப்பு நடத்தப்படுகிறது. இவர்களை தமிழ் மக்கள் தோற்கடிக்காத வரை- உதைத்து தள்ளாத வரை விமோசனம் இல்லை. விசச் சுழல் போல் ஒரே பொறியிலேயே தமிழ் மக்கள் விழுந்து கொண்டிருக்கிறார்கள். அதுபற்றிய சுரணை எதுவும் யாழ்மையவாத தமிழ் சமூக சிந்தனைக்கு கிடையது.

பரந்த உலக கண்ணோட்டம், நாடு இன சமூகங்கள் ,தமிழ் மக்களின் உரிமைகள் ,சமூகத் தேவைகள் பற்றி பரஸ்பர தொடர்புடன் அறிவார்ந்த முறையில் சிந்தித்து செயற்படுபவர்கள் தேவைப்படுகிறார்கள். சுடர் மிகு அறிவு கொண்டவர்கள் எளிமையான சமூக அக்கறையாளர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு காலமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆவதில்லை. ஆகவும் முடியாது. யாழ்மையவாத தமிழர்கள் பெரும்பாலும் திருடர்களையும் போலிக் கனவான்களையுமே நேசிக்கிறார்கள்.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏகபோகத்திற்கெதிரான ஒரு உடைவு தெரிகிறது எவ்வளவு காலம் நீடிக்குமோ தெரியாது அது நல்ல சகுனமே.

சுகு-ஸ்ரீதரன

No comments:

Post a Comment