"துடைத்தெறியப்ப்பட வேண்டிய தலைமைத்துவம் எது என்பதும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தலைமைத்துவம் எது என்பதும் இப்போது நன்கு தெளிவாகியுள்ளது":
பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
"தேர்தல் தினத்திற்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கும் சம்பவங்கள் எமது பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு தரத்திலான அரசியல் தலைமைத்துவங்கள் இருப்பதனை நிரூபித்துள்ளன. அதில் ஒன்று நாகரிகமும் ஒழுக்கமும் நிறைந்த தலைமைத்துவம், மற்றையது காடைதனத்திற்கும் வன்முறைகளுக்கும் வழிகாட்டும் தலைமைத்துவமாகும். இதனைத் தற்போது மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர்" என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் பின்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு நிகழ்வு காத்தான்குடி NFGG பிராந்திய வளாகத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றும் போதே NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது...
"நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலானது, இலங்கை வரலாற்றில் மிகவும் சுமூகமாகவும் வன்முறைகள் குறைந்த ஒரு தேர்தலாகவும் பதிவு செய்யப்பட்டு, சர்வதேசத்தின் பாராட்டினையும் பெற்றிருந்தது. ஆனால் கடந்த 21.08.15 வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நியமனங்களில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வின் பெயரும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்களினால் எமது பிரதேசத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத்தனமான அரசியல் பழிவாங்கலானது, முழு முஸ்லிம் சமூகத்தினையும் வெட்கித்தலைகுனியச் செய்துள்ளது.
அது மட்டுமல்லாது இந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னர் மக்கள் இந்த ஊரில் தம்மை வழிநடாத்துகின்ற இரண்டு வகையான தலைமைத்துவங்கள் எவை என்பதினையும், அவைகளின் தகுதி தராதரம் எவ்வாறானது என்பதினையும் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளனர். அதில் ஒன்றுதான் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வின் தலைமைத்துவத்தின் கீழ் வளர்க்கப்படு வரும் அநாகரீகமான, காடைத்தனமான, வன்முறை மிக்க, அரசியல் பழிவாங்கல்கள் நிறைந்த தலைமைத்துவமாகும். மற்றையது நல்லாட்சி ஒழுக்கங்களைப் பேணி, நாகரீகமாகவும், அமைதியான வழிகளிலும, மார்க்க வறையறைகளை மதித்தும் மக்களை வழிநடாத்துகின்ற நமது நல்லாட்சி தலைமைத்துவமாகும்.
ஆகஸ்ட் 18ம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியான போது, எமது கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. அத்தோடு சகோ, ஹிஸ்புல்லாஹ்வும் தோல்வியினைத் தழுவினார். அமோகமான வெற்றியினை நாம் பெற்றுக்கொண்ட அந்த சந்தர்ப்பத்தில் நாம் மிக அமைதியான முறையில் நாகரிகமாகவும் மார்க்க வரையறைகளை மீறாத வகையிலும் எமது வெற்றி உணர்வை வெளிப்படுத்தினோம். எமக்கு எதிராக நின்றவர்கள் மீது ஒரு பிழையான வார்த்தையினைக் கூட பிரயோகிக்காத வகையில் கவனம் செலுத்தி அந்த வெற்றித் தினத்தை நாம் கழித்தோம். இத்தனை ஒழுக்கமும் நாகரிகமும் பண்பாடும் நிறைந்த ஒரு தலைமைத்துவத்தையே நாம் கட்டி வளர்த்து வருகின்றோம்.
ஆனால் மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணியைச் சேர்ந்த ஹிஸ்புள்ளாஹ்வின் பெயர் தேசியப்பட்டியலில் அறிவிக்கப்பட்ட ஒரு சில மனித்தயாலங்களில் இந்த ஊரில் கட்டவிழ்த்து விடப்பட்ட மார்க்கத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் முரணான அரசியல் காடைத் தனங்களைக் கண்கூடாகக் கண்டோம். புனித இறை இல்லத்தில் மஃரிப் தொழுகை நடந்துகொண்டிருந்த நேரத்தில் அங்கு சென்று அட்டகாசம் புரிந்தனர். பள்ளிவாயலுக்கு முன்னால் மானக் கேடான காரியங்களைச் செய்தனர். தொழுகைக்குத் தயாராக இருந்த நமது சகோதரர்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல்களை மேற்கொண்டு உயிராபத்துக்கு உள்ளாக்கினர். இந்த ஊரில் ஹிஸ்புளாஹ்வின் காட்டு மிராண்டித்தனமான அரசியல் ஏன் துடைத்தெறியப்பட வேண்டும் என்பதினை மீண்டுமொரு முறை இது மக்களுக்கு புரிய வைத்துள்ளது.
மாத்தரமின்றி எமது ஆதரவாளர்களை திட்டமிட்ட முறையில் வேண்டுமென்றே வன்முறைகளுக்கு அழைத்து, அவர்களையும் சட்டத்திற்கு முரணான வகையில் செயற்படுத்துவதற்கு ஹிஸ்புள்ளாஹ் ஆதரவாளர்கள் பல பிரயத்தனங்களையும் மேற்கொண்டனர். இருப்பினும் எமது சகோதரர்கள் காட்டிய பொறுமை, நிதானம், சமயோசிதம், பொறுப்புணர்வு என்பன இப்பிரச்சனையினை விரைவில் முடிவிற்குள் கொண்டு வந்துள்ளது. எமது தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் பலரும் சம்பவ தினம் கொழும்பில் இருந்த போதிலும், எமது ஆதரவாளர்கள் இவ்வாறு பொறுமையுடன் நடந்து கொண்டமையானது, மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இதுவே நாம் நமது மக்களை நாகரீக அரசியலுக்கு பயிற்றுவித்திருக்கின்ற முறையாகும்.
எனவே நாம் ஒரு போதும் வன்முறையினை வன்முறையினால் முடிவிற்கு கொண்டு வரமாட்டோம். நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை நிலைநாட்டியுள்ளோம்.
தேர்தல் தினத்திற்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கும் சம்பவங்கள் எமது பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு தரத்திலான அரசியல் தலைமைத்துவங்கள் இருப்பதனை நிரூபித்துள்ளன. அதில் ஒன்று நாகரிகமும் ஒழுக்கமும் நிறைந்த தலைமைத்துவம், மற்றையது காடைதனத்திற்கும் வன்முறைகளுக்கும் வழிகாட்டும் தலைமைத்துவமாகும். இதனைத் தற்போது மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
எனவே நமது எதிர்கால சந்ததியினரின் நலன்களைக் கருத்தில் கொண்டு எமது சமூகத்தில் எவ்வாறான அரசியல் தலைமைத்துவம் துடைத்தெறியப்பட வேண்டும் என்பதும், எவ்வாறான தலைமைத்துவம் மேலும் வலுவூட்டி வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதும் இப்போது நன்கு தெளிவாகியுள்ளது."
0 comments :
Post a Comment