நாங்கள் உரிமைக்காக மட்டும் போராடுவோம்.....கடமையை செய்ய காலியில இருந்து காமினி வருவான்....!!!!
இன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பெண்கள் சிறுவர் பிரிவின் மாதாந்த கூட்டத்துக்கு சென்றிருந்தேன். வழமைபோல கூட்டத்தில் சுவாரசியமான விடயங்கள் (பெண்கள் சிறுவர் சம்பந்தப்படாத) பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டது....அடுத்த கூட்டத்தையும் இதே போல பயனுள்ளதாக(?) இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று உறுதி பூண்டு கூட்டத்தை நிறைவு செய்தனர்.
கூட்டம் முடிந்து, வெளி நோயாளர் பிரிவைத் தாண்டி வெளியே வந்து கொண்டிருந்தேன். கணிசமான அளவு கூட்டம் வெளி நோயாளர் பிரிவில் காத்திருந்தது. கூட வந்த அலுவலக நண்பர் வேறொரு நபரை சந்திக்கச் சென்ற படியால் அவருக்காக நானும் OPD இல் காத்திருந்தேன்.
காத்திருந்த வேளை.....வைத்தியரின் அறையில் நடப்பதை கண்ணூடாக காணமுடிந்தது...கண்ட காட்சியில் சற்றே சுவாரசியம் பிறந்தது...ஒரு அறுபது வயது மதிக்கதக்க பெண்மணி, வைத்தியருக்கு என்னத்தையோ நடித்துக் காட்டிக் கொண்டு இருந்தார்.
அவரின் உடல் மொழியால் மருத்துவருக்கு எதையோ அவர் விளங்கப்படுத்த முயல்வது எனக்கு தெரிந்தது....பாவம் அந்த அம்மணி வாய் பேச முடியாதவர் போல..எவ்வளவு கடினமாக தனது நோயை மருத்துவருக்கு புரிய வைக்கின்றார் என்று பெருமூச்சை விடத் தொடங்க...........வந்த பெருமூச்சு பாதியில தங்கி விட்டது. ஏனெண்டா இப்பொழுது மருத்துவரும் நடிக்கத் தொடங்கி இருந்தார்....அட கஷ்டகாலமே டாக்குத்தரும் "மியூட்" போல எண்டு உத்துக் கவனிக்கத் தொடங்கினேன்.
இரண்டு பேரும் கைப்பாஷை தான்....திடீரென்று டொக்டர் எழும்பி தன்ர ட்ரௌசர் பொக்கட்டுக்குள்ள அகழ்வாராய்ச்சி செய்து போனை எடுத்து காதுக்க வச்சு வாயால கதைக்க தொடங்கினார்.
எனக்கு ஆர்வம் தாங்க முடியேல்ல....பிறவி விடுப்புக் குணம் என்னை இருக்க விடேல்ல. வேலை முடிஞ்சு "போவமே" எண்டு வந்த நண்பரை OPD இல் இருக்கச் சொல்லிப்போட்டு எழும்பிப் போய் அறை வாசலில் நின்ற மருத்துவ தாதியிடம் விசாரித்தேன். உள்ளுக்க என்ன நடக்குது ஆருக்கு குறைபாடு எண்டு.
அவ சொன்னா டொக்டரும் கதைப்பாராம்....அம்மணியும் கதைப்பாவாம்....ஆனா டொக்டர் "சீனா"வாம் அம்மணி "தானா"வாம்..
"அப்ப "தானா" வில டொக்டர் இல்லையோ" என்றேன்.
"இருக்கினம்....ஆனா கொஞ்சப்பேர்"
"கொஞ்சமெண்டா எத்தனை?"
"ஆறு"
"இந்த ஆஸ்பத்திரியில் மொத்தம் எத்தினை டொக்டர்ஸ்?" என்றேன் குழப்பத்துடன்.
"முப்பத்துநாலு" எண்டா தெளிவா.
"அப்ப மிச்சம் இருபத்தெட்டும்.....?"
"சீனா"
முப்பத்துநாலு மருத்துவர்களுக்குள்....இருபத்தெட்டு பேர் தென்னிலங்கையிலிருந்து வந்து முல்லைத்தீவில் வந்து தங்கி இருந்து சேவையாற்றுகின்றார்கள்....நம்மவர்கள் வெறும் ஆறுபேர் தான்.
அதிலும் ஐவர் முல்லைத்தீவையும் ஒருவர் கிளிநொச்சியையும் சொந்த இடமாகக் கொண்டவர்கள். அவர்களிலும் மூண்டு பேர் மக்களின்ர வரிப்பணத்தில படிக்காமல் ஆத்தை அப்பன்ர சொந்தக் காசில ரஷ்யாவில படிச்சவையளாம்....
கோபத்தை விட வெட்கம் தான் நிறைய வந்தது எனக்கு...
ஒரு வருடத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் ஐந்து அல்லது ஆறு பேர்...அப்ப எப்படி இது சாத்தியம்?
சிலவேளை முல்லைத்தீவை சேர்ந்த டொக்டர்ஸ் படித்து முடித்ததும்...முல்லைத்தீவை விட பின் தங்கிய மாவட்டங்களுக்கு சேவையாற்றப் போயிருப்பினமோ எண்டு...நினைச்சா...முல்லைத்தீவு தானாம் இலங்கையில "அதிகஷ்ட பிரதேசம்" எண்டு கூகிள் சொல்லுது. பிறகு நானென்னத்தை சொல்ல?
ஆரும் எங்கையெண்டாலும் போகட்டும்.......என்ர கேள்வி என்னெண்டா.....
கொக்கிளாயில வயல் காணிய சிங்களவன் பிடிச்சு வயல் செய்தா வரிஞ்சு கட்டிக் கொண்டு போய்...போட்ட கதியாலுகளை புடுங்கி எறியிறம்......நல்ல முயற்சி!
செம்மலையிலையும்...மாத்தளனிலையும் கரைவலையை அவன் கொண்டு வந்து போட்டு மீன் பிடிச்சா...அடிச்சுப் பதறி ஐ.நா வரைக்கும் மனு குடுக்குறம்....மிக நல்ல முயற்சி!!!!
எங்கட வளங்கள் சூறையாட நாங்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது..... எவன் வந்தாலும் விடமாட்டம்.
ஆனா...படிச்சு, டாக்குத்தரா வந்ததும் நாங்கள் நைஸாக கழண்டு கொள்வோம். இதுக்கெண்டு சேவை செய்ய தெற்கில இருந்து அவங்கள் வருவாங்கள்.
கொக்கிளாயிலையும் கொக்குதொடுவாயிலையும் தூக்கிப்பிடிச்ச கொடிய மாஞ்சோலை ஆஸ்பத்திரியிலையும் பிடிக்கிறது தானே?
வளங்கள் எண்டா எங்களுக்கு பௌதீக வளங்கள் மட்டும் தான் கண்ணுக்க தெரியும். மனித வளங்களை மறந்து விடுவோம். அப்படித்தானே?
அந்த இருபத்தெட்டு டாக்குத்தர்மாரும் தாங்கள் கும்பிட, மாஞ்சோலை ஆஸ்பத்திரியில புத்தர் சிலை வச்சா..... அப்ப தூக்கிப் பிடிச்சுக் கொண்டு வாங்கோ பிக்கானையும், மண்வெட்டியையும்!!!!!
0 comments :
Post a Comment