முன்னாள் போராளிகளா? பயங்கரவாதிகளா? பீமன்
எதிர்வரும் இருவாரங்களில் இலங்கை சனநாயக குடியரசின் 8 வது பாராளுமன்றம் ஆரம்பமாக இருக்கின்றது. நாட்டின் சட்டம் இயற்றப்படுகின்ற இந்த மகா சபையிலே இலங்கை அரசியல் யாப்பின் 6 வது திருத்தச் சட்டத்தின் 7ம் அத்தியாயத்தின் பிரகாரம் :
"..................................... ஆகிய நான் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றிப் பாதுகாப்பேன் என்றும், இலங்கையின் ஆள்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்று தாபிக்கப்படுவதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவு அளிக்கவோ, ஆக்கமளிக்கவோ ஊக்குவிப்பு அளிக்கவோ நிதி உதவவோ, ஊக்குவிக்கவோ, பரிந்துரைக்கவோ மாட்டேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதிசெய்கின்றேன் / சத்தியஞ்செய்கின்றேன்
என அழுத்தம்திருக்தமாக ஓங்கி உரைத்து (உச்சரிப்பில் வித்தியாசம் இருப்பின் repeat please - மீண்டும் ஒருதரம் சொல்லுங்கோ என்றும் சத்தம் குறைவாக இருந்தால் Louder please - உரக்க கத்துங்கள் என்றும் சபாநாயகரால் கூறப்படும்) தங்குதடைகள் ஏற்பாடுத்தாது தெளிவாக எழுதும் என பல தடவைகள் பரீட்சித்துப்பார்க்கப்பட்ட பேனா ஒன்றினால் கையெழுத்திடுவதற்காக வடகிழக்கிலிருந்தும் பல்வேறு சக்திகள் பல்வேறு கோஷங்களுடன் களமிறங்கியுள்ளன.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றிப் பாதுகாப்போம் என்றும், இலங்கையின் ஆள்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்று தாபிக்கப்படுவதற்கு நேரடியாகவே மறைமுகமாகவோ இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவு அளிக்கவோ, ஆக்கமளிக்கவோ, ஊக்குவிப்பு அளிக்கவோ, நிதி உதவவோ, ஊக்குவிக்கவோ, பரிந்துரைக்கவோ மாட்டோம் என்றும் சத்தியம் செய்துகொள்ள இலங்கையின் அரசியல் யாப்பை ஏறிமிதித்து தனிநாடுகோரி, நாட்டை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த முன்னாள் பயங்கரவாதிகளும் முண்டியடிப்பது : "பயங்கரவாதிகள் தாம் செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்" என்பதை உணர்த்துகின்றது.
இலங்கை அரசியல்யாப்பு அதன் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கியுள்ள வரப்பிரசாதங்களை அனுபவிப்பதற்காக மக்களிடம் வாக்குப்பிச்சை கேட்கின்றார்கள் முன்னாள் பயங்கரவாதிகள். ஆனால் இவர்கள் இதேமக்களின் வாக்களிக்கும் சுதந்திரத்தை ஆயுதமுனையில் பறித்த கொடிய ஜனாயக உரிமை மீறலுக்கு இதுவரை மக்களிடம் மன்னிப்பு கோரவும் இல்லை அதற்கான எந்த சமிக்கையும் தென்படவில்லை.
இலங்கை பிரஜைகளான முன்னாள் பயங்கரவாதிகளுக்கும் நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உரிமையை அரசியல் யாப்பு அளித்திருக்கின்றது. ஆனால் பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்ட இவர்கள் "புனர்வாழ்வளிக்கப்பட்ட பயங்கரவாதிகளாக" சமூகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களே அன்றி "முன்னாள் விடுதலைப் போராளிகளாக" அல்ல.
மேற்படி பயங்கரவாதிகளால் இந்நாட்டின் மக்கள் சொல்லொண்ணாத்துயரங்களை சந்தித்திருக்கின்றார்கள். மக்கள் விபரிக்க முடியாத வடுக்களை சுமந்து நிற்கின்றார்கள். விலைமதிப்பற்ற உயிர்களையும் உடமைகளையும் இழந்துள்ளார்கள். ஏன் வாழ்நாள் அங்கவீனர் ஆனோர் ஆயிரம் ஆயிரம்பேர். மேற்படி பாதிப்புக்களுக்கு பயங்கரவாதிகள் கூறும் ஒரே நியாயம் போராட்டத்தின் பெயரால் எடுக்கப்பட்ட முடிவுகள் என்பதாகும்.
இலங்கையிலே புலிகளால் மேற்கொள்ளப்பட்டது போராட்டமும் அல்ல இணைந்திருந்தவர்கள் போராளிகளும் அல்லர். மாறாக இடம்பெற்றது பயங்கரவாதமும் அந்த அமைப்புடன் இணைந்திருந்தவர்கள் பயங்கரவாதிகளுமே ஆவர். இவ்வாறே இலங்கையின் சட்டமும் வரையறுத்துள்ளது. இதை உலகநாடுகளும் வழிமொழிந்து புலிகளை இன்றுவரை பயங்கரவாதப்பட்டியலில் தீண்டத்தகாதவர்களாகவே வைத்துள்ளது.
இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் தேர்தலில் குதித்துள்ள முன்னாள் பயங்கரவாதிகள் : தாங்கள் "முன்னாள் போராளிகள்" என்ற முகவரியுடன் மக்கள் மத்தியில் வலம்வர ஆரம்பித்துள்ளனர். இம்முகவரியுடன் இவர்களது நுழைவுக்கான அனுமதி புலிகளின் கடந்தகால பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமைகின்றது. அத்துடன் புலிகளை இன்றும் இத்தேசத்தில் ஏற்க மறுக்கும் மக்களுக்கு அநீதி இழைப்பதாகவுள்ளது. புலிகளால் பாதிக்கப்பட்டோர் தாம் பயங்ரகவாதிகளால் தாக்கப்பட்டோம் என்றே கூறுகின்றார்கள். ஆனால் இன்றைய நிலைமையில் அவர்கள் போராளிகளால் தாக்கப்பட்டோம் என கூறவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படவுள்ளதை நினைத்து ஆத்திரமடைகின்றனர்.
எனவே இச்சொற்பிரயோகம் சமூதாயத்தில் ஒரு தரப்பை மனஉழைக்சலுக்கு உள்ளாக்குகின்றது என்பதை கருத்தில் கொண்டு நாட்டின் சட்டத்தையும், குடிமக்களின் உரிமைகளையும் காக்கவேண்டிய தரப்பினர் விரைவாக செயற்பட்டு குறித்த சொற்பிரயோகத்திற்கு தடையேற்படுத்துதல் அவசியமாகும்.
0 comments :
Post a Comment