Friday, May 1, 2015

மரணதண்டனை சாதித்தது....? நோர்வே நக்கீரா

மன்னர் ஆட்சியில் இருந்து இன்றைய மக்கள் ஆட்சிவரை குற்றம் கண்டு பிடிப்பதும், குற்றங்களுக்குத் தண்டனை வகுப்பதும், நிறைவேற்றுவதும், வளமையாக இருந்து வருகிறது. எது குற்றம் எது குற்றம் இல்லை என்பதை வகுப்பது யார்? தண்டனை வகுப்பாளர்கள் குற்றம் செய்தாதவர்களாக இருந்தார்களா? இத்தண்டனைகளால் குற்றங்கள் குறைக்கப்பட்டனவா? தண்டனைகள் வேண்டாம் என்றால் மாற்றுவழி என்ன? நீதிமன்றங்கள் எதற்கு? குற்றங்களே சட்டமாக்கப்பட்டால் குற்றங்களே நடக்காது இருக்குமல்லவா? சமூகத்தில் தண்டனைகளின் பங்கு என்ன? இது நல்லதா கெட்டதா? ஆய்வு கொள்கிறது இப்படைப்பு

மயூரன் சுகுமாரன் இலங்கைத் தமிழ்வம்சாவளி சேர்ந்த லண்டனில் பிறந்த ஆஸ்திரேலியக்குடிமகனாவார். இவர் 17.4.2005ல் தனது 24ஆவது பிறந்தநாளன்று அன்ரு என்ற இன்னுமொரு ஆஸ்த்திரேலிய குடிமகனுடன் போதைப் பொருள் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டார். 17.02.2006ல் இந்தோனேசிய நீதிமன்றத்தால் மரணதண்டனை தீர்ப்பானது. இதை எதிர்த்து மேன்முறையீடு செய்தபோதும் 2011ல் மரணதண்டனை தான் தீர்வு என்பது உறுதியானபின் 29.04.2015ல் அதாவது அவரின் 34ஆவது பிறந்துநாளின் பின் 11நாட்களுக்குப்பின் மரணதண்டனை நிறைவேற்றப்பட் டது. இவர் பிடிபடும்போது அலட்சியமாக இருந்த எம்சமூகம், அனைத்துலகம் மரணதண்டனை எனத்தீர்ப்பு அளிக்கப்பட்டபோது கூட வாழாதிருந்தது. மரணதண்டனை நிறைவேற்றும் காலம் நெருங்கியதும் தன் பார்வையின் கோணத்தை மாற்றிக் கொண்டது. இரக்கம், காருணியம், அன்பு, பாசம், நீதி, நேர்மை என்ற உணர்வூற்றுக்கள் பீறிடத் தொடங்கின. மரணதண்டனை என்ற செயற்பாட்டின் பின்னால் ஏதோ ஒருதாங்கமுடியாத தாக்கு சக்தி உள்ளது என்பது புலனாகிறது. இந்த தாக்குசக்தியை வைத்தே குற்றங்களைத் குறைந்துவிடலாம் என்று சட்டம் நம்புகிறதா?

மனிதசமூகத்தையே கெடுக்கும் போதைப்பொருட்களை மயூரன் கடத்திப் பிடிபட்டபோதும், மரணதண்டனை எனத்தீர்ப்பழித்தபோதும் தண்டனை சரியானது என கூறியவர்கள் மரணதண்டனையை நிறைவேற்றும் நாட்நெருங்கியபோது தம்கருத்துக்களை கருணையாக மாற்றியவர்கள் பலர் உண்டு. இது எமக்குக் காட்டும் சமிஞ்ஞை என்னவெனில் தண்டனை தேவை என்பதில் எந்தச் சந்தேகமும் அற்ற சமூகம் மரணதட்டனையை ஏற்ற மறுக்கிறது. மரணம் தண்டிக்கப்படுபவர்களை அச்சுறுத்தாத போதிலும் பார்ப்பவர்கள், கேட்பவர்களை அச்சுறுத்துகிறது. இதன் விளைவே மரணதண்டனைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படுவதற்குக் காரணமாக உள்ளது.

இனி மரணதண்டனை பெற்ற அனைவரும் குற்றவாளிகளா என்ற கேள்விக்கு ஆம் என்று யாராலும் அறிதியிட்டுச் கூற இயலாது. கொலை செய்வது குற்றம் என்று எந்தச்சட்டம் சொல்கிறதே அதே சட்டம்தான் கொலை செய்ய மரணதண்டனையை ஏவுகிறது. இது எப்படி நியாயமாக முடியும்? நானும் நீங்களும் கொலைசெய்தால் குற்றம் இராணுவம் செய்யலாம் அது சட்டம். பக்கத்துவீட்டானின் நிலத்தை நீங்கள் அபகரித்தல் குற்றம் ஊராச்சியாளரோ அரசே அபகரிக்கலாம் அது சட்டம். ஆக சட்டம் சமநிலையற்றே இருக்கிறது. இதற்குள் மதங்கள் வேறு.

இஸ்லாத்தைத் தவிர எல்லாமே இறைவன் என்று காணும் மதங்கள் தண்டனையை இறைவனிடம் விட்டு விட்டுகிறார்கள். ஆனால் எல்லாமே கடவுள் அல்லாவே எல்லாம் எனும் இஸ்லாம் மட்டும் தண்டனை கொடுப்பதிலும், தண்டிப்பதிலும் அகோரமாக இருக்கிறது. ஒரு சிருஸ்டியையே செய்ய முடியாத அற்ப பதரான மனிதன் கடவுளின் சிருஸ்டியை அழிப்பதற்கு எத்தகைய தகுதி உடையவன்? கடவுளை எவனுமே இதுவரை கண்டது கிடையாது. காணாத கடவுளைக் கண்டதாக, கடவுள் சொன்னதாக கடவுளின் பெயரால் பொய்கூறி கொலைகள், பலிகள் நடக்கின்றன. இது பொய்மையின் போலிப்பித்தலாட்டமே. ஆக மரணதண்டனை என்பது மன்னிக்கப்பட முடியாத கொலையாகும்.

இன்று நடைமுறைப்படியும், சட்டப்படியும் பிழையான அனைத்தும் நாளை, எதிர்காலத்தில் சரியென அமைகிறது. இன்று சட்டவிரோதம் எனப்பட்டது நாளை சட்டமாகும். ஆகா சமனிலையற்ற உறுதியற்ற சட்டமானது அறுதியும் உறுதியுமாக உயிரை எடுப்பது எப்படி நியாயமாகும். பூமி உருண்டை என்ற விஞ்ஞானியை தூக்கிலிட்டார்கள். இறுதியில் பூமி உருண்டை என்பதே முடிவான ஒன்றாகியுள்ளது. தண்டிக்கப்பட்ட விஞ்ஞானிக்கும், அவருடன் கொல்லப்பட்டவர்களுக்கும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகள்தானே? அவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படாது இருந்திருந்தால் சிறையில் இருந்தாவது தமது கூற்று சரி என நிரூபித்திருப்பார்கள். சிலவேளை இன்னும் புதிய கண்டுபிடிப்புக்களை உலகிற்குத் தந்திருப்பார்கள். நாம் இன்னும் எத்தனையோ படிகள் முன்நோக்கி இருந்திருப்போம். சமூகமும் சட்டமும் இதற்கான சந்தர்பத்தை வழங்கியதா? சரி தண்டித்தவர்களை யார் தண்டித்தார்கள்? நீதி என்ற பெயரில் எத்தனை அநீதிகள் நடந்தேறியுள்ளன? சட்டமோ தண்டனைகளோ திருத்துப்படலாம் மரணதண்டனை கொடுத்தால் கொடுத்ததுதான். சமூகநலனுக்காக மரணதண்டனை என்ற மாயப்பூச்சு சமூகத்தில் எந்த நல்மாற்றங்களையும் உருவாக்கவில்லை. இது வெறும் சமூகத்தினதும் சட்டத்தினதும் பழிவாங்கலாகவே உள்ளது.

இப்படிக் கடுமையான சட்டங்களால் சிலமனிதர்களை, சமூகங்களை சிலகாலம் பயமுறுத்தி வைத்திருக்கலாம். ஆனால் அது நிலையானது அல்ல. நீயூட்டனின் முன்றாவது விதி எல்லாவிடங்களிலும் பாவிக்குமாறே உள்ளது. தாக்கத்துக்கு சமனும் எதிருமான மறுதாக்கங்கள் எங்கும் உள்ளது. எங்கு மிகக்கடுமையான சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுகிதோ. அங்கேதான் சட்டமீறல்களும் அத்துமீறல்களும் அதிகமாக உள்ளன. பயமுறுத்தி ஒருமனிதனையோ, ஒரு சமூகத்தையே திருத்திவிட முடியாது. மயூரன் போன்றவர்களுக்கு பிடிபட்டால் என்ன தண்டனை என்பது நன்றாகவே தெரியும். அதனால் அவர்கள் கடத்தலைச் செய்யாது இருந்தார்களா? இல்லையே

குற்றங்கள் எப்படி உருவாகிறது என்பதை அறிந்து அதைத் தடுப்பதன் மூலமாகவே குற்றங்களைத் தடுக்க முடியும். தண்டனைகளால் குற்றங்களை சட்டமீறல்களைத் தடுக்க முடியாது. குற்றத்தின் சட்டமீறல்களின் காரணிகளாக அமைவன வளர்ப்பு, சூழல், தொடர்பு, வாய்ப்பு. பிள்ளைகளை ஒழுங்காக வளர்ப்பதற்கான அறிவு பெற்றோர்களுக்கு அரசால் கொடுக்கப்படுகிறதா? இல்லை. சூழல், தொடர்வு, வாய்ப்பு எப்படி உருவானது? இவற்றை உருவாக்கிக் கொடுத்ததே சமூகமும், சட்டமும் தானே. இப்படி இருக்கும் போது முழுப்பிழையையும் ஒரு தனிமனிதனில் போட்டு அவனின் வாழ்வை விலைமதிப்பற்ற உயிரைக் பறிக்கிறீர்கள்.

பக்தி கூடப் பயத்தில் தான் வருகிறது, பயமுறுத்தித்தான் நீதியை நிலைநாட்ட முடியும், மரணபயம் இருக்கும் போதுதான் உயிருக்குப் பயந்தாவது குற்றம் செய்யாது இருப்பார்கள் என எண்ணலாம். சரி காலங்காலமாக தண்டனை கொடுத்து சமூகத்தை முழுமையாகச் சீர்திருத்த முடிந்ததா? குற்றங்களே மறைந்துவிட்டதா? இனிக்குற்றங்களே நடக்காதா? மரணதண்டனை என்று களையெடுத்தார்களே ஆனால் களைகளை அடியோடு களைய முடிந்ததா? போதைவஸ்துப்பாவிப்பவர்களுக்கும், கடத்துபவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் மரணதண்டனை கொடுத்துவரும் இதே இந்தோனேசியாவில்தான் 14நிமிடத்துக்கு ஒருவர் போதை வஸ்துப்பாவித்து இறக்கிறார். இவர்களின் மரணதண்டனைகள் செய்த நற்கைங்கரியம் என்ன? போதைப் பொருள் என்று கருதினால் காப்பி தேநீர் சிகரெட் எல்லாமே தொங்கி வாழச்செய்யும் போதைப் பொருட்களே. சிகரெட் பிடிப்பது உடலுக்குக் கேடு என்று சிகரெட் பெட்டியில் எழுதிவிட்டு விற்பனையை அனுமதித்து பணம் பண்ணுகிறார்கள். அதேபோல் போதைப் பொருளுக்கும் செய்யலாமே. மது செய்யும் அதே வேலையைத்தான் போதைவஸ்துக்களும் செய்கின்றன. போதைவஸ்துப் பாவனையின் தாயாக அமைவது மது. மதுவே வல்லுறவு வன்கொடுமை பாலியல்வல்லுறவு போன்ற கொடுமையான காரியங்களுக்குத் துணைபோகும். போதைவஸ்து உட்கொண்டவர் முளை மனத்துடன் அது நின்றுவிடும். அந்த வஸ்துக்கிடைக்காது போது அதைத்தேடியே வேகம் கொள்வார்களே தவிர போதை வஸ்துப்பாவித்தவர்கள் பாலியல்வல்லுறவு கொள்வதில்லை. இதன்தாக்கம் மூளைக்கு மட்டுமுரியதே தவிர உடல்ரீதியானது அல்ல. சமூகத்தின் நீதி நீதியற்றே இருக்கிறது. இதற்காக போதைவஸ்துக்களைப் பாவியுங்கள் என்று கூறவில்லை. சமூக அக்கறை இருந்தால் மற்றை தங்குதன்மை கொண்ட வஸ்துக்களையும் தடுத்து நிறுத்துங்கள்.

மரணதண்டனைக்கெதிரான மாற்றுவழி என்ன? மாற்றுவழி என்பது சிந்திக்கப்பட வேண்டியது. ஆனால் மரணதண்டனை ஒருபோதும் ஒரு நல்ல மனிதனையோ சமூகத்தையோ உருவாக்காது என்பது ஐயம் திரிபற்றது. மரணதண்டனை வளங்கப்படும் நாடுகளில் தான் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் எவரும் தாம் பிடிபடுவோம் என்று எண்ணிச் செய்வதில்லை. செய்தபின்னர் வருந்திப் பிரயோசனமும் இல்லை. இம்மரண தண்டனைகள் சாதித்தது என்ன? மயூரனுடன் கொலை செய்யப்பட்டவர்களை மட்டுமா சட்டம் தண்டித்தது? இவர்களை நேசித்த உறவுகள், நட்புகள், அனைவரையும் சேர்த்தல்லவா தண்டித்தது. மயூரனுக்கு மரணதண்டனை அது முடிந்துவிட்டது அவனும் முடிந்துவிட்டான். ஆனால் அவன் குடுப்பத்தினருக்கும், உறவுகளுக்கு, நண்பர்களுக்கும் கொடுக்கப்பட்ட ஆயுள்தண்டனை அல்லவா இது எதற்கு? குற்றமே செய்யாதவர்களுக்குத் தண்டனை எதற்கு? இதைப் தூரவிருந்து பார்த்த நாங்களும் தண்டிக்கப்படுகிறோம். நான் செய்த குற்றம் என்ன?

தண்டனை கொடுத்துக் கொடுத்தே சமூகத்தைத் திருத்தமுடியாதென அறிந்த மேற்குலகம் சிந்தித்து, விவாதித்து, அறிவிரீதியாக உணர்ந்தே மரணதண்டனையை இல்லாது செய்தது. இதனால் குற்றங்கள் குறைந்ததோ இல்லையோ கொலைகள் குறைந்தது என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம்.

கொலை செய்வது குற்றம் அதற்கும் மரணதண்டனை தான் முடிவு எனும் இந்தோனேசிய இஸ்லாமியச்சட்டம் மயூரனையும் இவருடன் 8ப் பேரையும் கொன்றது. இவர்களைக் கொன்றவர்களுக்கு மரணதண்டனை எப்போ? மரணதண்டனையால் எதைச் சாதிக்க முடிந்தது? மரணம் அழிக்குமே தவிர எதையும் ஆக்காது. 24வயதாக இருந்தபோதே மயூரன் பிடிபட்டான். தெரிந்தோ, தெரியாமலோ, சமூகச்சூழலாலே, பணத்தாசையாலே இதை அவன் செய்தான். அன்று அவன் குற்றவாளியாகக் காணப்பட்டான். ஆனால் அவன் மனம்திருந்தி தனது நற்பங்களிப்பை சமூகத்துக்குக் கொடுத்தான். தன்னுடன் வாழ்ந்த சகசிறைக்கைதிகளுக்கு தற்காப்புக்கலை, கணினிபயிற்சி, சித்திரம் போன்றவற்றைப் கற்பித்தான். உணர்வுகளைச் சித்திரமாக வரையும் கலையை சிறையிலேயே கற்றுக்கொண்டான். இவனுடன் பிடிப்பட்ட அன்ரு என்பவரும் தன்பழைய காதலியை மணந்தார், திருந்தி போதகராக மாறவிருப்பினார். இவர்கள் திருந்தி வாழ்ந்தபோதே சட்டம் அவர்களைத் தண்டித்தது. குற்றவாளியாக உள்ளபோது தண்டிக்காத சட்டம் அவர்கள் திருந்தி வாழும்போது தானே தண்டித்தது. இத்தண்டனை சரியானதா? இங்கே கொன்று குவித்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதே ஒரு திறமையை தம்மிடத்தில் கொண்டவர்கள் தான். இவர்களுக்கு திருந்தும் உரிமை கூடக் கொடுக்கப்படவில்லை எனும்போது இப்படி ஒருதண்டனை அவசியமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

கோடி கோடியாகக் கொள்ளை அடிப்பவர்களை விட்டுவிட்டு கொண்டுண்ட காசைப் பொறுக்கியவர்களை அல்லவா தண்டித்தது. இது நியாயமா? ஒரு கிடங்கினுள் போதைவஸ்து தயாரிக்க இயலாது. இப்படித் தொழிற்சாலைகளால் தயார்படுத்தப்படும் போதை வஸ்துத் தயாரிப்பாளர்களை பிடித்துத் தண்டிக்க வக்கற்ற அரசும் சட்டமும் பாவனையாளர்களையும் இடைத்தரகர்களையும் தானே தண்டிக்கிறது. பெருங்குற்றவாளிகள் எங்கே சுகபோகமாக வாழ அற்ப ஆசைகொண்ட அப்பிராணிகள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். ஒருதயாரிப்பாளன் ஒராயிரம் விற்பனையாளர்கள் பலகோடி பாவனையாளர்கள். ஒரு தயாரிப்பாளனை அழிப்பதனூடாக பலகோடி பாவனையாளர்களைத் தடுக்கலாமே. இதை எந்த அரசும் முறையாகச் செய்ததில்லை. எந்த இஸ்லாம் போதைவஸ்துப் பாவிப்பது தப்பு, தண்டனைக்குரியது, மரணதண்டனை விதிப்பப்படவேண்டியது என்றதே அதே குரானை சரியாவைச் சட்டமாகக் கொண்ட இஸ்லாமியர்களும் இஸ்லாமிய நாடுகளுமே போதை வஸ்துக்களை ஏற்றுமதி செய்கின்றன. உ.ம் பாக்கிஸ்தான் ஆப்கானித்தானில் பெரும் தொழிற்சாலையாக நாட்டின் வருமானமாக இப்போதைப் பொருட்களை தயாரித்து வினையோகிக்கிறார்கள். இதில் இந்தோனேசியாவும் அடங்கும்.

மரணதண்டனைக் கெதிரான மாற்றுவழிகளைக் கண்டுபிடித்து அவற்றை அமுல்படுத்துவதனூடாக மேற்குலகம் பலவெற்றிகளைக் கண்டுள்ளது. சீர்திருத்து நடவடிக்கைகளூடாக மரணதண்டனை எனும் கொலைகளை நிறுத்தியதுடன் மனிதவளங்களை பயன்படுத்தி நாட்டை வளப்படுத்தி மனிதநேயத்தை வளர்த்துள்ளனர். ஒவ்வொரு மனிதனும் மாறுவான், திருந்துவான் என்ற அடிப்படை நம்பிக்கை மனிதர்களின் மத்தியில், அரசின் மத்தியில், மனங்களில் விதைக்கப்படவேண்டும். பெரிய கனமான பாரதூரமான குற்றங்களைச் செய்தவர்கள் மனந்திருந்தியதால் மன்னிப்பளிக்கப்பட்டு குற்றத்தடுப்பு இலாகாவில் பெரியபதவியில் உள்ளனர். ஒவ்வொரு மனிதனும் விலைமதிப்பற்ற வளங்களையும், சக்திகளையும் கொண்டவர்கள். மரணதண்டனை என்பது மாற்றுச்சிந்தனையற்ற, மூளைவளமற்ற மனிதர்களாலும் அரசாலும் நிறைவேற்றப்படும் ஒரு துர்காரியமே. யார் குற்றவாளி? பிடிபட்டபின்னர் தானே ஒருவன் குற்றவாளியாகிறான். அப்போ பிடிபடாமல் குற்றம் செய்பவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்ற பெயரில் வெளியில்தானே இருக்கிறார்கள். பிடிபடமாட்டார்கள் என்று எண்ணித்தானே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். பிடிபட்டபின்னர் குற்றவாளியாகக் கண்டு மரணதட்டனை வளங்குவதா? அல்லது வாழும்போதே குற்றச்செயல்களில் ஈடுபடாது பார்த்துக் கொள்ளவதா சிறந்தது? மரணதண்டனையை நிறுத்தி, குற்றவாளிகள் திருந்துவதற்கான சந்தர்பத்தைக் கொடுத்து, அவர்களின் முற்போக்கினைக் கண்டறிந்து, தண்டனையைக் குறைந்து, வளமுள்ள மனிதர்களை உருவாக்கி சமூகத்துக்கு பயன்பாடுள்ள மனிதர்களாக வெளியே விடுவதே நியாயமான சட்டமாகவும் மனிதநேயம் கொண்ட மனிதர்கள்வாழும் நாடாகவும் கருதமுடியும்.

தண்டனை அளிக்கும், தண்டனை நிறைவேற்றும் கூடங்களாகவே அன்று சிறைச்சாலைகள் இருந்தன. இன்று அவை சமூகத்துக்கு ஒவ்வாதவர்களை தனியே பிரித்து அவர்களை சமூகத்துக்கு ஏற்றமனிதர்களாக மாற்றும் கோவில்களாகவே சிறைகள் இன்று அறிவுஜீவிகளால் பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை இருந்தாலும் திருந்தும் வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகிறது. மரணதண்டனைகளால் எதையும் சமூகம் சாதித்ததில்லை. சாதிக்கப்போவதுமில்லை. கடவுளை நம்பும் மதவாதிகளே! கடவுளின் சிருஸ்டியைக் கொல்வதற்கு நீங்கள் யார்? சந்தர்ப்பம் சூழலே மனிதனை உருவாக்கிறது, புடம்போடுகிறது. ஆதலால் மனிதர்கள் மாறுவதற்கோ திருந்துவதற்கே மதங்களும் சமூகங்களும் அனுமதிக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான சூழல், தொடர்புகள், மனிதநேயச் செயற்பாடுகளை வளர்த்து மரணதண்டணைக்கு மரண அடி கொடுக்கப்படவேண்டும்.

மரணதண்டனையை வெறுக்கும் நோர்வே நக்கீரா 30.04.2015

1 comments :

Daoud Tharik ,  May 10, 2015 at 7:17 PM  

இதில் அனுதாபம் தெரிவிக்க என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.அவர் கொண்டு சென்ற துள் வெளியில் போயிருந்தால் எத்தனை பல நூறு பேர்கள் இறந்திருப்பார்கள்.கொலை,போதை ,கற்பழிப்பு ,விபச்சாரம் இவைகளுக்கு மரணம்தான் சரியான தண்டனை.பாதிக்கப்பட்டவனின் இடத்தில் இருந்து தண்டனை வழங்குவதுதான் சரியான வழி.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com