Friday, April 3, 2015

அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியில் ஒரு தீர்க்கமான திருப்புமுனை. Nick Beams

சீன ஆதரவிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) ஸ்தாபக உறுப்பினர்களாவதற்கு கையெழுத்திட, நாடுகளுக்கு 31.03.2015 இறுதிநாளாக இருந்தது. அது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய வெளியுறவு கொள்கை மற்றும் மூலோபாய நோக்கங்களுக்கு ஒரு முக்கிய தோல்வியைக் குறிக்கும் வகையில், வரலாற்றில் இடம் பெறும்.

வாஷிங்டனின் கடுமையான எதிர்ப்புக்கு எதிராக, 40க்கும் மேற்பட்ட நாடுகள் அவை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இன் பாகமாக இருக்க விரும்புவதாக இப்போது சுட்டிக் காட்டியுள்ளன. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உட்பட பிரதான ஐரோப்பிய சக்திகளும், அத்துடன் நோர்வே, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகியவையும் அவ்வங்கி குழுவில் இடம் பெற்றுள்ளன. சீனாவைத் தங்களின் பிரதான வர்த்தக பங்காளியாக கருதும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஏறத்தாழ எல்லா நாடுகளும், கூட கையெழுத்திட்டுள்ளன. தாய்வானுடன் சேர்ந்து, இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.

அதன் முதன்மை ஐரோப்பிய கூட்டாளியான பிரிட்டனால், அமெரிக்காவிற்கு எதிராக மிக முக்கிய அடி கொடுக்கப்பட்டது. பிரிட்டன் மார்ச் 12 இல் அதில் சேருவதற்கான அதன் முடிவை அறிவித்தது. அது, ஆசிய-பசிபிக்கில் உள்ள இரண்டு முக்கிய அமெரிக்க கூட்டாளிகளான ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உட்பட ஏனையவையும் அதை பின்தொடர அணைமதகுகளைத் திறந்துவிட்டது. ஜப்பானும் அனேகமாக ஜூனுக்கு முன்னதாக இணைய பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தோல்வியின் முழு முக்கியத்துவமும் மற்றும் அதன் நீண்டகால தாக்கங்களும் ஒரு வரலாற்று முன்னோக்கில் இருந்து பார்க்கையில் மிக தெளிவாக வெளிப்படுகின்றன.

அந்த புதிய வங்கி மீதான ஒபாமா நிர்வாகத்தின் பிரதான ஆட்சேபணைகளில் ஒன்று, அது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக்கு குழிபறிக்கும் என்பதாகும். 1944 இன் பிரெட்டென் வூட்ஸ் உடன்படிக்கையுடன் ஒருங்கிணைந்து, அந்த அமைப்புகள் அமெரிக்காவினால் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய உலகளாவிய பொருளாதார ஒழுங்கமைப்பை ஸ்தாபிப்பதில் மையத்தூண்களாக இருந்தன. அமெரிக்கா 1920கள் மற்றும் 1930களின் சீரழிவுகள் மற்றும் அது உருவாக்கிய புரட்சிகர போராட்டங்களைத் தொடர்ந்து, உலக முதலாளித்துவத்தை மறுகட்டமைப்பு செய்வதில் மைய பாத்திரம் வகித்தது.

சொல்லப் போனால், போரால் நாசமாக்கப்பட்ட ஐரோப்பாவினது மறுஸ்திரப்பாட்டிற்கான மார்ஷல் திட்டத்துடன் ஒருங்கிணைந்து, அவ்விரு அமைப்புகளுமே அமெரிக்க ஏகாதிபத்தியதின் பொருளாதார மற்றும் மூலோபாய நலனுக்காக செயல்பட்டன.

ஆனால் போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பிலிருந்து அமெரிக்கா பெரும் ஆதாயங்களைப் பெற்ற போதினும், அவற்றை அது குறுகிய பார்வையில் கருத்தில் கொள்ளவில்லை. அமெரிக்க முதலாளித்துவம் உயிர் பிழைக்க வேண்டுமானால், ஏனைய முதலாளித்துவ அதிகாரங்கள், அனைத்தினும் மேலாக, அது எவற்றுக்கு எதிராக கடுமையாக இரத்தக்களரியிலான மோதலில் சண்டையிட்டதோ அவற்றின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை உறுதிப்படுத்த, அதன் தரப்பிலிருந்து பெரும் ஆதாரவளங்களை உபயோகிக்க வேண்டும் என்பதை ஆளும் அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்கள் உணர்ந்திருந்தன.

போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு ஜேர்மனியின் விரிவாக்கத்திற்கு உதவியதுடன், அதை மீண்டுமொருமுறை ஐரோப்பாவின் தொழில்துறை அதிகாரமையமாக மாற்றியது. அதே நேரத்தில், ஜப்பானிய செலாவணி மதிப்பின் மீது —ஒரு டாலருக்கு 360 யென் என்றளவில் அது கட்டுப்படுத்தப்பட்டு இருந்ததில் இருந்து— அதற்கு வழங்கப்பட்ட விட்டுக்கொடுப்புகள், அதன் தொழில்துறைக்கு ஏற்றுமதி சந்தைகளைத் திறந்துவிட்டது. கொரிய போரின் போது, ஜப்பானில் டிரக்குகள் மற்றும் ஏனைய இராணுவ தளவாடங்களை உருவாக்குவதென எடுக்கப்பட்ட முடிவு, ஜப்பானின் வாகன தொழில்துறையின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்ததுடன், அது அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த நவீன உற்பத்தி நுட்பங்களோடு ஒருங்கிணைக்கப்பட்டு, பின்னர் அபிவிருத்தி செய்யப்பட்டது.

அமெரிக்காவின் தொழில்துறை மற்றும் பொருளாதார தகைமை, கொரிய போர் விடயத்தில் பிற்போக்குத்தனமான வடிவங்களை ஏற்றிருந்த போதினும் கூட, அது உலகளாவிய முதலாளித்துவ விரிவாக்கத்தின் புதிய கட்டத்திற்கு —அதாவது போருக்குப் பிந்தைய வளர்ச்சிக்கு— அனுகூலங்களைக் கொண்டு வர பயன்பட்டது.

தற்போதைய நிலைமையோடு என்னவொரு முரண்பாடு! அமெரிக்க முதலாளித்துவமோ இப்போது உலகின் தொழில்துறை அதிகாரமையமாக இல்லை என்பதோடு, ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ பொருளாதார விரிவாக்கத்தையும் உறுதி செய்வதற்குரியதாக இல்லை. அதற்கு மாறாக, அது உலகளாவிய ஒட்டுண்ணித்தனத்தின்-தலைமையகமாக செயல்படுகிறது. அதன் பேராசைமிக்க வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீட்டு நிதியங்கள் புதிய செல்வத்தை உருவாக்குவதில் ஈடுபடாமல், ஏனைய இடங்களில் திரட்டப்படும் செல்வ வளத்தை, பெரும்பாலும் குற்றகரமான அல்லது பாதி-குற்றகரமான நடவடிக்கைகள் மூலமாக அபகரிப்பதில் ஈடுபட்டு, உலகில் இலாபம் தரும் வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன.

அண்டைநாடுகளிடம் கையேந்தும் 1930களின் கொள்கைகள் மற்றும் தடையாணைகள் ஒரு பேரழிவை உண்டாக்கி இருந்தன என்பதை புரிந்து கொண்டு, போருக்குப் பிந்தைய உடனடிக் காலகட்டத்தில், அமெரிக்கா தடையற்ற வர்த்தகத்தின் பாதுகாவலனாக விளங்கியது. இன்றோ, பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை மற்றும் ஐரோப்பாவைச் சார்ந்து உருவாக்கப்பட்டு வருகின்ற அதுபோன்ற ஏற்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் மூலமாக, வாஷிங்டன் அமெரிக்க பெருநிறுவனங்களின் ஏகபோக அந்தஸ்தைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு பிரத்யேகவாத உடன்படிக்கைகளைப் (exclusivist agreements) பெற முயல்கிறது. 21ஆம் நூற்றாண்டிற்கான வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு உலகளாவிய விதிகளை அமெரிக்காவே எழுத வேண்டுமென ஒபாமா அறிவித்துள்ளார்.

போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அமெரிக்க மேலாளுமை, உடனடி பொருளாதார செயலெல்லைக்குள் மட்டுப்பட்டு இருக்கவில்லை. தசாப்த கால போர், பாசிசம் மற்றும் இராணுவ ஆட்சி வடிவங்கள், அத்துடன் பொருளாதார சீரழிவுகளால் பாதிக்கப்பட்டிருந்த உலகிற்கு, அதன் எல்லா முரண்பாடான அம்சங்களுக்கு இடையிலும், அமெரிக்க சமூகத்தால் ஏதோவொன்றை ஒட்டுமொத்தமாக வழங்க முடியும் என்பதாக தெரிந்தது.

மீண்டும், தற்போதைய நிலைமையுடனான இந்த முரண்பாடு இந்தளவிற்கு தெளிவாக இருக்க முடியாது. ஒருகாலத்தில் உலகின் ஏனைய பகுதிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கிய அமெரிக்க ஜனநாயகம், அதன் முந்தைய தன்மையிலிருந்து தேய்ந்துபோன கேலிச்சித்திரமாக, இப்போது நிதியியல் மற்றும் பெருநிறுவன மேற்தட்டுக்களின் சர்வாதிகாரத்தை மூடிமறைக்க தகைமையற்று உள்ளது.

அன்றாடம் பொலிஸ் படுகொலைகளில் குறைவில்லாமல் பிரதிபலிக்கப்பட்டு சமூக நிலைமைகள், இழப்புகளாலும் அரசு வன்முறையாலும் குணாம்சப்பட்டுள்ளன. உலகின் மிக உயர்ந்த சிறையடைப்பு விகிதத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவில், ஒருகாலத்தில் மிக உயர்ந்த ஊதியங்கள் வழங்கிய, மற்றும் அமெரிக்க தொழில்துறை பொருளாதாரத்தின் மையமாக விளங்கிய டெட்ராய்டில், குடிநீர் நிறுத்தப்படும் நடவடிக்கைகள் திணக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க அரசாங்கம் அதன் சொந்த மக்களையும் மற்றும் உலகின் ஏனைய இடங்களிலும் சித்திரவதை, அத்துமீறல், படுகொலைகள் மற்றும் பாரிய உளவுவேலைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களது குற்றங்களுக்காக கணக்கில் கொண்டு வரப்படாத குற்றவாளிகளால் அந்நாடு ஆட்சி செய்யப்படுகிறது.

1991 சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு, அதன் உலகளாவிய எதிராளி காட்சியிலிருந்து நீங்கியதை அடுத்து, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பொருளாதார இடம் கடுமையாக பலவீனப்பட்டிருந்த போதினும் —1987 பங்குச்சந்தை பொறிவு வரவிருந்த விடயங்களுக்கு ஒரு முன்னறிவிப்பாக இருந்த நிலையில்— அமெரிக்க மேலாதிக்கத்தை எவ்வாறாயினும் இராணுவ வழிவகைகளைக் கொண்டு பேண முடியும் என்ற சிந்தனை அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் பதிந்திருந்தது.

ஆனால் "படை தத்துவத்தின்" (force theory) மற்றொரு விளக்கவுரையாளரை மறுத்து பிரெடெரிக் ஏங்கெல்ஸ் முன்னரே விவரித்ததைப் போல, பொருளாதார அபிவிருத்திகளையும் —அதாவது தொழில்துறை, கடன் வழங்கல் மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சியும்— அவை உயர்த்திக் கொண்டு வரும் முரண்பாடுகளையும் "குருப் (Krupp) துப்பாக்கிகள் மற்றும் மாசெர் ரக கைத்துப்பாக்கிகளைக்" கொண்டு அவை "பிழைத்திருப்பதை அழிக்க" முடியுமென்ற கருத்து ஒரு பிரமையாகும்.

பொய்களின் அடித்தளத்தில் நடத்தப்பட்ட படையெடுப்புகள் மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுடன் சேர்ந்து, ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல்களையும் டிரோன்களையும் பிரயோகித்ததன் அடிப்படையில் அமைந்திருந்த, கடந்த 25 ஆண்டுகால அமெரிக்க வெளியுறவு கொள்கையானது ஒன்று மாற்றி ஒன்று என அழிவுகளை உண்டாக்கி உள்ளன.

கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வந்தாக வேண்டும் என்பதைப் போல, இப்போது ஏனைய முதலாளித்துவ சக்திகள், அவை பெரிதோ அல்லது சிறிதோ, அமெரிக்க பலிபீடம் நாசப்படுவதற்குரிய நிச்சயமான பாதை என்று தங்களைத்தாங்களே அதிலிருந்து விடுவித்துக் கொள்வதென முடிவெடுக்க தொடங்கிவிட்டன. அது தான் AIIB இல் இணைவதென்று அவர்கள் முடிவெடுத்ததன் வரலாற்று முக்கியத்துவமாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு விடையிறுக்கும்? உலகை மீண்டுமொரு முறை போருக்குள் மூழ்கடிக்கும் அச்சுறுத்தலுடன், அதன் இராணுவ ஆத்திரமூட்டல்களை அதிகரிப்பதைக் கொண்டு விடையிறுக்கும்.

1920களின் இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உயர்ந்தெழுவதை ஆவணப்படுத்தி லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகையில், “வளர்ச்சிக் காலகட்டத்தை விட" நெருக்கடி காலகட்டத்தில், அதன் மேலாதிக்கம் "இன்னும் அதிக பகிரங்கமாகவும் அதிக பொறுப்பற்றரீதியிலும்" செயல்படும், மேலும் அதன் விரோதிகளை விலையாக கொடுத்து, அவசியமானால் போர் வழிவகையைக் கொண்டேனும், அதன் சிக்கல்கள் மற்றும் சீரழிவுகளிலிருந்து அது தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள முயலும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஆனால் பகுப்பாய்வின் இறுதியில், நேற்றைய சம்பவங்களில் மிகவும் பலமாக எடுத்துக்காட்டப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார வீழ்ச்சியில், அங்கே மற்றொரு தீர்மானகரமான அம்சமும் உள்ளது.

தொடர்ச்சியாக அதிகரித்துவரும் பலம் —அமெரிக்காவின் "சிறந்த காலங்கள்" எப்போதும் முன்னால் உள்ளன— என்ற கருத்து, தசாப்தங்களாக, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலை பிறழ செய்திருந்தது. எதார்த்தம் இப்போது முன்பினும் கூடுதல் பலத்தோடு திரும்பி வந்து கொண்டிருக்கிறது.

கடந்த காலத்தின் பிரமைகளைச் சம்பவங்கள் உடைத்தெறிந்து வருவதுடன், உலக சோசலிச புரட்சிக்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு நிலைமைகளை உருவாக்கி, அவை அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர போராட்ட பாதைக்கு உந்திச் செல்லும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com