மாவையின் எழுதுவினைஞர் பொட்டுவால் நியமிக்கப்பட்ட புலிகளின் புலனாய்வாளன். போட்டுடைக்கின்றார் சங்கரியார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பதத்தை உயோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையாளருக்கு மடல் ஒன்றை எழுதியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி மாவையின் எழுதுவினைஞர் புலிகளின் புலனாய்வாளன் என்றும் அவர் பொட்டு அம்மானால் தன்னை இலக்கு வைத்து நியமிக்கப்பட்டவர் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
'தமிழ் தேசிய கூட்டமைப்பு' அல்லது த.தே.கூ என்ற பதத்தை முதன் முதல் உபயோகித்து ஓர் கூட்டமைப்பாக இணைத்த தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றைத் தவிர வேறு எந்த அரசியல் அமைப்பும் இப்பதத்தை உபயோகிப்பதை மிக்க வன்மையாக ஆட்சேபிக்கிறேன்.
எனது ஆட்சேபனைக்குரிய காரணத்தை தங்களை இலகுவாக விளங்க வைக்க த.தே.கூ ஆரம்பித்த காலம் தொட்டு கடைசியாக உபயோகிக்கப்பட்ட வட - கிழக்கு மாகாண சபை தேர்தல் நடந்த வரை உள்ள அதன் வரலாற்றை தெளிவுபடுத்த வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கென உரிய சின்னம் இல்லாதமை பெருங் குழப்பத்தையும் தப்பபிப்பிராயங்களையும் ஏற்படுத்தும் வேட்பாளர்கள் மத்தியில் ஏற்படும் குழப்பங்களுக்கு இதுவே முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ம் தேதி ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு கட்சிகளாகிய தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தழிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முறையே த.வி.கூ, அ.இ.த.கா, த.வி.இ, ஈ.ம.பு.வி.மு ஆகியவை ஒன்றிணைந்து ஓர் பொதுத் திட்டத்துக்குள் இயங்க தீர்மானித்து திருவாளர்கள் இரா.சம்பந்தன், நா.குமரகுருபரன், சு.பிரசன்னா, க.பிறேமச்சந்திரன் ஆகிய செயலாளர்கள் ஒப்பமிட்டு சில ஊடகங்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பதால் இவ் அமைப்பு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமாகிய உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு விடுத்தன.
அப்புரிந்துணர்வுக்கு அமைய நான்கு கட்சிகளும் அத் தேர்தலில் போட்டியிட்டு 5.12.2001 இல் நடந்த தேர்தலில் த.வி.கூ - 6, அ.இ.த.கா -.3 த.வி.இ- 4 ஈ.ம.பு.வி.மு - 1 தேசிய பட்டியலில் 1 பெற்றன. மாவை சேனாதிராசா தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஓர் இடத்தைப் பெற்றார்.
5.06.2002 காலமான தமிழர் வி.கூ தலைவர் திரு.மு.சிவசிதம்பரம் அவர்களின் இடத்துக்கு புதிய தலைவரை தெரிவு செய்யும் வரை எல்லாம் நல்லபடியே நடந்தது. புதிய தலைவரின் தெரிவுக்கு கூட்டதினம் நிர்ணயிக்கப்பட்டு நானே அப்பதவிக்கு புதிய தலைவராக தெரிவானேன். அக்கூட்டத்திற்கு சமூகம் கொடுக்காத முக்கிய பேர்வழி திரு.மாவை. சேனாதிராசா அவர்களே. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் 3,000 வாக்கு வித்தியாசத்தில் அவர் எனக்கு அடுத்ததாக தெரிவானார். அதற்கு முன்பு படுகொலை செய்யப்பட்டு காலியாக இருந்த திரு. அ.அமிர்தலிங்கம்; அவர்களின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் அதன் பின் காலியாகிய கலாநிதி.நீலன் திருச்செல்வம் அவர்களின் காலியான இடத்துக்கும் திரு.மாவை சேனாதிராசாவையே நியமித்திருந்தோம் என்பதும் கவனிக்க வேண்டிய விடயமாகும்.
திரு.மாவை சேனாதிராசா அவர்கள், அவருக்கு மட்டும் தெரிந்திருந்த காரணத்துக்காக அவர் அடிக்கடி வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளைச் சந்தித்து வந்தார். அப்படி ஒரு சந்திப்பின்போது 'மாவை கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளைச் சந்தித்தார்'. என்ற தலைப்பில் ஓர் செய்தி வெளியிட்டிருந்தது. அச் செய்தி இதுதான். 'தமிழரசுக் கட்சியை புனருத்தாரணம் செய்து கொண்டிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் உப தலைவர் தங்கனுடன் 14.10.2003 அன்று பல சந்திப்புக்கள் மேற்கொண்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் புனரமைப்பு விடுதலைப் புலிகளின் பணிப்பிலேயே நடைபெறுகிறது' என்பதே. அந்த வேளையில் அவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது அவருக்கு விசேட பணி கொடுக்கப்பட்டிருந்தது. 19.10.2003 அன்று ஞாயிறு ரைம்ஸ் பத்திரிகையில் வெளியாகிய அவரின் பேட்டி ஒன்றில் அந்த நிருபரின் கேள்வியானது ' தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையை இல்லாது செய்வதற்காகவா தமிழரசுக் கட்சியை புதுப்பிக்குமாறு விடுதலைப் புலிகள் உங்களைப் பணித்துள்ளனர்'. என்று கேட்டபோது அவரின் பதில் 'அதில் உண்மை இல்லை. அக் குற்றச் சாட்டை நான் முற்றாக நிராகரிக்கிறேன்' என்பதே. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தில் ஆங்கிலத்தில் உள்ள பகுதி எனக்கு தீங்கு விளைவிப்பதற்கு அவரை விடுதலைப் புலிகள் பாவிக்கின்றனர் என்பது தெளிவாகின்றது. 'கொழும்பில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள்' TOSTS தலைவர் பொட்டு அம்மானின் பணிப்புக்கமைய இரத்தினபுரியைப் பிறப்பிடமாகவும் 1983ம் ஆண்டு தொடக்கம் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவருமான முருகன் கலைச்செல்வன் என்பவரை யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்களுக்கு எழுதுவினைஞராக கடமையாற்றவென கையளிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தெகிவளை, நெடுமால் 129ஃ9 கடவத்தை வீதியில் திருமதி.ளு.பாக்கியத்துடன் இருந்து கொண்டு கொழும்பு 3 இல் உள்ள 30ஃ1ஃயு அல்விஸ் பிளேசில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி காரியாலயத்திற்கு மாவை சேனாதிராசாவுடன் வருவார். அவருக்கு வழங்கப்பட்ட பணி திரு. வீ.ஆனந்தசங்கரி (தலைவர் தமிழர் வி.கூ.)யை இலக்கு வைப்பதே.
இச்சதியில் அவரை ஈடுபடுத்த வேண்டும் என்பதல்ல என் நோக்கம் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கிணங்கி செயற்படுகிறார் என்பதையும் எனக்கு இலக்கு வைத்து செயற்பட்டவர் தப்பியோடினார் என்பதையும் நிரூபிக்க எனக்கு அந்த பத்திரிகை செய்தியைவிட வேறு எதுவித ஆதாரமுமில்லை.
அவருக்கு வழங்கப்பட்ட கையாளின் முயற்சி தோல்வி கண்டதும் திரு.மாவை. சேனாதிராசா தன்னிச்சையாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை அகற்றிவிட்டு அந்த இடத்திற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்த்துக் கொண்டு புதிய தமிழ்.தே.கூ உருவாக்கினார். ஆனால் அவரின் இச் செயலால் 22.10.2001 இல் உருவாக்கப்பட்டிருந்த த.தே.கூ. தானாக செயல் இழந்தவிட்டது. திரு. சேனாதிராசாவால் உருவாக்கப்பட்ட அமைப்பு முற்று முழுதாக புதிய அமைப்பாகும். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரால் எதையும் செய்ய முடியாது என்பதே.
புதிய கூட்டமைப்பு மோசடி மூலம் முறையான அதிகாரமும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை உபயோகித்து அதன் பெயரில் 2004 ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு ஓர் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரித்து அதில் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் தேசிய தலைமை என்றும் அவர்களே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரகடனப்படுத்தியுள்ளனர். 2004 ம் ஆண்டு சித்திரை மாதம் நடந்த தேர்தலில் மிகப் பெரும் அளவில் வாக்களிப்பில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது. தேர்தல் அவதானிப்புக் குழுவினாரால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வாக்களிப்பு நிலைய முகவர்களால் தமது கடமைகளை செய்ய முடியவில்லை. தமக்குரிய வாக்குகள் அன்றி பிறரின் வாக்குகளை ஆண்கள் பெண்கள் பிள்ளைகள் தாராளமாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலைமை கூட்டமைப்பு கட்சிகளுக்கு 22 ஆசனங்களைப் பெற உதவியது. இத்தேர்தலை நிராகரிக்குமாறு தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் விடப்பட்ட கோரிக்கை சட்டத்தினால் அதற்கு இடம் இல்லையென கூறி தேர்தல் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது.
மோசடி மூலமாக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு பிழையான ஓர் செயலை திரும்ப திரும்ப செய்தால் குறிப்பிட்ட ஓர் காலத்தின் பின் அதை சட்டபூர்வமான செயலாக உரிமை கொண்டாட முடியாதல்லவா. அவர்களால் அனுபவிக்கப்பட்டு வந்த வசதி அவர்களுக்கு சர்வதேச அரங்கில் புதியதோர் அந்தஸ்தை பெற்றுத்;தந்துள்ளது. அப்பாவித் தமிழ் வாக்காளர்கள்தான் இப்போது கிரிமினல்வாதிகள் என்ற அவப் பெயரை சுமக்கின்றனர்.
குற்றம் செய்தவர்கள் என்ற பெயரை அப்பாவித் தமிழ் வாக்காளர்களே தற்போது சுமந்து நிற்கின்றனர். ஏப்பிரல் 2004 தேர்தல் நடந்ததில் இருந்து திரு.பிரபாகரன் இறந்தது வரையான காலத்தில் செய்த குற்றங்கள் அத்தனைக்கும் பொறுப்பென நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இவற்றுள் திரு.லக்ஸ்மன் கதிர்காமர், யோசெப் பரராஜசிங்கம், சந்திரநேரு,, கிங்ஸி இராசநாயகம். சட்டத்தரணி ரவிராஜ், தியாகராசா மகேஸ்வரன் ஆகியோரின் படுகொலைகள் உட்பட இன்னும் பல அடங்கும்.
இந்த சூழ்நிலையில் தங்களுக்குரிய அதிகாரத்தை உபயோகித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பதத்தை எவரும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு உபயோகிக்காது தடைவிதிக்குமாறு வற்புறுத்தி வேண்டுகிறேன். நான் உங்களை மேலும் மன்றாட்டமாக கேட்பது இந்த நான்கு கட்சி கூட்டமைப்பினரால் அப்பாவி வாக்காளர்களுக்கு சூட்டப்பட்டிருக்கும் புலி என்ற பட்டியும் அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் கடந்த காலத்தில் த.தே.கூ அளித்த வாக்குகள் புலிகளுக்கு அளிக்கப்பட்டவை என கணிக்கப்படாதுபோகும். இந்த வியாபாரத்தில் மிக்க பயன் அடைந்தவர்கள் தமிழ் அரசுக் கட்சியினரே என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எல்லா விடயங்களிலும் சிங்கத்தின் பங்குபோல் அவர்களுக்கு கிடைத்தன. தமிழரசுக் கட்சி, விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு அமையவே, அதன் ஸ்தாபகர் இறந்து 26 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஸ்தாபகரும், அவருடன் இணைந்து செயற்பட்டவர்களும் தமிழரசுக் கட்சியை செயலிழக்கச் செய்து, அதன் வாரிசாக தமிழர் விடுதலைக் கூட்டணியே இயங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயற்பட்டனர் என்பதை, சுட்டிக் காட்டுவதில் தப்பில்லை என எண்ணுகிறேன். இந்த நிலைப்பாட்டை தந்தை செல்வாவுடன் இணைந்து தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து அதன் பொதுச் செயலாளராக செயற்பட்ட அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பாரியார் மங்கையற்கரசி உறுதிசெய்கின்றார். திருமதி அமிர்தலிங்கம் தனது அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்.
விரும்பத்தகாத சக்திகள் எவையும் தமிழரசுக் கட்சியின் சின்னத்தையும் அதன் பெயரையும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே எனது கணவர் தமிழரசுக் கட்சியின் பதிவைப் பாதுகாத்து வைத்தார். தமிழரசுக் கட்சியை அவர் ஒரு போதும் புனரமைக்க எண்ணவில்லை.
அவரால் வளர்க்கப்பட்ட சிலர் தமிழரசுக் கட்சியின் பெயரை துஷ்பிரயோகம் செய்யவும் அதனைப் புனரமைக்கவும் முயல்வது கவலைக்குரியது. இவர்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையையே இவர்கள் முறியடித்திருக்கிறார்கள்.
எனவே, தமிழரசுக் கட்சியின் புனரமைப்புக்கு நான் அங்கீகாரமோ அல்லது ஆதரவோ அளிக்கவில்லை என்பதை எல்லோருக்கும் திட்டவட்டமாக தெளிவுபடுத்திக்கொள்கின்றேன். அத்துடன் இது எமது பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒழித்துவிடும் ஒரு தந்திரோபாயம் என்ற கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனது ஆதங்கம் அவர்கள் என்னை விடுதலைப் புலிகளை உபயோகித்து வெற்றிகரமாக சதி செய்து அரசியலில் இருந்து ஒதுங்க வைத்தனர் என்பதேயாகும். தமது சொந்த நலனுக்காக விடுதலைப் புலிகளாகவும், புலிகளின் ஆதரவாளர்களாகவும் இயங்கி வந்த சிலர் அப்பாவித் தமிழ் மக்களையும், விடுதலைப் புலிகளின் பெயரையும் பயன்படுத்தி பெரும் இலாபம் அடைந்துள்ளனர்.
நன்றி.
அன்புடன்,
வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி
0 comments :
Post a Comment