Tuesday, April 14, 2015

இலங்கையில் 'நல்லிணக்கத்துக்கு குறுக்கு வழி இல்லை'-ஐ நா அதிகாரி

இலங்கையில் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தீர்வு காண சில நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டாலும், செய்ய வேண்டியவை இன்னும் நிறைய இருப்பதாக இலங்கை சென்றிருந்த ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதியான பாப்லோ டி கிரீப் தெரிவித்துள்ளார். இராணுவ வெற்றியின் மூலமே அனைவரும் ஒன்றாக வாழ்ந்துவிட முடியும் என்பது தவறான அணுகுமுறை என்பதை இலங்கை புரிந்துகொள்ளத் தொடங்கியிருந்தாலும் அனைத்து மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய விஷயத்தில் ஏராளமான பணிகள் இன்னும் உள்ளன என்று அவர் தனது அதிகாரபூர்வ பயணத்துக்கு பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் ஆகியவைற்றுக்கு பொறுப்புக் கூறுவது தொடர்பில் அரசு இன்னும் நிறைய செய்யவேண்டியுள்ளது என்றும் டி கிரீப் தெரிவித்துள்ளார்.

"அரசின் மீதான அவநம்பிக்கை மாற வேண்டும்"

அவ்வகையில் நீண்ட கால அடிப்படையில் அரசு கொள்கைள் மற்றும் அதற்கான ஆலோனைகளை வடிவமைக்கும்போது, அவை பொறுப்புக்கூறலுக்கு அப்பாற்பட்டு இனியும் வன்முறைகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்ளுதல், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் திட்டங்களுக்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்தல் போன்றவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற மிகப் பெரிய அளவிலான துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளை ஆராயும் பொருட்டு, பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டாலும் பல குழுக்களின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை என்று கூறியுள்ள அவர், எனினும் பரந்த அளவிலான பரிந்துரைகளுடன் அளிக்கப்பட்ட சில அறிக்கைகள் வெளியாயின என்றும் கூறியுள்ளார். ஆனாலும் அவ்வாறு வைக்கப்பட்ட அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை அல்லது நடைமுறைபடுத்தப்படவில்லை என்பதே பொதுவான நிலைப்பாடாக இருந்துள்ளது எனறும் அவர் கூறுகிறார்.

அரசால் அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை பாதுகாக்கவோ அல்லது அவ்வாறான சூழல் மீண்டும் ஏற்படாது என்பதை அரசு உறுதி செய்யும் வகையிலோ காத்திரமான பங்களிப்பைச் செய்யவில்லை என்பதையும் பாப்லோ டி கிரீப் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக அரசு எடுத்த முயற்சிகள் மீது மக்களுக்கு அவநம்பிக்கையே ஏற்பட்டுள்ளது எனவும் அவரது அறிக்கை கூறுகிறது.

"இடைக்கால நிவாரணம் எனும் எண்ணம் கூடாது"

இலங்கை மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும்போது இடைக்கால நிவாரணம் எனும் மனோபாவத்திலிருந்து அரசு வெளிவந்து, உண்மை மற்றும் நியாயத்தின் அடிப்படையில் பிரச்சினைகளை ஆராய்ந்து நீடித்திருக்க கூடிய வகையில் தீர்வுகளை முன்வைத்து அதை நடைமுறைபடுத்த வேண்டும் எனவும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நாட்டில் நீதித்துறையை பலப்படுத்தவும் காத்திரமான நடவடிக்கைகள் தேவை எனவும் அப்படியாக செய்வதன் மூலமே அரச நிறுவனங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் எனவும் அவரது அறிக்கை கூறுகிறது. இலங்கை முன்னேறிக் கொண்டு வரும் வேளையில் அண்மைக் காலமாக நல்லிணக்கம் எனும் சொல் அங்கு மிகவும் கவனத்தை ஈர்த்திருந்தாலும், குறுக்கு வழி மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும் பாப்லொ டி கிரீப் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நீதிக்கு கட்டுபட்ட வகையில், உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டு, இழப்பீடுகள் வழங்கப்பட்டு, தவறுகள் மீண்டும் நடைபெறா வண்ணம் உறுதிப்படுத்தப்பட்டாலே நல்லிணக்கம் ஏற்படும் என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நல்லிணக்கத்துக்கு குறுக்கு வழிகள் இல்லை"

நல்லிணக்கம் ஏற்படுவதற்கு மாற்று வழிகளை ஆராயாமல் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

சில ஆதாயங்களுக்காக பலதை விட்டுவிடுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்காமல் நடைமுறைக்கு ஒவ்வாத மாற்று வழிகளை தெரிவு செய்யுமாறு கூறுவதெல்லாம் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு உதவாமல் எதிர்மறையாகவே அமையும் எனவும் ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதி கூறுகிறார். நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அடுத்தவர்கள் மறந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு என்பது அடிப்படை உரிமை என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கு தீர்வு காண அரசு முன்னெடுக்கும் கொள்கையானது, அந்த முடிவை எடுக்கும் அரசின் கொள்கையாக இல்லாமல் ஆட்சியில் யார் இருந்தாலும் மாறாத அரச கொள்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவரது அறிக்கை வலியுறுத்துகிறது. அப்படியான கொள்கை முடிவுகள் அடுத்து வரும் அரசுகளால் அழித்தொழிக்க முடியாத வகையில் இருப்பதும் மிகவும் அவசியம் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. அரசு எடுக்கும் கொளை முடிவுகளானது அடிப்படை உரிமைகள், உண்மைகளுடன் தொடர்புடையவை, நீதி மற்றும் நியாம் சார்ந்தவை, இழப்பீடுகளுடன் சம்பந்தபட்டவை, இனியும் அவ்வாறானத் தவறுகள் நடைபெறாது எனும் உத்திரவாதங்கள் தேவைப்படுபவை என்பதை கவனத்தில் கொண்டு உருவக்கப்ப்ட வேண்டும்.



மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசு எடுக்கும் முடிவுகள் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவோ அல்லது இனம் மதம் மொழி அடையாளங்கள் போன்றவற்றை மனதில் வைத்தோ எடுக்கப்படக் கூடாது எனவும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதி பாப்லோ டீ கிரீப்பின் அறிக்கை கூறுகிறது.

அவர் இலங்கை அரசின் அழைப்பின் பேரில் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி முதல் இம்மாதம் 3ஆம் தேதி வரை நாட்டின் வடக்கு கிழக்கின் பல பகுதிகளுக்கு பயணம் செய்து, பல்தரப்பினரைச் சந்தித்து உரையாடி தகவல்களை சேகரித்ததன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த அறிக்கையின் முன்னுரையில் கூறியுள்ளார்.

-சித்தன்-

No comments:

Post a Comment