Thursday, April 9, 2015

20ம் திகதி 19வது திருத்தம் சமர்பிக்கப்பட்ட பின் பாராளுமன்றம் கலைக்கப்படும் - ஜனாதிபதி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும் அளிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளின் பரிகாரம் 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின் பாராளுமன்றை கலைக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்வரும் 20ம் திகதி 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அதன்பின் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு தயாராகும் வகையில் பாராளுமன்றை கலைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் எதிர்காலம் குறித்து தாம் மிகவும் பொறுப்புடன் செயற்படுவதாகவும் பாராளுமன்றில் தற்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றை கலைத்த பின் நடைபெறும் பொதுத் தேர்தலில் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேநேரம் உத்தேச 19ம் தீர்வுக்கு எதிராக 7 வழக்குகள் உச்ச நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதியரசர் உட்பட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு 19ம் திருத்தச்சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றின் தீர்ப்பை இன்று சபாநாயகர் பாராளுன்றில் உறுதி செய்துள்ளார்.

19வது திருத்தச் சட்டத்தின் 11 சரத்தின் 42 (3), 43 (1), 43 (3), 44 (2) , 44 (3), 44 (5) உப பிரிவுகள் மற்றும் 26வது சரத்தின் 104 (ஆ) மற்றும் 5 (ஏ) ஆகிய பிரிவுகளும் மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என சபாநாயகர் உயர் நீதிமன்ற தீர்ப்பை அறிவித்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த சிக்கலான பிரிவுகளை நீக்குவதாக கூறியுள்ளார்.

19ம் திருத்தச் சட்டம் குறித்த உயர் நீதிமன்றத்தின் கருத்தை அண்மையில் அரசாங்கம் வினவியிருந்தது.

நீதிமன்றம் இது பற்றிய தன் பரிந்துரையை சபாநாயகருக்கு அனுப்பியிருந்தது. இதனை அவர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் இன்று மாலை 03.00 மணியளவில் இது பற்றி கலந்துரையாட கட்சித் தலைவர்கள் சந்திப்பு பாராளுமன்றில் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com