ஒன்றரை பில்லியன் மக்கள் நாளொன்றுக்கு 1.25க்கு குறைவான டாலரில் வாழ்கின்றனர். By Zaida Green
உலக வங்கியால் ஏற்கனவே மதிப்பிடப்பட்ட மலைப்பூட்டும் 1.2 பில்லியனை விட, உலகளாவிய அளவில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் நாளொன்றுக்கு 1.25க்கு குறைவான டாலரில் வாழ்வதாக இங்கிலாந்தின் Overseas Development Institute (ODI) இன் புதிய ஆய்வு ஒன்று அறிவிக்கிறது.
அதீத வறுமையில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கை ஏறத்தாழ 350 மில்லியன் அளவுக்கு குறைத்து எண்ணப்பட்டிருக்கலாமென அறிவுறுத்தி, அந்த அறிக்கை, “நாளொன்றுக்கு 1.25க்கு குறைவான டாலரில் வாழ்பவர்களைக் குறித்து தற்போதைய மதிப்பீடுகள் எடுத்துக்காட்டுவதை விட, அங்கே ஏறத்தாழ கால் பங்கிற்கும் அதிகமானவர்கள் இருப்பார்கள், ஏனெனில் அந்த ஆய்வுகளில் அவர்கள் விடுபட்டுள்ளனர்,” என்று குறிப்பிடுகிறது.
அந்த அறிக்கை குறிப்பிடுவதைப் போல, உலகளாவிய வறுமை மீதான புள்ளிவிபரங்கள் "ஏறத்தாழ ஒரு கால் பங்கு அளவிற்கு குறைவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்றால், பின் 2.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள், அல்லது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர், நாளொன்றுக்கு 2க்கும் குறைந்த டாலரில் வாழ்கின்றனர் என்றாகும்.
சமூகத்தின் மிகவும் பின்தங்கிய அடுக்குகளை—அந்த ஆய்வாளர்களால் அணுக முடியாது போன வீடற்றவர்கள், அல்லது அபாயகரமான நிலைமைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை—அதன் வடிவத்திலேயே உள்ளடக்க இலாயகற்ற அந்த குடும்ப ஆய்வுகளில் அவர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்படாமல் விடப்பட்டுள்ளனர்.
“வறுமை, குழந்தை இறப்பு மற்றும் பிரசவகால இறப்பு மீதான புள்ளவிபரங்களின் மோசமான தரம்", அந்த அறிக்கையின் சில மிக முக்கிய கண்டுபிடிப்புகளாகும் என்று அந்த அறிக்கையின் முன்னனி ஆசிரியர் எலிசபெத் ஸ்டௌர்ட் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மதிப்பீடுகளின்படி, நாளொன்றுக்கு 5க்கு குறைவான டாலரில் வாழ்வதை வறுமையென ஒருவர் வரையறுத்தால், நான்கு பில்லியனுக்கும் மேலானவர்கள், அதாவது, மனிதயின மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் வறுமையில் இருப்பவர்களில் வருகின்றனர்.
இதற்கிடையே உலகின் பல கோடி மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்கள், இவர்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்து கொண்டிருப்பதுடன், சொகுசு கார்கள், ஆடம்பர கப்பல்கள் மற்றும் சாதனையளவிலான எண்ணிக்கையில் ஆடம்பர அடுக்குமாடி கட்டிடங்களில் செலவிட்டு வருகின்றனர். ஓர் ஒட்டுண்ணித்தனமான நிதியியல் பிரபுத்துவத்தின் கஜானாக்களுக்குள் கற்பனை செய்யவியலாத அளவில் செல்வத்தைப் பாய்ச்சும் நாணயக் கொள்கைகளை உலக மத்திய வங்கிகள் பின்பற்றுகின்ற அதேவேளையில், மனிதயினத்தின் பெரும்பகுதியினர் வறுமை, சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு இடையே, உயிர்வாழ்விற்கே போராடி வருகின்றனர்.
உலக பில்லியனர்களின் ஒட்டுமொத்த நிகர மதிப்பு 2015 இல், 7.05 ட்ரில்லியன் டாலராக ஒரு புதிய உயரத்தை எட்டியதாக மார்ச்சில் Forbes அறிவித்தது. 2000க்கு பின்னரில் இருந்து, உலக பில்லியனர்களில் மொத்த செல்வவளம் எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. அந்த இதழ் அறிவித்தது, “எண்ணெய் விலைகளின் வீழ்ச்சி மற்றும் ஒரு பலவீனமடைந்திருக்கும் யூரோவுக்கு இடையே, உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களின் பட்டியல்கள் உலக பொருளாதார கொந்தளிப்பிலிருந்து விலகி, மீண்டுமொருமுறை விரிவடைந்தது.”
ஆஃஸ்போம் அறக்கட்டளையின் தகவல்படி, மக்கள்தொகையின் மேலே உள்ள 1 சதவீதத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் செல்வத்தின் அளவு, அடுத்த ஆண்டு வாக்கில் அடியிலுள்ள 99 சதவீதத்தினரிடம் இருப்பதைக் கடந்து செல்லும்.
இந்த வாரம், சர்வதேச நாணய நிதியம் அதன் அரையாண்டு உலக பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டது, அதில் அது 2008 நிதியியல் முறிவுக்கு முன்னர் மேலோங்கி இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் ஒரு காலவரையற்ற காலத்திற்கு திரும்பாதென எச்சரித்தது.
சர்வதேச அளவில் பிரதான பெருநிறுவனங்களால் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பெரும் தொகைகளும் மற்றும் சாதனையளவிலான இலாபங்களுக்கும் இடையே, நிதியியல் நெருக்கடிக்குப் பிந்தைய மந்தநிலைமை உத்தியோகப்பூர்வமாக முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆறு ஆண்டுகளில் தனியார் முதலீடு வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வறிக்கை மேற்கொண்டு குறிப்பிடுகிறது. உலகின் உற்பத்தி சக்திகள் மற்றும் பரந்த பெருந்திரளான மனிதயினத்தை விலையாக கொடுத்து உலகளாவிய நிதியியல் மேற்தட்டை மேற்கொண்டும் செழிப்பாக்குவதன் மீது பொதுவாக அரசாங்கங்களும், மத்திய வங்கிகளும் மற்றும் கொள்கை உருவாக்குனர்களும் ஒரேமனதாக ஒருமுனைப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை ஆவணப்படுத்துகிறது.
ODI அறிக்கை எடுத்துக்காட்டுவதைப் போல, சிதைக்கப்பட்ட உள்கட்டமைப்பு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதல், மற்றும் ஜனநாயக உரிமைகள் அரித்தெடுக்கப்படுவது, வறுமை குறித்த ஆழமான ஆய்வுகளே தடுக்கப்படுவது ஆகியவை உலகெங்கிலும் நிலவும் சமத்துவமின்மையின் படுமோசமான மட்டங்களை வெளிப்படுத்துகின்றன.
குழந்தை இறப்பு மற்றும் பிரசவகால இறப்புகளை துல்லியமாக கணக்கிடுவதைச் சாத்தியமில்லாமல் செய்யும் வகையில், 100க்கும் அதிகமான நாடுகள் பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்யும் அமைப்புமுறையே செயல்பாட்டில் கொண்டிருக்கவில்லையென அந்த ODI அறிக்கை குறிப்பிடுகிறது. இருப்பத்தி ஆறு நாடுகள் 2009க்கு பின்னரில் இருந்து குழந்தை இறப்பு மீதான புள்ளிவிபரங்களை சேகரிக்கவே இல்லை. தற்போதைய மதிப்பீடுகளின்படி, 2014 இல் எங்கெங்கிலும் 220,000இல் இருந்து 400,000 பெண்கள் குழந்தை பிறப்பின் போது உயிரிழந்தனர். ஐந்து பிறப்புகளில் ஒன்றுக்கும் குறைவானதே, முழுமையான உள்நாட்டு பதிவு அமைப்புமுறைகளைக் கொண்ட நாடுகளில் உண்டாகிறது.
பல ஆய்வறிக்கைகள் காலங்கடந்தவையாக உள்ளன. இதனால் ஆய்வாளர்கள் பழைய புள்ளிவிபரங்களைப் புறமதிப்பீடு செய்தோ அல்லது இதர புள்ளிவிபர தொகுப்புகளுக்கு இடையிலான தொடர்புகளைக் குறித்து அனுமானங்களை மேற்கொண்டோ செயல்படுவதற்கு நிர்பந்திக்கப்படுகின்றனர். பெரும் வறுமையில் வாழும் மக்களைக் குறித்த சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட மதிப்பீடு, ஏறத்தாழ நான்காண்டுகளுக்கு முன்னர் பிரசுரிக்கப்பட்டது. துணை-சஹாரா ஆபிரிக்காவில் உள்ள 49 நாடுகளில் வெறும் 28 மட்டுமே 2006 மற்றும் 2013க்கு இடையே ஒரு குடும்ப வருமான ஆய்வறிக்கையைச் கொண்டிருந்தன. போட்ஸ்வானாவின் வறுமை மதிப்பீடுகள் 1993இல் எடுக்கப்பட்ட குடும்ப ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டதாகும்.
வறுமை மீதான மதிப்பீடுகள், வறுமை உச்சவரம்புகள் மீதான கருத்துவேறுபாடுகளால் மேற்கொண்டும் சிக்கலாகின்றன. சில அரசு-சாரா அமைப்புகள் அவற்றின் சொந்த தேசிய வறுமை கோடுகளை அமைத்துள்ளன. சான்றாக, தாய்லாந்தில், உத்தியோகப்பூர்வ தேசிய வறுமை கோடு நாளொன்றுக்கு 1.75 டாலராகும் என்பதோடு, அதன் வறுமை விகிதம் 1.81 சதவீதமாகும். ஆனால் நகர்புற சமூக குழுக்கள் வறுமை கோட்டை நாளொன்றுக்கு 4.74 டாலராக நிர்ணயித்துள்ளன, இது அந்நாட்டின் வறுமை விகிதத்தை மொத்த மக்கள்தொகையில் அண்மித்த பாதியளவிற்கு 41.64 சதவீதமாக உயர்த்துகிறது.
போர்கள் மற்றும் ஏனைய வன்முறை மோதல்கள், ஆய்வுகளைத் தடுத்தும், உள்கட்டமைப்பைச் சீரழித்தும், மற்றும் ஆவணங்களை அழித்தும், எந்தவிதமான ஆராய்ச்சியின் மீதும் ஒரு பேரழிவுகரமான தாக்கத்தைக் கொண்டுள்ளன. போருக்காக செலவிடப்படும் பெரும் தொகைகள், சமூக அவலநிலையைக் கணிசமாக குறைப்பதற்கு அவசியமாகும் தொகையை மிகச் சிறியதாக்கிவிடுகின்றன. கடந்த ஆண்டு பாதுகாப்பு துறையில் அமெரிக்கா மட்டுமே 496 பில்லியன் டாலர் செலவிட்டது, அதேவேளையில், ஐநா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தகவல்படி, “பட்டினி துயரைத் தீர்க்க உலகிற்கு ஆண்டுக்கு வெறும் 30 பில்லியன் டாலர் மட்டுமே அவசியமாகும்.”
வறுமை, சமத்துவமின்மை மற்றும் இராணுவ வன்முறையின் இத்தகைய மலைப்பூட்டும் மட்டங்கள், முதலாளித்துவ அமைப்புமுறையின் மீது ஓர் அதிர்ச்சியூட்டும் குற்றப்பத்திரிக்கையாக நிற்கின்றன. மனிதயினத்தின் பெரும் பெரும்பான்மையை விலையாக கொடுத்து சமூகத்தை மேலாதிக்கம் செய்கின்ற நிதியியல் செல்வந்த தட்டுக்களைச் செழிப்பாக்குவதே இந்த அமைப்புமுறையின் ஒரே நோக்கமாக உள்ளது.
0 comments :
Post a Comment