இந்திய அரசுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஒரு திறந்த மடல்.
எதிர்வரும் 13ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரவுள்ள நிலையில், இந்திய பிரதமருக்கு இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் சகாதேவன் பகிரங்க மடல் ஒன்றை எழுதியுள்ளதுடன் மடலின் பிரதியை இலங்கைக்கான இந்திய துாதரகத்தில் கையளித்தும் உள்ளார்.
'இலங்கை விஜயத்தின் போது இலங்கை தமிழர் நலன் சார்ந்த விடயத்தில் முன்னகர்வுகள் இன்றேல் எதிர்ப்புக்கள் வெளிக்கிளம்பும்'
ஈழத்தமிழ் மக்களுக்கு இருந்த வரலாற்று ரீதியான பிரச்சனைகள் இந்திய தலையீட்டின் காரணமாக மிகவும் சிக்கலுக்கு ஆளாகின. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் என்ற பெயரில் கழுத்தறுப்பு ஒப்பந்தம் ஒன்றில் தொடங்கி இந்திய இலங்கை ஒப்பந்தம் என்ற பெயரில் அமைதிப்படையினை அராஜக படையாக இலங்கைக்கு அனுப்பியதுடன் நில்லாமல், இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட காரணமான யுத்தத்திற்கு, நிதியுதவி, ஆயுத தளபாட உதவி, இராஜதந்திர உதவி, தொழில்நுட்ப உதவி என்ற பெயர்களில் பல்வேறு உதவிகளை வழங்கியது. இவையெல்லாம் ஈழத்தமிழரின் எதிர்கால நலனுக்காக என்று பிரச்சாரப்படுத்தப்பட்டாலும், இன்றுவரை எந்த நன்மையினையும் வடக்கு கிழக்கு தமிழ் சமூகம் அடையவில்லை.
இலங்கை தமிழ் மக்களுடன் அவர்களின் நலன் சார்ந்த விடயங்களில் இந்தியாவின் பங்களிப்பும், அக்கறையுமே இலங்கை இந்திய உறவுகளை நீடிக்க வைக்கும் என்று இந்திய முன்னணி பத்திரிகைகளான இந்தியன் எக்ஸ்பிறஸ், தினமணி, இந்து பத்திரிகைகளினதும், ஏனைய தமிழ் பத்திரிகைகளினதும், தமிழக அரசியல் தலைவர்களினதும், கருத்துக்களை நாம் இங்கு கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இந்தியாவின் இலங்கை தலையீடு காரணமாக தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன.
1. ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையக தமிழ் மக்கள் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் நாடற்றவர்களாக்கப்பட்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நாடு கடத்தப்பட்டமை இலங்கை தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட முதலாவது அநீதியாகும்.
2. அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவத்தில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த கொலை, கொள்ளை, கர்ப்பழிப்பு சம்பவங்கள்.
3. தமிழ் மக்களையும், தமிழ் இளைஞர்களையும் அவர்களது அரசியல் போராட்ட முனைப்பையும், ஆயுதப்போராட்டமாக தூண்டிவிட்டு தமிழ் பிரதேசமெங்கும் அழிவுகளை ஏற்படுத்தியமை.
இதன் காரணமாக...
* தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களை இழக்க நேரிட்டது. மாபெரும் இடப்பெயர்வுக்கு ஆளகினர். வடக்கு கிழக்கு மலையகத்தில் தமிழர்களின் சனத்தொகை குறைந்து போனது.
* எமது கடற்றொழில், விவசாயம், கால்நடைவளர்ப்பு, கல்வி, கட்டுமானம், தொழிற்றுறைகளும், கலை, கலாச்சாரங்களும் பாரம்பரிய சமுதாய உறவுகள் என்பன சீர்கெட்டன.
* தமிழ் இளைஞர்கள், யுவதிகள், சிறுகுழந்தைகள், புத்தியீவிகள், அரசியல் தலைவர்கள் என்போர் வகைதொகையின்றி அழிக்கப்பட்டனர்.
* சிறிலங்கா அரசுடன் இராஜதந்திர உறவை பேணுவதற்கும், தெற்காசியாவில் தனது அந்தஸ்தினை பேணுவதற்குமான ஒரு உபாயமாகவே இலங்கை தமிழ் மக்கள் நலன் என்ற கோசத்தை இந்திய மத்திய அரசும், இந்திய உளவுத்துறையும், பயன்படுத்துவதாக இங்குள்ள தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.
* வடக்கு கிழக்கு தமிழ் மக்களினதும், ஒட்டுமொத்த இலங்கை தமிழ் மக்களினதும் கௌரவத்தை, நலனை பேணுவதன் மூலம் மட்டுமே இந்தியா தெற்காசியா பிராந்தியத்தில் தனது பாதுகாப்பையும், அந்தஸ்தையும், தக்கவைக்க முடியும் என்பதுடன், இலங்கையுடனான உறவுகள் தொடர்ந்து நீடிக்க ஒரே வழியாகும்.
* இந்திய தமிழக தமிழ் மக்களும், இலங்கை தமிழ் மக்களும் இனத்தால், மொழியால், கலாச்சாரத்தால், பாரம்பரியத்தால், வரலாற்றால் ஒன்றுபட்டவர்கள். நிலத்தால், அரசியல் காரணத்தால் எமக்கிடையே உள்ள இடைவெளியை பிரிவு என்று எவரும் எண்ண முடியது. எமது உணர்வை பிரிக்க எவராலும் இயலாது.
* மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் இந்திய அரசின் நேரடிப் பங்களிப்புடன் நடைபெற்ற இறுதிப்போரில் தமிழ் மக்கள் எஞ்சியிருந்த அனைத்தையுமே இழந்தனர். இந்திய மத்திய அரசின் மௌனமே எம்மை அழித்தது. இன்னும் அழித்துக்கொண்டே இருக்கிறது.
* வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அனைத்து உரிமைகளும் கிடைத்து வாழ வழி செய்வோம் என்ற கோசத்தை இலங்கை அரசின் யுத்தத்திற்கு சார்பாக எழுப்பி யுத்தத்தை நடத்தி, யுத்த வாக்குறுதிகள் பலவற்றை வழங்கிய இந்தியா இதுவரை வடக்கு கிழக்கிற்கு செய்தது என்ன?
* யுத்தத்திற்கு முன்னரும், யுத்தத்திற்கு பின்னரும் வெவ்வேறு நாடுகளும், வெவ்வேறு நிறுவனங்களும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய திட்டமிட்டபோது தனது அரசியல் நலன்களுக்காக அவ்வாறான திட்டங்கள் வடக்கு கிழக்கில் வந்துவிடாமல் தடுத்தது இந்தியா தான் என்ற உண்மையை நாம் இவ்விடத்தில் கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
* வடக்கு கிழக்கு புகையிரதப்பாதை, வீதிப்போக்குவரத்து அபிவிருத்திக்கு அவுஸ்ரேலியா, சீனா அரசாங்கங்கள் உதவி செய்ய வந்ந போது அதனை தட்டிப்பறித்து இந்திய செய்துள்ள உதவியானது தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாக இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் சுயநல அரசியல் நலன் சார்ந்ததே ஆகும்.
* வடக்கு கிழக்கு அபிவிருத்தியை முற்றிலுமாக பொறுப்பேற்ற இந்தியா இன்று தமிழ் மக்களை கைகழுவி விட்டுள்ளது என்பதே உண்மை. காலம் தாழ்த்துவதும், நீர்த்துப்போகச் செய்வதும், கிடப்பில் போடுவதும், இறுதியில் கை விடுவதும் மட்டுமே ஈழத்தமிழர் நலனில் இந்தியாவின் இராஜதந்திர நிலைப்பாடாகும்.
இதற்கு ஒரு நல்ல உதாரணமாக இந்திய வீட்டுத்திட்டம் பற்றி இங்கு குறிப்பிடலாம்...
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிந்தவுடன் மகிந்த ராஜபஷ்ச தலைமையில் இந்திய சென்ற தூதுக்குழுவிடம் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50,000 வீடுகளை கட்டித் தருவாதாக வாக்களித்தது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் குடியிருப்புக்கள் வழங்கப்படும் என்றார்கள், விதவைகளுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கப்படும் என்றார்கள். 13திருத்தத்தை 1310 ஆக்குவோம் என்றார்கள்.
இப்போது நடப்பது என்ன. 2009லேயே ரூபா 600,000 (ஆறு இலட்சம்) ஒரு வீட்டுக்கு தேவை என்றோம். ரூபா 550,000 தருவதாக உறுதியளித்தார்கள். 50,000 வீடுகள் வன்னி யுத்த இழப்பிற்கு கட்டித்தருவோம் என்றார்கள். பிறகு இதனை வடக்குக்கு என்றார்கள். பின்னர் வடக்கும் கிழக்குக்கும் என்றார்கள். பிறகு வடக்கு கிழக்கு மலையகம் என்றார்கள், பின்னர் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கும் என்றார்கள். ஆனால் கடந்த 6 வருடத்தில் நடந்தது என்ன? ஒதுக்கப்பட்ட ரூபா 27,500 மில்லியனில் இன்றுவரை செலவளிக்கப்பட்டது ரூபா 9,900 மில்லியன் ரூபா மட்டுமே. இந்தியன் வங்கியில் வைப்பு செய்யப்பட்டுள்ள இந்த பணத்துக்கான வட்டி மட்டும் கடந்த 6 வருடங்களில் செலவளிக்கப்பட்டுள்ளது என்ற உண்மை நிச்சயமாக அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாகும். ( கணக்கு இதுவே – 27,500மில்லியன் ஒ 6மூ வட்டி வருடம் ஒன்றிற்குஒ6 வருடங்கள் ஸ்ரீ 9900 மில்லியன்) கணக்கு எவ்வளவு கர்ச்சிதமாக பொருந்துகிறது பார்த்தீர்களா.
இதை விட இந்திய உதவித்திட்டம் என்று அறிவிக்கும் போது நிதி இந்திய ரூபாவிலா, அமரிக்க டொலரிலா, இலங்கை ரூபாவிலா செலுத்தப்படுகிறது என்பதனை சரியாக அறிவிக்கவில்லை.
அமெரிக்க டொலரில் இந்த நிதி வழங்கப்பட்டதாக கருதப்படுவதால் வேறு ஒரு வகையில் பார்ப்போமானால் 2009ஆம் ஆண்டு இந்திய வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி அமெரிக்க டொலரில் 252.29 மில்லியன் டொலருக்கும் அது அப்போதைய இலங்கை ரூபாவில் 27,500 மில்லியன் ரூபாவாகும். 2015 இன்று டொலரிற்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு குறைந்து 132 ரூபாவாக உயர்ந்துள்ளது. இப்போது வீடு ஒன்றிற்கு வழங்க வேண்டிய தொகையும், மொத்த முதலீடும் பின்வருமாறு அமைகின்றன.
2015 இன்று ஒரு வீட்டிற்கு 660,000 ரூபா வழங்க வேண்டும். அண்ணளவாக பார்த்தால் வீடு ஒன்றிற்கு இந்திய அரசு மிச்சம் பிடித்துள்ள தொகை 110,000 ரூபா. இதன் மூலம் இந்திய அரசின் சேமிப்பு சராசரியாக 5,500 மில்லியன் இலங்கை ரூபாய்கள். கணக்குகள் வெளிப்படையான இந்த விடயத்தில் பகிரங்க விவாதத்திற்கு வரும்படி சம்மந்தப்பட்ட எவருக்கும் சவால் விடுக்கிறேன். ஆக வடக்கு கிழக்கு வீடமைப்பு திட்டத்தில் இந்திய அரசுக்கு வெளிப்படையான வருமானம் 55,000 மில்லியன் ரூபாவாகும். இதனை விட அரசியல் ஆதாயமும் உண்டு.
அடுத்த மோசடி என்னவென்றால் வீடுகளை இழந்த அனைவருக்கும் வீடு என்று அறிவித்துவிட்டு குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, பிள்ளைகள் வயது, வருமானம், தொழில் தகைமை, என்று பல்வேறு அளவுகோல்களை வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கிடையில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட வழி வகுத்துள்ளது. யுத்தத்தில் குடும்ப உறுப்பினர்களை பலரையும் பறி கொடு;த்து அனாதையாகிப்போய் தனி நபராக உள்ளவர்களுக்கு வீடு கிடையாது. ஆவர்கள் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கவும் முடியாது. யுத்தத்தில் அனைத்தையும் இழந்த காரணத்தால் ஒரு வீட்டைக்கூடு பெற உரிமையற்ற நிலை அவர்களக்க இது என்னையா அநியாயம். அனைத்தையும் இழந்த அரச ஊழியர்கள் மாத வருமானம் பெறுகிறார்கள் என்பதால் அவர்களுக்கும் வீட்டுத்திட்டம் கிடையாதாம்.
தங்கள் பெறுமதியான வாகனங்கள், சொத்துக்கள் எல்லாம் முள்ளிவாய்க்காலில் கைவிட்டு வெறுங்கையோடு முகாமிற்குப்போன எம்மக்கள் திரும்பி வந்து பார்த்தபோது தங்கள் சொத்துக்கள் எல்லாம் இரும்பு விலைக்கு அரச ஆதரவோடு விற்கப்பட்டுக்கொண்டிருக்க இந்திய உதவித் திட்டம் என்ற பெயரில் வடக்கு கிழக்கு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்பட்ட உழவு இயந்திரங்களும், கர ரக வாகனங்களும் முறை கேடாக யார்யாருக்கோ பகிரப்பட அவர்கள் கந்துவட்டிக்கு வாகனம் எடுத்து இன்று கடனாளியாய் போனார்கள்.
ஒட்டுமொத்தத்தில் கட்டுமானம் தொடக்கம் அனைத்து விடயங்களிலும் ஊழல் நடந்துள்ளது. ஆரம்ப காலத்தில் வீட்டுத்திட்டத்திற்கு பொறுப்பாக இருந்த உள்ளுர் அதிகாரிகளுக்கும் ஊழலுடன் தொடர்பு இருப்பதாக நாம் அப்போதைய இந்திய தூதுவர் மகாலிங்கத்திடம் வற்புறுத்தியதையடுத்து நடைமுறையில் சில மாற்றங்கள் வந்தாலும் இன்றுவரை கட்டுமானம் மூலப்பொருள் விநியோகம், பயனாளிகள் தெரிவு என்பவற்றில் ஊழலும், முறைகேடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வடக்கு புகையிரத பாதை திட்டத்திலும் வெளிப்படைத் தன்மை என்பது எதுவுமே கிடையாது. பற்கத்தை நடுகை செய்தல், கிறவல் பரவுதல், சல்லிக்கல்லு பரவுதல் இரயில் நிலையங்கள் புனரமைத்தல், பாலங்கள் மதல்கள் அமைத்தல், எதிலும் வடமாகாணத்தை சேர்ந்த எந்த கண்காணிப்பு நடைமுறைகளும் பின்பற்றவில்லை. சொல்லப்போனால் தமிழ் அரசியல்வாதிகளும்;, தமிழ் எம்பிக்களும் திறப்புவிழாவிற்கும், புகையிரத ஓட்டத்திற்கும் மட்டும் வருவார்கள். ஏனென்றால் இந்திய திட்டங்களில் ஏதும் விமர்சனத்தை செய்து தமிழக மக்களின் உறவை பகைத்துக்கொள்ளக்கூடாது என்ற அக்கறை தான் இதற்கு காரணம்.
எமது கேள்விகள் இவைதான்...
1. வடக்கு புகையிரதப் பதை புனரமைப்புக்கான நிதி எவ்வளவு?
2. எவ்வளவு செலவிடப்பட்டது?
3. யார் யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது?
4. புகையிரத பாதையை மட்டும் அமைப்பதா அல்லது புகையிரத நிலையங்களையும் புனரமைப்பதா?
5. என்ன காரணத்திற்காக வடக்கு புகையிரத நிலையங்களின் புனரமைப்பிற்கு தென்பகுதி நிறுவனங்களிடம் நிதி பெறப்பட்டது?
6. ஓமந்தையிலிருந்து காங்கேசந்துறை வரை 130 கி.மீ புனரமைக்க 6வருடங்கள் ஏன் ஆகியது?
7. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் 125 கி.மீ பாதை புனரமைப்பு எவ்வாறு 3 மாதத்தில் முடிக்கப்பட்டது?
8. அவ்வாறாயின் வடக்கு புகையிரத பாதை தாமதத்திற்கும், இழுத்தடிப்பிற்கும் காரணம் என்ன?
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி என்ற பெயரில் பணத்தை இந்திய புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான IRCON (ஐ.ஆர்.சீ.ஓ.என்) நிறுவனத்தில் முதலீடு செய்துவிட்டு வீட்டுத்திட்டத்தில் போன்று வட்டிக்கு தான் எங்களுக்கு திடமா?
எமது மக்களின் கேள்விகளை கேள்விகளை பகிரங்கமாக கேட்கவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்திய பிரதமாராகிய தாங்கள் இலங்கை வருவதற்கு முன்னர் எமது பிரச்சனைகளின் தீர்வுக்கான முன்மொழிவுகள் எமது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைய வேண்டும். தனியே உங்களது வருகையையிட்டு நாம் மகிழ்வடைவதற்கு எந்த காரணங்களும் எமக்கில்லை.
உங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும், விலையுயர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு உங்களுடன் கலந்துரையாடுவதற்கும், விருந்துண்பதற்கும் பலர் இப்போதே விண்ணப்பித்திருக்கலாம். அது ஒரு உணர்வற்ற சந்திப்பு என்றே நீங்கள் கருத வேண்டும்.
தமிழ் மக்களின் ஆதரவுடன் நடந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் தெரிவாகிய இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது தாங்கள் இருவரும் வெளியிட்ட கூட்டுப்பிரகடனத்தில் இலங்கை தமிழர் நலன் சார்ந்து எதுவுமே தெரிவிக்காத காரணத்தாலே பெரும் அதிர்ப்தியடைந்துள்ள எமது மக்கள் சார்பாக இவற்றை பகிரங்கமாக தெரிவிக்கவேண்டிய நிலைப்பாட்டிற்கு நாம் தள்ளப்பட்டோம்.
இதற்கு காரணம் கூறும் சிலர், அவ்வாறு ஏதேனும் தமிழ் மக்களுக்காக நீங்கள் கூறினால் சிங்கள சமூகம் அதிர்ப்தியடையக்கூடும் என்று தங்களுக்கு அறிவுறுத்தியிருக்கலாம் என்ற காரணத்தை சரியான நியாயப்பாடாக நாம் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை.
எமது நலனில் உங்களது உண்மையான அக்கறை இருப்பின் அது உருப்பெற வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.
நியாயங்கள் கிட்டாத பட்சத்தில் எமது நியாயத்திற்காகவும், உரிமைக்காகவும் அகிம்சை வழியில் தொடர்ந்து போராடுவது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். பாரத தேசத்தின் தந்தை மகாத்மாகாந்தி யின் அகிம்சைப் போராட்டத்திற்கு வடிவம் கொடுத்தவர்கள் தமிழ் மக்களே என்ற உண்மை உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம். 30 வருடங்கள் அரசியல் ரீதியாக போராடினோம். இன்னும் 30 வருடங்களுக்கு அகிம்சை ரீதியாக போராடவும் நாம் தயாராக இருக்கிறோம்.
எமது கண்ணீருக்கு காரணமானவர்கள் எமது கண்ணீருக்கு பதில் கூறாமல் நிலையான ஆட்சியினை நடத்த முடியாது. கண்ணகியை விதவையாக்கிய பாண்டிய அரசு விழ்ந்தது என்றால், ஒரு இலட்சம் ஈழத்தமிழ்ப்பெண்களை விதவைகளாக்கிய எந்த அரசு தான் வாழும். எமது சாபம் தலைமுறை தலைமுறைக்கும் தொடரும்.
எனவே நாம் உங்களிடம் இரக்கத்துடனும், வேதனையுடனும், இயலாமையுடனும் கேட்கிறோம். உண்மையின் பெயரால், சத்தியத்தின் பெயரால், நீதியின் பெயரால் கேட்கிறோம். இழப்புக்கள் மத்தியில், அழிவுகள் மத்தியில் தாங்கொணாத் துயரத்தோடும், கண்ணீரோடும் கேட்கிறோம்.
இலங்கை தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தாய்த்தமிழக உறவுகளின் தூதுவராக உங்களை நினைத்து கேட்கிறோம். தாங்கள் இலங்கை வருவதற்கு முன்னார் யுத்தத்தின் அடையாளமாகிப்போன எமது பின்வரும் சுமைகளை இறக்கி ஆறுதல் பெறுவதற்கு ஒரு திட்டத்தை அறிவிக்குமாறு கேட்கிறோம்.
1. அரசியல் கைதிகள் தடுப்பில் உள்ளவர்கள் விடுதலை .
2. கடத்தப்பட்டோர் காணாமற்போனோரை கண்டுபிடித்தல்.
3. யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்பீடுகள் வழங்குதல்.
4. விதவைகள், அனாதைகள், காயமடைந்தோருக்கான உதவிகள்.
5. வடக்கு கிழக்கு பிள்ளைகளின் கல்விக்கு வேலைவாய்ப்புக்கு உதவுதல்.
6. இடம்பெயர்ந்த, புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு தமது சொந்த காணிகளை கிடைக்கச் செய்தல்.
7. உள்ளுரில், சர்வதேசத்தில், அகதிகளாகவுள்ள எம்மக்களின் மீள்குடியேற்றம், தொழில், வீட்டு வசதிகள்.
8. போரில் இறந்தவர்களை நினைவு கூற நினைவுச்சின்னம் ஒன்றையும், நினைவு நாள் ஒன்றையும் பிரகடனப்படுத்தல்.
9. ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தல்.
10. அரசியல் தீர்வு ஒன்றுக்கான ஏற்பாடு
தமிழக மக்களுக்கும், ஈழத்தமிழ் மக்களுக்கும் உள்ள பூர்வ தொடர்புகள் காரணமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டினை ஈழத்தமிழ் மக்களும்;;;, ஈழத்தமிழ் அரசியல் வாதிகளும் எப்போதும் நினைத்;;ததில்லை
இலங்கை தமிழ் பத்திரிகைகளும் அவ்வாறன நிலைபபாட்டையே கொன்டுள்ளன. ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமது நலன் சார்ந்த விடயங்களில் எழுப்பப்படும் கோசங்கள் தவறுதலாகக்கூட தமிழகத்திற்கு எதிராக அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்திய மத்திய அரசு ஐ.நா தீர்மானம் உட்பட இலங்கை தமிழர் நலன் சார்ந்த விடயத்தில் காட்டும் மெத்தனப்போக்கு, உதாசீனப்போக்கு என்பவற்றினைக்கூட எமது மக்கள் பெரிதாக எடுத்துக்கொண்டது கிடையாது.
விடுதலைப்புலிகளின் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் கூட புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்தியாவின் உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்காக திரு.பிரபாகரன் அவர்களுடன் கடும் நிலைப்பாட்டினை எடுத்திருந்தார் என்பதும் உண்மையாகும். இலங்கை தமிழ் மக்களின் அரசியல், போராட்டம், வாழ்வியலில் இந்தியாவின் தலையீட்டின் காரணமாகவே பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்டன. மிக முக்கியமாக 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் வருகையின் பிறகே கடத்தல்கள், காட்டிக்கொடுக்கல்கள், சகோதர, போராளி குழுக்களுக்கு இடையே சண்டைகள், சட்டத்திற்கு புறம்பான வதைமுகாம்கள், தடுத்து வைத்தல்கள், காணாமற் போகச்செய்தல், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், பழிவாங்கல், கலாச்சாரம் என்பன ஏற்படுத்தப்பட்டன. தமிழ் இளைஞர்கள் கட்டாய ஆயுதப்பயிற்சிக்காக பிடித்து செல்லப்பட்டனர். ஆவர்கள் கையில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டன. அதுவே இன்றுவரை எமது தமிழ் சமூகத்தை புற்றுநோய் போல் அழித்துக்கொண்டே இருக்கிறது.
இனியும் எம்மால் பொறுக்க முடியாது. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இம்மாதம் 13ஆம் திகதி இலங்கை வரும் தாங்கள் இலங்கை அரசியல் தலைவர்களை சந்தித்து 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் தலைவர்களை சந்திக்கப்போவதாக அறிகிறோம்.
தாங்கள் மன்னார் புகையிரதப் பாதை திறப்புத்திட்டத்தை தொடங்கி வைப்பதனையும், சந்திப்புக்கள் மேற்கொள்ளப்படுவதையும் தவிர வேறு என்ன நடவடிக்கை என்பதனையும் அறிய ஆவலாய் இருக்கிறார்கள். எமது மக்களின் மேற்படி கோரிக்கைகள் தொடர்பாக எதிர்வரும் 12.03.2015 திகதிக்கு முன்னர் ஆக்கபூர்வமான பதில் ஒன்றை எதிர்பார்க்கிறோம். தவறும் பட்சத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமது சோகத்தையும், அதிருப்தியையும் வெளிக்காட்டும் முகமாக தாங்கள் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் அகிம்சை ரீதியில் போராடுவார்கள். இது எமது உரிமைக்கான போராட்டத்தின் மீள் தொடக்கமாக அமையவும் கூடும்.
நன்றி
சீ.வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்
எம்.எஸ்.சாந்தகுமார்
செயலாளர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம
0 comments :
Post a Comment