சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் நச்சு மாசுகள் இல்லை - எம்ரிடி வோல்கர்ஸ் பிஎல்சி
யாழ் குடாநாட்டின், சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் ஆபத்தான நச்சு மாசுகள் இல்லை என்று அந்தப் பிரதேசத்தின் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக ஆய்வு நடத்திய நிபுணர் குழு தெரிவித்திருக்கின்றது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் த.ஜெயசிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் கு.வேலாயுதமூர்த்தி, விவசாய பீடத்தைச் சேர்ந்த டாக்டர் நளினா ஞானவேல்ராஜா, பொறியியல் பீடத்தின் தலைவர் டாக்டர் அ.அற்புதராஜா ஆகியோர் இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தவறான முடிவுகளை மேற்கொண்டால் வதந்திகள் உருவாகி உணர்வுகள் கிளர்ந்தெழுவதன் ஊடாக யாழ் நிலத்தடி நீர் மாசடைதல் பிரச்சினை தீர்வதற்குப் பதிலாக அந்தப் பிரச்சினை மேலும் மோசமாகும் என்று வரையறுக்கப்பட்ட நொதர்ன் பவர் தனியார் நிறுவனத்தின் தாய் அமைப்பான எம்ரிடி வோல்கர்ஸ் பிஎல்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
“நாம் சுற்றாடலுக்கும் வடக்கில் தற்போது நிலவும் வருந்தத்தக்க நீர் மாசடைந்த பிரச்சினை தொடர்பிலும் எந்தவிதமான தீங்கினையும் இழைக்கவில்லை என்பதில் மிகுந்த நம்பிக்கைகொண்டுள்ளோம். சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தார்மீகப் பொறுப்பு வாய்ந்த ஒரு நிறுவனம் என்ற வகையில் நாம் கடந்த காலத்திலும் குறைந்த அளவு பாதிப்பை அல்லது தீங்கையேனும் இழைத்திருக்கவில்லை” என்று எம்ரிடி வோல்கர்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லால் பெரேரா நிறுவனத்தின் சுற்றுச்சூழல் கொள்கையினை மீள சமீபத்தில் வலியுறுத்தினார்.
எவ்வாறெனினும், எதிர்காலத்தில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பையும் இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடிய இந்தப் பிரச்சினைக்கான உண்மையான மூல காரணம் அல்லது தோற்றுவாய் மறைக்கப்பட்டு எமக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது வருத்தமளிக்கிறது. எனவே, உணர்ச்சி மேலீட்டால் மேற்கொள்ளப்படுகிற தவறான முடிவுகள் நீர் மாசடைதல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பாதிக்கும் என்பதுதான் எமது அச்சமாக உள்ளது.
நொதர்ன் மின்சார நிறுவனம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில், 1987 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்து, இலங்கை மின்சார சபையின் நிலையம் அமைந்துள்ள வளாகத்தில் உள்ள எண்ணெய்க் குளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி சுன்னாகத்தைப்பற்றிய சிற்றறிவு உள்ள எந்த ஒரு நபரும் அறிவார்.
துரதிர்ஷ்டவசமாக இந்த எண்ணெய்க் குளம் பற்றி கேள்வி எழுப்பவோ விசாரணை நடத்தவோ எந்த ஒரு நபரும் முன்வரவில்லை. ஆகவே, நீர் மாசடைதல் பிரச்சினையில் நாம் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை எந்தத் தீங்கையும் செய்யவில்லை என்ற திடமான நம்பிக்கை எமக்கிருப்பதால், அதன் உண்மை நிலையைக் கண்டறிவதற்காக சுற்றுச்சூழல் பற்றிய சர்வதேச நிபுணர்களின் ஆலோசனையுடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எனவே, சுயநலமிக்கவர்களின் வதந்திகளுக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் செவிசாய்க்காது ஐரிஐ மேற்கொள்ளும் சுயாதீனமான விசாரணைகளின் பெறுபேற்றுக்காகவும் நீதித்துறையின் தீர்ப்புக்காகவும் பொறுமையுடன் காத்திருக்குமாறு இந்த விடயத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரையும் விசேடமாக எமது வடக்கின் சொந்தங்;களையும் வினயமாக வேண்டிக்கொள்கிறோம்.
யாழ்ப்பாணத்தில் உள்நாட்டுப்போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது, குடா நாடு இருளில் முழ்கியதால் குழந்தைகள் குப்பி விளக்கு வெளிச்சத்தில் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது நொதர்ன் பவர் நிறுவனம் யாழ்ப்பாணத்திற்குக் கை கொடுத்தாகவும் திரு.பெரேரா கூறினார்.
இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு வலுசக்தி தேவையை நிறைவேற்றும் ஒரே நோக்கத்திற்காகவே எமது நிறுவனம் வட மாகாணத்திற்குப் பிரவேசித்தது. உண்மையில், மின்னுற்பத்தி நிலையமொன்றை ஸ்தாபிக்க முன்வந்த ஒரு நிறுவனம், வடக்கில் அபாயமான நிலைமை உச்ச கட்டத்தில் இருந்ததால், அந்த முயற்சியிலிருந்து விலகிக்கொண்டவேளையில், நாட்டுக்கு சேவையாற்றும் நோக்கத்தில் வட பகுதி மக்களுக்கு மாத்திரமன்றி யாழ்ப்பாணத்தின் வர்த்தகங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் முதலானவற்றின் நலன் கருதி எமது சேவையை ஆரம்பித்தோம்.
எமது பங்குதார்களுக்குப் பதில் அளிக்கக் கடப்பாடு உடையதும் பொறுப்புக்கூறக்கூடியதுமான எமது நிறுவனத்தின் செயற்பாடுகளால் யாழ் பொது மக்கள் பாதிப்படைய இடமளிக்கமாட்டோம்.
இந்தத் துரதிர்ஷ்டவசமான நீர் மாசடைதல் பிரச்சினைக்கு நாம் எந்த வகையிலும் காரணமல்லர் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன். சுற்றாடல் மாசடைவதைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்துவித செயற்பாடுகளுக்கும் எமது முழுமையான ஒத்துழைப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் யாழ் பொது மக்களுக்கும் வழங்குவோம் என உறுதியளிக்கின்றேன்.
நொதர்ன் பவர் நிறுவனம் பத்திரிகையில் வெளியான செய்தியொன்றையும் சுட்டிக்காட்டியுள்ளது. (அதாவது, 2015 ஜனவரி 25 ஆம் திகதிய பதிப்பில்) ‘2007இல் இந்த நிறுவனம் மின்சார நிலைய நிர்மாணத்தை ஆரம்பிப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டிலேயே நீரில் எண்ணெய் கலந்தமை கண்டறியப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது’
0 comments :
Post a Comment