Monday, March 23, 2015

தேசியக் கொடியும், தேசிய கீதமும் . தங்க. முகுந்தன்

இன்று பாராளுமன்றத்தில் முக்கியமாகப் பேசப்படும் தேசிய கீதப் பிரச்சினையை எண்ணி அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. மனித உரிமைகள் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளன.

வாழும் உரிமை,
உணவுக்கான உரிமை,
நீருக்கான உரிமை,
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்,
பேச்சுரிமை,
சிந்தனைச் சுதந்திரம்,

ஊடகச் சுதந்திரம்,
தகவல் சுதந்திரம்,
சமயச் சுதந்திரம்,
அடிமையாகா உரிமை,
சித்தரவதைக்கு உட்படா உரிமை,
தன்னாட்சி உரிமை,
சுயநிர்ணயம்,
ஆட்சியில் பங்குகொள்ள உரிமை,
நேர்மையான விசாரணைக்கான உரிமை,
நகர்வு சுதந்திரம்,
கூடல் சுதந்திரம்,
குழுமச் சுதந்திரம்,
கல்வி உரிமை,
மொழி உரிமை,
பண்பாட்டு உரிமை,
சொத்துரிமை.....
இதில் எமது நாட்டில் எந்த ஒரு உரிமையும் சிறுபான்மையினத்துக்கு செல்லுபடியற்ற நிலையில் தேசிய கீதத்தை ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது தனிச் சிங்களத்தில் பாடவேண்டும் என்ற கட்டளையைப் பிறப்பித்திருந்தார். இதன் காரணமாக கல்வி சார் அறிஞர் ஒருவர் கொல்லப்பட்டதும் எமது சரித்திரத்தில் வரலாறு. இன்று மைத்திரியின் புதிய அரசு தமிழிலும் பாடலாம் என்று கருத்துக்கூறி அதைப்பற்றி விவாதித்து வருகிறார்கள்.

நாட்டு வணக்கப் பாடல்கள் பெரும்பாலும் அரசு ஏற்பு பெற்ற ஒரு மொழியில் இருந்தாலும், சில நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் அரச ஏற்பு பெற்ற மொழிகளாக இருக்கும்பொழுது, அவற்றில், 2 மொழிகளிலோ, சில நாடுகளில் பல மொழிகளிலோ நாட்டுப்பண் அல்லது நாட்டு வணக்கப்பாடல் இருக்கும். கனடாவில் நாட்டுப்பண் ஆங்கிலம், பிரெஞ்ச்சு ஆகிய இரு மொழிகளில் அமைந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் அவர்களின் நாட்டு வணக்கப் பாடல் அந்நாட்டின் நான்கு நாட்டுமொழிகளில் (பிரெஞ்ச்சு, டொச், இத்தாலியன், ரோமன்சு) அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் நாட்டு வணக்கப் பாடல், ஒரே பாடலில் அந்நாட்டின் 11 மொழிகளில் ஐந்து மொழிகளில் தனிப்பகுதிகளாக அமைந்துள்ளது. எசுப்பானிய நாட்டுப்பண்ணில் இசை மட்டுமே உள்ளது, சொற்கள் ஏதும் இல்லை.

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் இறுதிக்காலத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தின் செல்வாக்கால், இலங்கையிலும் தேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது. தேசபக்திப் பாடல்கள் பல எழுதப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளின் போதும் பாடப்பட்டு வந்தன. பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சி முடிவுக்கு வந்து, இலங்கை விடுதலை பெற்றபோது, நாட்டின் இறைமையின் சின்னங்களாகத் தேசியக் கொடி, நாட்டுப் பண் என்பவற்றை உருவாக்கும் முயற்சி இடம்பெற்றது. ஏற்கெனவே புழக்கத்திலிருந்த தேசபக்திப் பாடல்களிலொன்றைத் தெரிவு செய்வதில் சிக்கல்கள் எழுந்தமையால், போட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இப்போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட கீதங்களிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்வதற்காக நடுவர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
ஆனந்த சமரக்கோன் என்பவர் 1940 ஆம் ஆண்டு எழுதி ஏற்கெனவே பரவலாகப் புழக்கத்திலிருந்த நமோ நமோ மாதா என்று தொடங்கும் சிங்களப் பாடலும் தேர்வுக்காக நியமிக்கப்பட்டவற்றுள் அடங்கும். எனினும், பி. பி. இலங்கசிங்க, லயனல் எதிரிசிங்க என்னும் இருவரால் எழுதப்பட்ட ஸ்ரீ லங்கா மாதா பல யச மஹிமா என்று தொடங்கும் பாடல் தெரிவு செய்யப்பட்டு, 1948 பெப்ரவரி 4 ஆம் தேதி இலங்கையின் சுதந்திர நாளன்று வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது.

இதன் பாடலாசிரியர் இருவரும், தேசியகீதத் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்ததால். இத்தெரிவு குறித்துச் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் இரண்டாவது, மூன்றாவது சுதந்திர தினங்களில் ஆனந்த சமரக்கோனின் பாடல் உத்தியோகபூர்வமற்ற முறையில் பாடப்பட்டு வந்தன. 1950 இல், அக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் ஆலோசனையை ஏற்று ஆனந்த சமரக்கோனின் நமோ நமோ மாதா என்று தொடங்கும் பாடலைத் தேசியகீதமாக ஏற்க முடிவு செய்யப்பட்டது.

1951 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இதற்கு முறைப்படியான அங்கீகாரமும் கிடைத்தது. இப்பாடலுக்கான இசையும் ஆனந்த சமரக்கோன் அமைத்ததே. தொடர்ந்து வந்த நாட்டின் நான்காவது சுதந்திர தினத்தன்று இப் பாடல் முதல் முதலாக, கொழும்பு, மியூசியஸ் பாடசாலையைச் சேர்ந்த 500 மாணவ மாணவிகளால் பாடப்பட்டு வானொலி மூலம் நாடெங்கும் ஒலிபரப்பப்பட்டது.

1956 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் காலத்தில் இப் பாடலின் ஆரம்ப வரிகள் நமோ நமோ என 'ந' என்னும் எழுத்துடன் தொடங்குவது அபசகுனம் என்றும், அது நாட்டுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்றும் ஒரு பகுதியினர் குரல் எழுப்பினர். தொடர்ந்து வந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின்போது, 1961 இல், செல்வத்தைக் குறிக்கும் ஸ்ரீ என்னும் மங்கல எழுத்துடன் தொடங்கும், ஸ்ரீ லங்கா மாதா என்ற வரி முதல் வரியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இப்பாடலை எழுதிய ஆனந்த சமரக்கோன் இந்த மாற்றத்தைக் கடுமையாக எதிர்த்தார் என்றும் இது தொடர்பான விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பல கட்டுரைகளை அவர் எழுதியதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இம் முயற்சியில் அவர் வெற்றியடையவில்லை. இப்பாடல் பின்னர் பொருள் மாறுபடாமல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 1950ம் ஆண்டில் தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தார்.

இலங்கையின் தேசிய கீதம் 3 மொழிகளிலும் அர்த்தம் பிசகாமல் மொழிபெயர்க்கப்பட்டு பாடப்பட்டு வந்துள்ளது.

நான் அனுராதபுரத்தில் கல்விகற்ற காலத்தில் 1975 – 1977வரை எமது பாடசாலையான அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்லூரி நிகழ்வுகளில் முதலில் பாடசாலைக் கீதம் பாடப்பட்டு நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டு வந்தது. நாம் சங்கீதம் கற்றதனால் அடிக்கடி எல்லா நிகழ்வுகளிலும் பாடுகின்ற சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த நேரத்தில்

ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

என்ற தற்போது பழக்கத்தில் உள்ள பாடலின் முதல்பந்தி மட்டுமே இருந்தது. நான் நினைக்கின்றேன் 1978 புதிய அரசியலமைப்பின் பின்னர் தேசிய கீதத்தில் கீழ்க்கண்ட 2 பந்திகள் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

ஏனெனில் 1977 இன்பின் இன்றுவரை நான் தேசிய கீதத்தைப் பாடவுமில்லை. அதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. மேலும் யாழ்ப்பாணத்தில் தேசிய கீதம் ஒரு சில இடங்களில் இசைக்கப்பட்டாலும் எல்லோருக்கும் தேசிய கீதம் தெரிந்திருக்கவில்லை.

2 தடவைகளுக்கு மேல் மாற்றஞ் செய்யப்பட்ட தேசியக்கொடி!



இலங்கை சுதந்திரமடைந்தது 4-2-1948ல். அப்போது நாட்டின் தேசியக் கொடி கண்டி அரசனின் சிங்கக்கொடி. சிறுபான்மையினத்தவர்களின் பெரும்போராட்ட எதிர்ப்புக்களின் பின்னர் 1952இல் மாற்றப்பட்ட கொடியும் 1972ல் சிறு மாற்றத்திற்குள்ளானது! எத்தனைபேருக்கு இது தெரியும்? இதனால்தான் சிறுபான்மையினத்தவர்கள் இன்றுவரை இக்கொடியை ஒட்டுக்கொடி என்பதுடன் ஏற்றுக்கொள்ளவும் மறுத்து வருகிறார்கள்.

வாழும் உரிமை – மறுக்கப்பட்ட ஒரு சமுதாயம் கொடியையோ – நாட்டின் தேசிய கீதத்தையே ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அரச ஊழியர்கள் அனைவரும் சில உறுதிமொழிகளை எடுத்திருந்தாலும் அவர்களும் தமது மனச்சாட்சிப்படி நடக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். தேசியக் கொடியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்ட வரலாறு கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் சிறுபான்மையினத்தவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை அவர்களிடம் நாட்டின் கொடியைப் பற்றியோ அல்லது தேசிய கீதத்தைப் பற்றியோ எதிர்பார்ப்பது முட்டாள்தனமானதாகும்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com