Sunday, March 15, 2015

நாம் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அதுரலிய ரத்ன தேரர்.

தமிழ் மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர். பயங்கரவாதமானது எம் இரு சமுதாயத்தினரையும் அழிவை நோக்கி இட்டுச் சென்றதாலேயே அதனை தோல்வியடையச் செய்வதற்கு நாம் முயற்சித்தோம். பௌத்த பிக்குமார் என்ற வகையில் எம் மனதில் ஒரு காலமும் தமிழருக்கெதிரான மனோபலம் இருந்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சனிக்கிழமை (14) இடம்பெற்ற சிங்கள பௌத்த கலாசார விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

வடக்கு யுத்தத்தில் தமிழ் மக்கள் பெருமளவு துயரத்துக்குள்ளானார்கள். சிங்கள மக்களின் விகிதாசார அடிப்படையில் தமிழ் மக்களின் இழப்பு அதிகம். தமிழ் சமுதாயம் கடந்த தசாப்தத்தில் சிங்களவர்களுக்கு எதிராக போர் புரிவதாகவே நினைத்தது. சிங்கள, தமிழ் சமுதாயங்கள் மிகத் தெளிவாகப் பார்க்கவில்லை. சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளின் பிழையான அரசியல் கொள்கையே இந்த சமூகக் கிளர்ச்சிக்கு அடிப்படையானது.

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமை அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் ஆகும். சிங்களவர்களின் எதிரி தமிழர்களோ தமிழர்களின் எதிரி சிங்களவர்களோ இல்லை.

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த யுத்தம் இந்தளவுக்கு வீரியமடைவதற்கு காரணம் வெளிநாட்டவர்களின் தலையீடாகும்.

எமது அரசியல் தலைவர்கள் பிழையான வெளிநாட்டுக் கொள்கைகளை பின்பற்றினர். நாங்கள் அமெரிக்கர்களில் தங்கியிருந்த வேளை, இந்தியா சோவித் தேசத்தின் பாதையில் சிந்தித்தது. சோவியத் தேசம் இன்று இல்லாததனால் உலகச் சந்தை தொடர்பில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போட்டி நடைபெறுகின்றது. நாங்கள் பொம்மலாட்டக்காரர்களாக இருப்பதால், விபரீதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

விவசாய பொருட்களில் இரசாயன பாவனையால் ரஜரட்ட பிரதேத்தின் நீர் உவர்நீராக மாற்றமடைந்து, அங்கு சிறுநீரக நோய் பரவியுள்ளது. 1 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் மரணத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறான நிலையில், வடமாகாண சபை இரசாயனமற்ற விவசாயக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்தலாம்.

யாழ்ப்பாணம், எதிர்காலத்தில் கடல்நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது. அதிகபடியான காபனீரொட்சைட்டு வாயு காரணமாக கடல்நீர்மட்டம் அதிகரிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபை இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை சூழல் ரீதியாக அழிவடையாத நாடு. அதனை பாதுகாக்கவேண்டும்.

மது, போதைப்பொருள் பாவனை, விபசாரம் என்பன சிங்கள, தமிழ் சமூகத்தில் அதிகரித்துள்ளது. இவற்றிலிருந்து சமுதாயத்தை மீட்டெடுக்கவேண்டும். எமது நாடு தற்போது பெரும் கலாசார சீரழிவுகளை எதிர்நோக்கியுள்ளது. கொழும்பிலிருந்து போதைப்பொருள் பாவனை தற்போது வடக்குக்கும் பரவி வருகின்றது. வடக்கு தெற்கு என்ற பாகுபாடின்றி எமது கலாசாரங்களை பாதுகாக்க குரல் கொடுக்கவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment