Tuesday, March 10, 2015

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழர்களுக்கே உரித்தானது: சந்திரகாந்தன்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி என்பது தமிழர்களுக்கு உரித்தானது. இதனைப் பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஒன்று வருமாக இருந்தால் அதற்கு தார்மீகமாக நாங்கள் பொறுப்பெடுத்து செய்து காட்ட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று கல்லூரி மைதானத்தில் கல்லூரி அதிபர் ஏ.ஜெயஜீவன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக இருந்த எனக்கு பதவிகளுக்கு ஆசை கிடையாது. அது தானாக வந்தது.

நான் இரண்டாவது முறை மாகாண சபையில் போட்டியிட்டு எதிர்பார்த்த வாக்கு கிடைக்காவிட்டால் ஒரு அமைச்சராக வரமுடியாது என்று பஷில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோரிடம் சொன்னேன். நான் நினைத்திருந்தால் அதிலே ஒரு அமைச்சராக வந்திருக்க முடியும்.

மாகாண அமைச்சராக இருந்து செய்யும் அபிவிருத்தியை விட அதிகமான வேலைத் திட்டத்தினை வெளியே இருந்து செய்திருக்கிறேன்.

கிழக்கு மாகாணம் முஸ்லிம், தமிழ், சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று சொன்னாலும், இந்த நாட்டிலே ஒரு அதிகாரப் பகிர்வு முறைமை தேவை என்று போராடியவர்கள் தமிழர்கள் தான். அதற்கு உயிர் கொடுத்தவர்கள் பலர். அந்த அடிப்படையில் தமிழர்களுக்கு உரித்தான விடயத்தை சந்தர்ப்பம் வருகின்ற போது பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக நாம் அரசியலுக்கு வந்து பிராந்திய அரசியல் கட்சியை உருவாக்கியிருக்கிறோம். இந்த மாகாணத்திலே வருகின்ற மாற்றத்திலே அதிகமாக தமிழர்களுக்கு செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள்ளே இருக்கின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி என்பது தமிழர்களுக்கு உரித்தானது. இதனைப் பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஒன்று வருமாக இருந்தால் அதற்கு தார்மீகமாக நாங்கள் பொறுப்பெடுத்து செய்து காட்ட வேண்டும் என்று எண்ணினோம்.

குறிப்பாக அரசியல் மாற்றத்திற்கு அப்பால் முஸ்லீம் காங்கிரஸ் மிகப் பெரிய சுருக்குவலையைப் போட்டது என்று சொல்லலாம். அது எங்களது அரசியல் சாணக்கியம் என்று முதலமைச்சர் சொன்னாலும், சம்மந்தன் அவர்களை இரண்டு முறை சந்தித்து இருக்கிறேன்.

முதலாவது முறையாக நான் சம்பந்தனை சந்தித்த போது அவர் என்னிடம் சொன்னார், தம்பி நீங்கள் எங்களிடம் இருந்தால் மகிழ்ச்சி முடிந்தால் முதலமைச்சர் எடுப்பதற்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார்.

நான் சொன்னேன். ஐயா ஆளுந்தரப்பில் 22 பேர் இருக்கின்றோம். அதில் 19 பேர் முஸ்லீம் காங்கிரசுக்கு முதலமைச்சர் வழங்குவதற்கு கைச்சாத்து இட்டுள்ளார்கள். இன்று நான் ஜனாதிபதியைச் சந்திக்கிறேன் அவரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொன்னேன்.

அவரைச் சந்தித்த போது அவர் சொன்னார், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு எதிராக செயற்பட்டிருக்கலாம். தற்போது நான் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்னுடன் இணைந்து பணியாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஏற்கனவே 19 பேர் கைச்சாத்திட்டுள்ள அடிப்படையில் நான் வெளியில் நின்று ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் கைச்சாத்திட்டேன்.

இதை இங்கிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதை பிழையான விடயமாக நாங்கள் அங்கும் பேசி இங்கும் பேசி கூத்தடிக்கிறோம் என்று சொன்னார்கள்.

இப்படியே இருக்க, முஸ்லீம் காங்கிரஸ் கையொப்பத்தை எடுத்து விட்டு முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் இருந்த சிலரை அகற்ற வேண்டும் என்ற முடிவு பூதாகரமாக வெடித்து, பத்து உறுப்பினர்கள் வெளியேற வேண்டிய சூழல் வந்தது.

நாங்கள் பத்து உறுப்பினர்கள் வெளியேறினால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த ஐந்து உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரசில் ஏழு உறுப்பினர்கள் சேர்ந்து பணிரெண்டு பேரும் எதுவும் செய்ய முடியாது.

ஏழு உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தீர்மானங்களை எடுக்கின்ற கட்சியாக இருக்க முடியும் என்றால், பதினொரு ஆசனங்களைக் கொண்ட கட்சி எவ்வாறு முடிவுகளை எடுக்கின்ற கட்சியாக இருக்க வேண்டும்.

அப்படியிருந்தும் இரண்டாவது தடவையாக சம்மந்தன் ஐயாவைச் சந்தித்துப் பேசினோம். நன்றாக வரவேற்று நீங்கள் கூறுவது நல்ல விடயம் எங்களுக்கு முதலமைச்சர் தருவீர்களா என்று கேட்டார்.

நான் சொன்னேன் முதலமைச்சர் மாத்திரம் அல்ல, அதனுடன் இன்னுமொரு அமைச்சையும் தருகின்றோம். அதே போன்று முஸ்லீம்களுக்கு இரண்டு அமைச்சுக்களும் சிங்களவர்களுக்கு ஒரு அமைச்சும் கொடுத்து சமத்துவமான ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று.

இதனை திரிவுபடுத்தி யோகேஸ்வரன் எம்.பி. கூறியிருக்கின்றாராம். அவரது தலைவரிடம் நாங்கள் போய் கெஞ்சியதாக நான் ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறேன்.

இந்தப் பதவிகளுக்காகப் போய் பேசுகின்ற நிலை வருமாக இருந்தால் அதனை விட மரணிப்பது மேல் என்று நினைக்கின்றவன் நான் எனத் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.குலேந்திரகுமார், உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பாஸ்கரன், கிராம சேவை உத்தியோகத்தர் கே.கிருஸ்ணகாந்தன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ரீ.ரமேஸ் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்க பிரதி நிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com