ஐ.நா விசாரணை அறிக்கையை அரசியலாக்க வேண்டாம்!
'செப்ரெம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை வரும். ஆனால் தேர்தல் வராதே'
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையானது எதிர்வரும் மார்ச் மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படாமல் செப்ரெம்பர் மாதமே சமர்ப்பிக்கப்படும் என்ற செய்தி முன்கூட்டியே தெரிந்த விடயமாகும்.
இது இவ்வாறிருக்க உள்ளுர் அரசியல் மட்டத்தில் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுவதற்கு முன்னரே 2009 காலப்பகுதிகளில் இந்த அறிக்கையினை ஒரு வடிவத்திற்கு கொண்டு வந்து மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த பெருமை அப்போதைய மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கே உரியது. அவரே இந்த அறிக்கையினை பலப்படுத்தி இந்த நிலைமை வரைக்கும் வழிநடத்தியிருந்தார்.
அப்போதைய இலங்கை அரசாங்கம் இந்த அறிக்கையினை பிற்போடுமாறும், தாமதிக்குமாறும், உள்ளடக்கத்தை குறைக்குமாறும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததுடன், நவநீதம் பிள்ளைக்கும், ஐ.நா செயலாளருக்கும், அமெரிக்க தூதுவருக்கும்,ஐரொப்பியநாடுகளுக்கும், இந்தியாவிற்கும் எதிராக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டிருந்தது.
மிக முக்கியமாக தமிழரின் தாயகப் பகுதிகளிலும் கூலிக்கு ஆட்களைத் திரட்டி அப்போதைய அரசாங்கத்தினால் ஐ.நாவுக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக ஐ.நாவுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக விமல் வீரவம்சவினால் உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றும் நடத்தப்பட அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபஷ்ச பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்த நகைச்சுவைக் காட்சிகளும் தென்னிலங்கையில் இடம்பெற்றதனை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்? ஆனால் இறுதியில் என்ன நடந்தது. ஐ.நா பிரேரணையை நிறைவேற்றியிருந்தது.
ஓன்றை நாங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். ஐ.நா அமைப்பு ஒரு அரசியல் அமைப்பல்ல. சர்வதேச இராஜதந்திர விடயங்களை கையாளும் ஒரு அரச சார்பற்ற அமைப்பாகும். அத்துடன் மனித உரிமை விடயத்தில் உலகத்தில் பொறுப்புக் கூறலுக்கும,; நம்பகத்தன்மைக்கும், வெளிப்படைத் தன்மைக்கும் பெயர்பெற்ற ஒரு முதல்நிலை அமைப்பும் ஆகும்.
மறுபக்கமாகப் பார்த்தால் இலங்கை மீதான ஐ.நா விசாரணை அறிக்கைக்கு பிரேரணையை கொண்டு வந்த நாடு என்ற வகையில் அமெரிக்காவின் பங்கும் மிக முக்கியமானது. மனித உரிமை விடயத்தை பொறுத்த வரையில் பிரேரணை கொண்டு வந்த நாடு என்ற முறையில் அந்த பிரேரணைக்கு தொடர் ஆதரவினை வழங்கும் தார்மீகப் பொறுப்பு அமெரிக்காவிற்கு உண்டு. இது தொடர்பான அறிக்கையினையும், உறுதிப்பாட்டையும் அமெரிக்க தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இங்குள்ள மக்களினதும், மக்கள் பிரதிநிதிகளினதும், அரசியல்வாதிகளினதும் கருத்தினை 2015 தொடக்கத்தில் அறிந்த பின்னரே தனது நிலைப்பாட்டினை அமெரிக்கா எடுத்தது என்பது உண்மையாகும். சொல்லப் போனால் மார்ச் மாதத்திற்கும் செப்ரெம்பர் மாதத்திற்கும் இடையில் 6 மாதம் மட்டுமே கால இடைவெளி உள்ளது. 60 வருடம் போராடி, 6 வருட யுத்த முடிவில் உள்ள தமிழ் மக்கள் இந்த 6 மாத காலத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுடன், அமெரிக்க அரசாங்கமும், ஐ.நா சபையும் இந்த தீர்மானத்தின் மீது கொண்டுள்ள பற்றுறதியில் நம்பிக்கை கொண்டும் இருக்கிறார்கள். இந்த உண்மை நிலை இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் தெரியாதது அல்ல.
அப்படி உண்மை தெரிந்தும் ஏன் பாசாங்கு அறிக்கைகள் விட்டுக்கொண்டும், நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டும் இருக்கின்றார்கள் என்றால் விடயம் வெளிப்படையானது. 'ஆறு மாதத்திற்கு பிறகு ஐ.நா அறிக்கை வரும் ஆனால் அரசியல் களம் வருமா ஐயா' 2015 நாடாளுமன்ற தேர்தல் களத்தை குறிவைத்தே ஐ.நா அறிக்கையினை கையிலெடுத்து எமது அரசியல்வாதிகள் விளாசிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஆக தமிழ் மக்களின் இரத்தம், சதை, பிணம், இழப்புக்களின் மீது அரசியல் பிழைப்பு நடத்தியது போதாது என்று இராஜ தந்திர களமான ஐ.நாவையும் அரசியற் களமாக்கியிருக்கின்றார்கள். இதன் விளைவு தென்னிலங்கை அரசியற்களம் ஐ.நாவிற்கும், அமெரிக்காவுக்கும் கடந்த காலத்தில் தீட்டாகியது போலும், தமிழர் அரசியற்களமும் தீட்டுப்பட்டுப்போகும் என்ற எச்சரிக்கை மட்டுமே எம்மால் செய்யக்கூடியது. முடிவு மக்கள் கையில் உள்ளது.
இவ்வண்ணம்
கே.வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்
0 comments :
Post a Comment