Sunday, February 1, 2015

கிழக்கின் புதிய முதல்வரை விரைவில் அறிவிப்போம்!

இலங்கையில் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியில் ஏற்படவுள்ள மாற்றத்தின் அடிப்படையில் அடுத்த ஓரிரு நாட்களில் புதிய முதலமைச்சரை தமது கட்சி அறிவிக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

புதிதாக அமையவுள்ள ஆட்சியில் பங்கெடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சிகளுக்கு திறந்த மனதுடன் அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.

2012ம் ஆண்டு கிழக்கு மாகாணசபை தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தனித்து ஆட்சியமைக்க பெருன்பான்மை பலம் இல்லாதிருந்த நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை பெற்று ஆட்சியை அமைத்துக் கொண்டது.

அவ்வேளை 5 ஆண்டு ஆட்சியில் முதலமைச்சர் பதவியின் முதல் இரண்டரை ஆண்டுகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் என உடன்பாடு காணப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றது.

அந்த உடன்பாட்டுக்கு அமைய, கிழக்கு முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு உறுதியளித்துள்ளதாக ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இடம்பெறும் என்றும் தங்களின் அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணையவேண்டும் என்று விரும்புவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறினார்.

மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலும் ஆளுங்கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்த நிலையிலேயே புதிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன.

கிழக்கு மாகாணசபையில் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

மூன்று தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் கிழக்கு முதலமைச்சர் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இந்நிலையில் ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் அவர் கூறினார்.

(பிபிசி)

No comments:

Post a Comment