Monday, January 19, 2015

ஏகாதிபத்திய போர், “பயங்கரவாதத்தின் மீதான போரும்” ஜனநாயகத்தின் முடிவும்! Chris Marsden

சார்லி ஹெப்டோ ஊழியர்களும் அதன்பின் பணயக் கைதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதில் அதிர்ச்சியடைந்திருப்போர் முற்றுமுழுதான ஊடகச் செய்திகளாலும் “உணர்ச்சியற்ற கொடூரம்” குறித்த பாசாங்கான கண்டனங்களாலும் தமது திறனாயும் தன்மைகள் மழுங்கடிக்கப்படுவதை அனுமதித்து விடக் கூடாது.

ஜனவரி 7 அன்றான பயங்கரவாதத் தாக்குதல் முதலாக, கொலைகளால் உருவாக்கப்பட்டிருக்கும் குழப்பம் மற்றும் நோக்குநிலைதவறிய நிலைகளைப் பயன்படுத்தி பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் அரசாங்கம் 10,000 துருப்புகளையும் ஆயிரக்கணக்கிலான போலிசாரையும் குவித்திருக்கிறது. “பயங்கரவாதத்திற்கு எதிரான, ஜிகாதியிசத்திற்கு எதிரான, தீவிரப்பட்ட இஸ்லாமிற்கு எதிரான” ஒரு போரில் பிரான்ஸ் ஈடுபட்டிருப்பதாக பிரதமர் மானுவல் வால்ஸ் அறிவித்திருக்கிறார். Le Monde தனது ஜனவரி 8 பதிப்பின் தலைப்புச் செய்திக்கு “பிரான்ஸின் செப்டம்பர் 11” என்று தலைப்பிட்டது.

வெளிநாடுகளில் நவகாலனித்துவ போர்களையும் சொந்த நாட்டில் ஒடுக்குமுறையையும் விரிவுபடுத்துவதற்காய் பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற விடயம் ஈராக்கில் ISIS படைகளுக்கு எதிராக பிரெஞ்சு வான்வழித் தாக்குதல்களை விரிவுபடுத்துவதற்கு ஆதரவாக பிரான்சின் தேசிய சட்டமன்றத்தில் செவ்வாயன்று 488 க்கு 1 என்ற விகிதத்தில் வாக்குகள் பதிவானதில் அடிக்கோடிடப்பட்டுக் காட்டப்பட்டது.

கால்வாய்க்கு அப்பால் பிரிட்டனில், பிரதமர் டேவிட் கேமரூனின் அரசாங்கம் அரசுக் கண்காணிப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும் இணைய மறைகுறியீட்டு (encryption), முறையை பயன்படுத்துவதற்கு தடைவிதிப்பது உள்ளிட கருத்து சுதந்திரம் மற்றும் அந்தரங்கத்திற்கான உரிமைகளை வெட்டிக் குறைப்பதற்கான புதிய நடவடிக்கைகளுக்கும் சூளுரைத்திருக்கிறது. ஐரோப்பிய எல்லைக் கட்டுப்பாடுகளை மறுஅறிமுகம் செய்வது உள்ளடங்கலான இதேபோன்ற கோரிக்கைகள் கண்டமெங்கிலும் அரசாங்கங்களால் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒரு வாரத்துக்கு முன்பு 17 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான பதிலிறுப்பாகத்தான் இத்தனை பெருமளவிலான நடவடிக்கைகள் அமுல்படுத்தப் பெறுகின்றன என்று கூறுவது நம்பக்கூடியதல்ல. அவர்கள் ஜனவரி 7 க்கு நீண்ட காலம் முன்பே தயாரிப்புகளில் இருந்தனர். “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பேரில் முன்னதாக எடுக்கப்பட்டு வந்த ஜனநாயக-விரோத நடவடிக்கைகளது ஒரு பரந்த வரிசையின் மீது அவர்கள் மேலும் கட்டியெழுப்புகின்றனர்.

சர்வதேச வெளிப்பாடுகளிலும் சரி உள்நாட்டு வெளிப்பாடுகளிலும் சரி இந்தப் ”போரின்” நோக்கம் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையில் உலகம் மறுபங்கீடு செய்யப்படுவதற்கான அரசியல்ரீதியான ஒரு காரணநியாயத்தை உருவாக்கியளிப்பதே ஆகும். “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது காலனித்துவ-மாதிரி மேலாதிக்கத்தை மறுஸ்தாபகம் செய்வதற்கும் உலக மக்களை நிதி மூலதனத்தின் உத்தரவுகளுக்காய் கீழ்ப்படியச் செய்வதற்குமான ஒரு போலிக் காரணமும் அதற்கான அரசியல் கட்டமைப்புமே ஆகும் என்பது 13 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர் தெள்ளத்தெளிவாகியிருக்கிறது.

மில்லியன் கணக்கான உயிர்களையும் சொல்லப்படாத மனித துயரத்தையும் காவு கொடுத்து எண்ணெய், எரிவாயு மற்றும் பிற புவிமூலோபாய வளங்களின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு வசதியான வகையிலான கைப்பாவை ஆட்சிகளை அமரவைப்பதற்காகவே ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா மற்றும் பிறவெங்கிலுமான இராணுவத் தலையீடுகள் நடத்தப்பட்டிருந்திருக்கின்றன. இந்த குருதிகொட்டும் மற்றும் ஒருதரப்பான மோதல்களின் பாதையில், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகள் நிராயுதபாணியான அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டுமழை பொழிந்திருக்கின்றன, சித்திரவதை மற்றும் படுகொலைகளை நடத்தியிருக்கின்றன, அத்துடன் போர்க் குற்றங்களையும் இழைத்திருக்கின்றன. ஒட்டுமொத்த நாடுகளுமே நாசமாக்கப்பட்டிருக்கின்றன.

இத்தகைய நடவடிக்கைகளால், உள்நாட்டின் அரசியல் வாழ்வில் எத்தகையதொரு ஆழமான பாதிப்பையும் கொண்டிருக்காது என்பதை உண்மையாக எவரொருவரும் நம்பமாட்டார்கள். ஒரு பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில், மக்கள் இனரீதியாகவும் தேசியரீதியாகவும் பன்முகப்பட்டவர்களாகியிருக்கின்ற நிலையில், ஏகாதிபத்தியத்தின் குற்றங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் அவமதிப்பு எல்லைகள் இல்லாதுள்ளது. குறிப்பாக சிறுபான்மை மற்றும் புலம்பெயர் சமுதாயங்களுக்கு உள்ளிருக்கும் நிலைமையாக இதுவே இருக்கிறது. வேலைவாய்ப்பின்றி நிர்க்கதியான வறுமை நிலைமைகளை எதிர்நோக்கும் நிலையில் மில்லியன் கணக்கானோரை வைத்திருக்கும் நிலையில் தொழிலாளர்களது வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களில் இவர்களே முக்கிய பாதிப்புக்குள்ளாகியவர்களாக ஆகியுள்ளனர்.

பழைய சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள் பெரு வணிகத்தின் வெளிப்படையான கருவிகளாக ஆகியிருக்கின்றன, தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தின் கரங்களாகச் செயல்படுகின்றன, பல்வேறு போலி-இடது குழுக்களும் சோசலிசத்தை மறுத்து ஏகாதிபத்தியப் போர்களுக்கு ஆதரவாய் அணிவகுத்திருக்கின்றன என்ற உண்மையும் இந்த நச்சுக் கலவையுடன் சேர்ந்து கொள்கிறது.

இந்த சக்திகள், தொழிலாள வர்க்கத்தை ஆளும் உயரடுக்கினருக்கு எதிராக அணிதிரளுவதில் இருந்து தடுப்பதற்கும், அதற்கு ஒரு முற்போக்கான சோசலிச மாற்றினை வழங்க மறுப்பதற்கும் தம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்ய தம்மை அர்ப்பணித்திருக்கின்றன. மிகவும் நோக்குநிலைதவறிய மற்றும் விரக்தியடைந்த பிரிவுகள் தாங்கள் முகம்கொடுக்கும் சமூக, அரசியல் மற்றும் கலாச்சார ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான ஒரு வழியாக பயங்கரவாதத்தினை நோக்கி திருப்பப்படுவதற்கான நிலைமைகளை இது உருவாக்கியிருக்கிறது.

பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் இருக்கக் கூடிய அரசு எந்திரங்கள் தமது ஒடுக்குமுறை ஆயுதக்கிடங்கை வலுப்படுத்துவதற்கு நியாயம் கற்பிக்கவும் உலகின் ஆதாரவளங்கள் மீது அவர்களது கட்டுப்பாட்டினை முன்னெடுக்கவும், தாமே பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஒத்திசைந்து செயல்பட்டிருக்கின்றன.

இந்தத் தாக்குதலை ஏற்புடையதாக்கவே இஸ்லாமிய-அச்சம் தூண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. சார்லி ஹெப்டோ இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவான ஒரு ஆழ்ந்த பிற்போக்குத்தனமான பாத்திரத்தை நெடுங்காலமாய் ஆற்றி வந்திருப்பதோடு, முஸ்லீம்களையும் முகமது நபியையும் சிறுமைப்படுத்துகின்ற வெறுக்கத்தக்கவையும் முட்டாள்தனமானவையுமான கார்ட்டூன்களில் நிபுணத்துவம் படைத்த ஒரு முஸ்லீம்-விரோத வெறுப்புப் பத்திரிகையாக தன்னை ஸ்தாபித்திருக்கிறது. இனவாத கேலிச்சித்திரங்களின் ஒரு வரிசையையே இது வெளியிட்டிருக்கிறது.

மிகப் பயங்கரமான பதிப்பு என்றால் நவம்பர் 3, 2011 அன்றான “Charia Hebdo” ஐ சொல்லலாம். முகமதுவே “விருந்தினர்-ஆசிரியராக” வேலைசெய்து தந்ததாக சொல்லப்பட்ட இந்தப் பதிப்பு லிபியாவில் ஆட்சியை-மாற்றுகின்ற அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கையில் பிரான்ஸ் பங்கேற்றதற்குப் பின்னர் வெளியிடப்பட்டது.

முகமதுவின் இன்னுமொரு சிறுமைப்படுத்தும் கேலிச்சித்திரம் இடம்பெற்றிருக்கும் வகையில் இன்றைய நினைவுச்சின்னப் பதிப்பின் வெளியீடு, பிரெஞ்சு அரசின் ஒரு அரசியல் ஆத்திரமூட்டல் ஆகும். 3 மில்லியன் பிரதிகளை அச்சிடவும், அதனை 16 மொழிகளில் உலகளாவ விநியோகம் செய்யவும் சுமார் 1 மில்லியன் யூரோவின் அளவுக்கு இது நிதியாதாரம் அளித்திருக்கிறது. கூடுதலாய் மில்லியன் கணக்கான நிதிகளை கூகுள், கார்டியன் மீடியா குழுமம், Le Monde, Canal Plus, Mail International மற்றும் பிற ஊடக நிறுவனங்கள் பங்களிப்பு செய்திருக்கின்றன. இனவாத மற்றும் தேசியவாத மனோநிலையைக் கிளறி விடுவதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கக் கூடிய ஒரு மிகமிகப் பெரிய சித்தாந்த அமைப்பில் சார்லி ஹெப்டோ ஒரேயொரு சக்கரம் மட்டுமே ஆகும். தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அதிர்ச்சித் துருப்புகளாக நிறுத்தப்படத்தக்க வகையிலான அதிவலது இயக்கங்களான பிரான்ஸில் தேசிய முன்னணி (FN), ஜேர்மனியில் பெஹிடா (Pegida), பிரிட்டனில் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி (UKIP) ஆகியவற்றிற்கு அத்தியாவசியமான விளைநிலத்தினை வழங்குவதே இதன் நோக்கமாக இருக்கிறது.

வெளிநாட்டிலான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களும் அவற்றுடன் கரம்கோர்த்து தாயகத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நடத்தப்பெறுகின்ற தாக்குதலும், ஜனநாயகத்துடன் இணக்கமுற முடியாதவை என்பதே முன்னெப்போதையும் விட வெளிப்படையாகவும் அடிக்கடியும் ஆகியிருக்கக் கூடிய இராணுவ/போலிஸ் நடவடிக்கைகளில் இருந்தும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதலில் இருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ள அடிப்படையான முடிவாகும். போலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களுக்கு திரும்புவதன் மிக வளர்ந்த வெளிப்பாடுகளில் பிரான்ஸ் ஒன்றே ஒன்று மட்டுமே ஆகும்.

ஒன்றுதிரட்டப்படுகின்ற மிகப் பரந்த ஒடுக்குமுறை எந்திரமானது, மக்களில் ஒரேயொரு பிரிவினருக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்படவிருப்பதாக நம்பினால் அது மிக அடிப்படையானதொரு அரசியல் பிழையாக இருக்கும். எங்கெங்கிலும் தொழிலாள வர்க்கம் முற்றான ஏழ்மை நிலைக்கு கீழிறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, ஏனென்றால் வேலைகள் அழிக்கப்படுகின்றன, ஊதியங்கள் வெட்டப்படுகின்றன, சுரண்டல் அதிகரிக்கிறது, உயிர்நாடியான சமூக வசதிகள் அழிக்கப்படுகின்றன. இது வர்க்கப் போராட்டம் ஒன்றின் வெடிப்புக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது என்பதை ஆளும் வர்க்கம் மிக நன்றாக புரிந்து வைத்திருப்பதால், அதற்கேற்றவாறு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது.

வர்க்கப் போராட்டத்தின் அடுத்த கட்டமானது மிருகத்தனமான அரசு ஒடுக்குறை நிலைமைகளின் கீழேயே உருவாக முடியும். தொழிலாளர்கள் ஒரு புரட்சிகர மோதலில், அதாவது அதிகாரத்திற்கான ஒரு போராட்டத்தில், தாங்கள் பங்குபற்ற வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து அதன் அடிப்படையில் தமது போராட்டங்களை ஒழுங்கமைத்துக் கொள்வது கட்டாயமாகும்.

சுமார் கால் நூற்றாண்டு காலமாக உலக ஏகாதிபத்தியமானது, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பையும் ரஷ்யாவிலும் சீனாவிலும் முதலாளித்துவம் மறுஅறிமுகம் செய்யப்பட்டதையும் சாதகமாக்கி 1991 இல் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் முன்னவர் பிரகடனம் செய்தாரே அந்த “புதிய உலக ஒழுங்கை” கொண்டு வருவதற்காய் முனைந்து வந்திருக்கிறது. புஷ் உரைத்த ஒழுங்கு, உலகளாவிய முன்னேற்றம் என்ற மொழியால் மூடப்பட்டதாய் இருந்தது. 1991 வளைகுடாப் போரானது, “அமைதி மற்றும் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய மனிதகுலத்தின் உலகளாவிய அபிலாசைகளை சாதிக்கின்ற பொதுவான உயர்நோக்கத்தின் பொருட்டு பல்தரப்பட்ட நாடுகளும் ஒன்றாக ஈர்க்கப்படுவதான” ஒரு உலகத்திற்குக் கட்டியம் கூறுவதாக அவர் கூறினார்.

எதார்த்தமோ நாம் இன்று காணுவதாக இருக்கிறது. ஏகாதிபத்தியமானது மனிதகுலத்தை பின்னோக்கி இழுத்துச் சென்று ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு உயிர்வாழும் கொடுங்கனவிற்குள் அமிழ்த்தியிருக்கிறது.

இதற்கான விடை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழான சோசலிசத்துக்கான அரசியல் போராட்டத்திலேயே காணமுடியும். ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கும் மற்றும் போருக்குமான எதிர்ப்பே முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் உச்சகட்டமாகும். அத்தாக்குதலுக்கு தலைமை கொடுப்பதற்கும், ஏகாதிபத்திய வன்முறை மற்றும் இராணுவவாதம் மறுஎழுச்சி காண்பதற்கு எதிரான புரட்சிகர எதிர்ப்பின் சர்வதேச மையமாக ஆவதற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உறுதிபூண்டுள்ளது.

No comments:

Post a Comment