Tuesday, January 6, 2015

பேதலிக்கும் பேரினவாதம் - ஓர் அரசியல் கண்ணோட்டம்

மனிதாபிமானம் மரத்துப்போன மனிதர்களின்” தலைமைத்துவத்தின்கீழ் இங்கு நாம் வாழ்கின்றோம். காமமும், ஆடம்பரமும், மோசடியும் மிக்க அரசியல்வாதிகள் இவர்கள்.கற்பொழுக்கமுடைய மனிதர்கள் அரசியலில் சங்கமிக்கும் காலம் மலையேறிவிட்டது. ஒரு இனத்தை அழித்து இன்னொரு இனத்தை பாதுகாப்பதுதான் இவர்களது அரசியல் ராஜதந்திரமாகும். இதற்கு பேரினவாதத்தை துணைக்கு அழைப்பதும், அதற்கு சிறுபான்மை அரசியல் தலைமைத்துவங்கள் சோரம்போவதும்தான் இன்றைய எமது அரசியல் தீமையாக எனக்குப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் கொன்றதை, கொண்டாடிக்கொண்டிருக்கும் தலைவரை, அடிவருடிக்கொண்டிருக்கும் எமது அரசியல்வாதிகள் முற்றாக நிராகரிக்கப்படவேண்டியவர்கள்.அடுத்து அளுத்கமை அனர்த்தங்களுக்குக் காரணமாக இருந்து அப்பாவி முஸ்லிம்களின் இன்னுயிர்களை காவுகொள்ள வைத்த “கறுப்பு ஜூன் நிகழ்வை” மறந்து செயல்படும் மெத்தனப்போக்கு அடுத்து இனங்காணப்படவேண்டிய விடயம். உலகின் “பௌத பயங்கரவாத முகம்” என இனங்காணப்பட்ட “விராஜ் தேரருக்கு” விசா வழங்கி கௌரவித்து பேரினவாத நச்சுக்கருத்துகளை கக்கவைத்து, எதிர்காலத்தில் இன்னொரு இனச்சுத்திகரிப்பிற்கு தூபமிடக்காரணமாக இருக்கும் தலைவரை தொடர்ந்தும் அடிவருடும் எமது அரசியல்வாதிகள் முற்றாக நிராகரிக்கப்படவேண்டியவர்கள்தான். இந்த மூன்று காரணங்களுமே எதிர்க்கால அரசியலை தீர்மானிக்க எமக்குப்போதுமானதாகும்.

துப்பாக்கிரவைகள் ஓய்வுபெற்றதும், இனவாத அரசியல் அரங்கேறின.இது ஒரு சாதாரண பாமரனுக்கும் தெரியக்கூடியதாக இருந்தது. அதேவேளை எமது அரசியல்வாதிகள் பேரினவாதத்திற்குச் சோரம்போய்,சிறுபான்மையினருக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவாக கை உயர்த்தி, பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பலத்துடன் அது நிறைவேற ஒத்துழைத்தனர். 18ம் சீர்திருத்தச்சட்டம் இவர்களின் ஆதரவுடன்தான் நிறைவேறியது.இன்று ஜாதிக ஹெல உறுமய ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறி எதிரணியில் உள்ளதால், எதிரணிக்கு எம்மால் ஆதரவளிக்க முடியாதென்றுகூறும் ரவூப்ஹகீம் அவர்கள், எந்த மனச்சாட்சியிலிருந்து பேசுகிறார் என்பதுதான் எமது முதற்கேள்வி. இவர்கூறும் இனவாதக் கட்சிகள் இதற்கு முன்பு எங்கிருந்தன என்பது எமது அடுத்த கேள்வி. ஞானதேரன் போன்ற ஆன்மீகக்குண்டர்கள் இன்றும் எங்கிருக்கின்றார்கள்.? யாருக்கு ஆதரவளிக்கின்றார்கள்? இவர்களது எதிர்காலத்திட்டங்கள் என்ன? விராஜ் தேரனுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் யாவை? போன்ற விடையங்களை மறைத்து, எம்மை ஏமாற்றி, மீண்டும் பாராளுமன்றம் நுழைய மேற்கொள்ளும் இந்த உத்திகள் ரவூப் ஹக்கீமுக்கு பிரத்தியேகமானதுதான். தீவிரமாகச் செயல்படும் பேரினவாதிகளுக்கு மௌனராகம் பாடும் ரவூப் ஹகீம் முதல், ஆளும் கட்சியில் அமர்ந்திருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் முற்றாக நிராகரிக்கப்படல் வேண்டும் என்பதுதான் எமது மக்களுக்கு நாம் முன்வைக்கும் செய்தியாகும்.

சமுதாய ஒழுங்கு என்பது புனிதமான உரிமையாகும்.இதுவே மற்றெல்லா உரிமைகளுக்கும் அடிப்படையாகும்.இந்த ஒழுங்கு எமது ஜனாதிபதி ஆட்சியில் நிலவியதா? என்பதுதான் எமது முதற் கேள்வி, இதற்குச் சோரம்போய் அவர்களை அடிவருடிய எமது அரசியல்வாதிகள், நியாயமானவர்களா என்பதுதான் எமது அடுத்த கேள்வி? ”மத உரிமை என்பது மனித உரிமை சார்ந்ததே” என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் எமது அரசியல்வாதிகள். அவர்கள் நிராகரிக்கப்படவேண்டியவர்களே. இனங்களின் கலாசாரக் கூறுகளை மோதவிட்டு அதில் குளிர்காய்ந்த பேரினவாதிகள் இன்று மௌனராகம் இசைக்கின்றனர். .ஏன்? தேர்தல்காலமல்லவா இது? ஆனால் மூர்க்கத்தனமாகத தாக்கப்பட்ட அளுத்கம மக்களின் ஆத்திர உணர்ச்சி அவர்களது ஆத்மாவில் கல்வெட்டுப்போல் பதிந்து விட்டது. இந்த மானசீகத்துயரம் என்னை எழுதத் தூண்டுகிறது.

ஹலால் விவகாரம், மசூதி உடைப்பு, மசூதியினுள் பன்றி மாமிசத்தை எறிதல், கடை எரிப்பு, பர்தா உடை பற்றிய நச்சுக்கருத்துக்கள், ஆன்மீகக்குண்டர்கள் குர்ஆனை கையிலேந்தி வியாக்கியானம் செய்யும் விதம், இவற்றுக்கெல்லாம் மேலாக அளுத்கமை “கறுப்புஜூன்” சம்பவம் போன்ற சமூகத்துரோகங்கலெல்லாம் எங்கிருந்து வந்தன.? விராஜ் தேரனுடன், முஸ்லிம் விரோத உடன்படிக்கை ஓன்றும்கூட கைச்சாத்தானதே. இதற்குள் அடங்கியிருக்கும் தீமையின் ஆழம்பற்றிய உண்மை ஒரு பாமரனுக்குக்கூட தெரிந்திருக்கும் பொழுது ஏன் எமது அரசியல் வாதிகள் இதனைக் “ கண்டுகொள்வதில்லை என்பதே எமது ஆதங்கம். மனிதனுக்கு மனிதப்பண்பாட்டைக் கற்றுக்கொடுத்து அவனை மனிதனாக்க முயல்வதுதான் மதங்களின் பணியாக இருக்கவேண்டும்.பேரினவாத நச்சுவிதைகளை விதைத்து, அப்பாவிகளின் உயிர்களைக் காவுகொள்ளவைக்கும் கறுப்புநிகழ்வுகளை உருவாக்குவதாக இருக்கக்கூடாது.மதவெறியர்கள் அணிந்திருக்கும் “மதம்” என்ற முகமூடியானது தனதுகோதர மனிதர்களைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதவாறு தடுத்துவிடுகிறது முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளைப்பார்த்து இன்றும் தமிழர்கள் ஏங்குகிறார்கள்.சமுதாயப்பிளவுகளால் எமது அரசியலை நிர்ணயம் செய்யமுடியும் என்ற அற்பநிலை இன்று மாறிவிட்டது. உலகலாவிய பிரச்சினையும்கூட இதுதான். மத்தியகிழக்கிலும்லும் மதவெறித்தனம் தாண்டவமாடுகிறது. அங்கு மதத்தின் பெயரால் புரியப்படும் படுகொலைகள், மதவெறித்தனங்கள், எல்லைகடந்தவை. கடந்தவாரம் தாலிபான்கள் பாகிஸ்தானில் செய்த மாணவர்களின் படுகொலைச் சம்பவங்கள்,ஈராக்கில் isis அட்டூழியங்கள், நைஜீரியாவில் போகோஹராம் படுகொலைகள்,அண்மைய அவுஸ்திரேலிய isis சம்பவங்கள் அனைத்தும் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறி முடிவடைவனவையே.. இதற்குப்பின்னால் சியோனிசம் ஒlழிந்திருந்து தனது கைங்கரியங்களைச செய்வதை மேற்கு நாடுகள் கண்டுகொள்ளப்போவதில்லை.ஏனெனில் மேற்கின் பெட்ரோல் வளங்களின் நலன்கள் அதில் தங்கியுள்ளன.

அநியாயத்திற்கும்,துன்பத்திற்கும்,துவேசத்திற்கும் வழிவகுக்கும் ஞானதேரனின் “அபாயக்குரல்”இன்று சற்று ஓய்ந்துள்ளது.காரணம் தேர்தல்காலமானதால் அடக்கிவாசிக்கும்படி அரசியல் உயர்பீடம் உத்தரவிட்டுள்ளதாம். இதுதான் உண்மை. அத்துடன் அரசியல் துர்நாற்றம் (சில கோடரிக் காம்புகள்) எம்மைவிட்டு சற்று விலகி நிற்பதுபோல் தெரிகிறது.மனச்சாட்சியுடன் போராடி அதில் தோற்றுப்போய் இரு தலைக்கொள்ளி எறும்புபோல் ஒரு தீர்வுக்கு வரமுடியாது திண்டாடுகின்றனராம். பணம், பதவி ஒருபக்கம். மக்களோ இவர்களுக்கு மறுபக்கம். இதுதான் யதார்த்தம்.இதுவே எமக்குப்போதுமானது.இதனையும் எமது அரசியல் வெற்றியாகவே கொள்ளவேண்டும்.இவர்கள் எமக்கு உதவத் தேவையுமில்லை.ஆனால் உபத்திரங்கள் பண்ணாமலாவது இருக்கட்டும் என்றே சொல்லி வருகின்றோம். உலகமே வியக்கும் அளவுக்கு இனவாதம் பேசப்பட்ட ஒரு சூழலை இனங்காணமுடியாத இவர்களின் அரசியல் எமக்குத்தேவையில்லை.

எனவே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் சிறுபான்மைச் சமூகத்தினர் அம்மையாரின் தலைமையில் ஒன்றிணைந்திருக்கும் “மைத்திரிப்பால சிறிசேன” அவர்களை தேர்வுசெய்யும் தார்மீகப்பொறுப்பில் இருக்கின்றார்கள் என்பதே எமது கருத்து.

“மண்ணூர் மைந்தன்”

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com