Friday, January 30, 2015

அரசியல் மாற்றத்தின் பிரதிபலிப்பே புதிய வரவு செலவுத் திட்டம். ஜேவிபி

தற்போதைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் பிரதிபலிப்பு என, எனக் குறிப்பிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் இவ்வாறான ஒரு இடைக்கால வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்க மாட்டாது எனவும் கூறியுள்ளது.

இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

வரிச்சுமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்த மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்தனர்.

இந்த போராட்டத்தின் பிரதிபலிப்பாகவே தற்போது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

சிரமங்களை எதிர்நோக்கி வந்த மக்களுக்கு சிறிய நிவாரணம் கிடைத்துள்ளது. இவற்றை விட மக்கள் அதிக நிவாரணத்தை எதிர்பார்க்கின்றனர். எனினும் கிடைத்துள்ள நிவாரணத்தை பார்த்து எம் போல் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

மேலும், இம்முறை இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு, கெசினோ போன்றவற்றுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

மேலும் தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு நிதி அமைச்சர் வரவு செலவுத்திட்டத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறித்தும் விஜித ஹேரத் இங்கு கருத்து வௌியிட்டார்.

அவர் கூறியதாவது,

தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு நிதி அமைச்சர் கூறியுள்ளார். வரவு செலவுத்திட்டத்தில் இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை. எனினும் இது குறித்து சட்டத்தை பயன்படுத்த முடியும்.

2005ம் ஆண்டு எமது தலையீட்டில் தனியார் ஊழியர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டது.

2005/36 மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் இந்த சம்பள உயர்வு கிட்டியது. இதன்படி 2500 ரூபா சம்பள அதிகரிப்பை சட்ட ரீதியாக மேற்கொள்ள இரு வழிகள் உள்ளன.

அதுதான் 2005/36 சட்ட திருத்தத்தைக் கொண்டு வருவது அல்லது இது குறித்து புதிய சட்டத்தை அமைச்சரவையில் நிறைவேற்றுவது, எனக் குறிப்பிட்டார்.

இதேநேரம் புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் பொருளாதார கொள்கைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கிய போது கடந்த அரசாங்கமும் விலைக் குறைப்புக்கைள செய்ததாகவும், மக்கள் அதனை புரிந்து கொண்டு அரசாங்கத்தை தோற்கடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்கும் என்ற போதிலும், தெளிவான பொருளாதாரக் கொள்கைகள் தந்திரோபாயங்கள் வரவு செலவுத் திட்டத்தில் தென்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நீண்ட கால குறுகிய கால பொருளாதாரக் கொள்கைகள் தந்திரோபயங்களை இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் காண முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com