துபாயில் “ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்” எனப்படும் “ஸ்மார்ட் விளக்கு கம்பங்கள்” சோதனை முயற்சியாக விரைவில் நடப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த கம்பங்கள் சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய தெரு விளக்குகளுடன் அமைய உள்ளது. இந்த விளக்கு கம்பங்களில், கேமராவுடன் கூடிய ஒரு அவசர அழைப்பு பட்டன் இருக்கும் எனவும் இதன் மூலம் ஆபத்து காலங்களில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க முடியும் எனவும் இண்டெர்செகின் மூத்த அதிகாரி தெரிவித்தார். துபாயில் உலக இண்டெர்செக் 2015 கண்காட்சி ஜனவரி 18 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இண்டெர்செக் கண்காட்சி உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு தொடர்பான கண்காட்சியாகும். 54 நாடுகளில் இருந்து 1,237 நிறுவனங்களின் 2000 தயாரிப்புகள் காட்சிபடுத்தப்பட்டது . இண்டெர்செக் கண்காட்சியில் அனைவரின் பார்வைக்கு “ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்கள் வைக்கப்பட்டிருந்தது.
கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்கும் இந்த ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லரில் சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய விளக்கு, கண்காணிப்பு கேமரா, அவசர கால பட்டன், ஒரு எலக்ட்ரானிக் திரை ஆகியன இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி அவசரகாலங்களில் ஏற்படும் ஆபத்துக்கள், சாலை விபத்துக்கள், தீ விபத்துக்கள்,போன்ற அவசர கால உதவிகளை பெறலாம் என தெரிவித்தனர். ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்கள் துபாய் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் துபாய் சிலிகான் ஒயாசிஸ் ஆணையம் (DSOA) அதன் கட்டுப்பாட்டு பகுதிகளில் சோதனை முறையில் நிறுவ உள்ளதாகவும், பிறகு நகர் முழுவதும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும் எனவும் இந்த ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இந்த முயற்சி DSOA ஃப்ரீ ஜோன் (Free Zone) பகுதியில் அமைய உள்ள ஸ்மார்ட் நகரின் துவக்கமாக அறிமுகபடுத்தப்படவுள்ளது, முதற்கட்டமாக 100 ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இதன் மூலமாக 24/7 நேரடி வீடியோ மூலம் கட்டுப்பாட்டு அறைகளில் நிகழ்வுகள் கண்காணிக்கப்படும், அவசர காலத்தில் பட்டனை அழுத்திய உடன் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள அதிகாரிகளுடன் இணைக்கப்படும்.
இதன் மூலம் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அந்த இடத்தில் என்ன நிகழ்கிறது, பேசுவது யார், என்ன பிரச்சனை என்று துல்லியமாக அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள், உதவிகள் எடுக்கப்படும் எனவும் கூறினர். இந்த ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்களில் உள்ள எலக்டிரானிக் திரை அவசர கால செய்தியை காட்டும், இதன் மூலமாக அனைத்து ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்களும் இந்த அவசர செய்தியை தெரியும்படி செய்து அனைவரையும் எச்சரிக்கவும், அவசர கால தகவல்களை மக்களுக்கு கொண்டு செல்லவும் இந்த வசதி பயன்படும்.
No comments:
Post a Comment