தெரியாத தேவதையை விட, தெரிந்த பிசாசை ஆதரியுங்கள்': மகிந்த
யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளியன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, 'தமிழ் மக்கள் தெரியாத தேவதையைவிட நன்கு தெரிந்த பிசாசை இந்தத் தேர்தலில் ஆதரிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர்மகிந்த ராஜபக்ஷ, இரண்டு தரப்பினரும் பேச்சுக்கள் நடத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
இன ரீதியான, மத ரீதியான, மாகாண ரீதியான அரசியல் நாட்டுக்கு அவசியமில்லை என்று வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். வவுனியா வைரவப் புளியங்குளம் யங் ஸ்டார் விளையாட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் பிரதேசசபை உறுப்பினர்கள் 9 பேர் அரசாங்கத்துடன் பொது மேடையில் வைத்து இணைந்து கொண்டனர்.
முப்பது ஆண்டுகளாக தொடர்ந்த யுத்தச் சூழ்நிலைகள் இப்போது இல்லாதபடியால், நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக வாழவேண்டும் என்றும் குறுகிய அரசியல் நோக்கம் அவசியமில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
'முழு நாடும் ஒன்றுதான், எல்லோருக்கும் எல்லா வசதிகளும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்' என்று வலியுறுத்திய அவர் 'இனவாதம், பிரிவினை வாதம், பயங்கரவாதம் இருத்தலாகாது' என்றும் குறிப்பிட்டார். மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment