இலங்கையில் புதிய துறைமுகம் அமைப்பதற்கு சீனாவுக்கு ராஜபக்சே அரசு அனுமதி வழங்கியதை மறுஆய்வு செய்ய, புதிய அரசு தீர்மானித்து உள்ளது. இலங்கையில் முன்பு ராஜபக்சே அதிபராக இருந்த போது, சீனாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அண்டை நாடான இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவரது சில நடவடிக்கைகள் அமைந்து இருந்தன. தலைநகர் கொழும்புவில் மிகப்பெரிய துறைமுகம் ஒன்றை அமைக்க சீன தொலைத்தொடர்பு கட்டுமான நிறுவனத்துக்கு 108 ஹெக்டேர்நிலத்தை ராஜபக்சே அரசு ஒதுக்கியது.
ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அமைய இருக்கும் இந்த துறைமுக திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். பாதுகாப்பு கருதி, இந்த துறைமுக திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தியாவுக்கு வரும் பல சரக்கு கப்பல்கள் கொழும்பு துறைமுகம் வழியாக வருவதால், பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, இந்த துறைமுக திட்டத்துக்கான நில ஒதுக்கீடு குறித்து இந்திய தூதரக அதிகாரி தனது கவலையை தெரிவித்தார். ஆனால் ராஜபக்சே அரசு அதை பொருட்படுத்தவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட சிறிசேனா அமோக வெற்றி பெற்று புதிய அதிபராக பதவி ஏற்றார்.
அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கே, எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், சீனாவின் ஆதரவுடன் அமைய இருக்கும் துறைமுக திட்டம் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.
ஆட்சி மாறியதை தொடர்ந்து, இலங்கையில் காட்சிகளும் மாறத் தொடங்கி உள்ளன. சீனாவின் துறைமுக திட்டத்தை மறு ஆய்வு செய்ய புதிய அரசு தீர்மானித்து உள்ளது.
இதுபற்றி இலங்கை முதலீடு அபிவிருத்தி இலாகா மந்திரி கபீர் ஹஷிம் கொழும்பு நகரில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், பாதுகாப்பு மிகுந்த பகுதியில் வேறொரு நாட்டுக்கு நிலத்தை இலவசமாக வழங்க முடியாது என்றும், அப்படி வழங்குவது பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால் அந்த திட்டம் (சீன அரசு அமைக்கும் துறைமுகம்) பற்றி முழுமையாக மறுஆய்வு செய்யப்படும் என்றும் கூறினார்
No comments:
Post a Comment