கே.பி க்கு பிடிவிறாந்து கேட்டு நீதிமன்று செல்கின்றது ஜேபிவி.
புலிகள் அமைப்பிற்கான ஆயுதக்கடத்தல்காரனான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் மலேசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டு இலங்கைப் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மலேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட கேபி நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வாசஸ்தலம் கொண்டு செல்லப்பட்டு சில நாட்களின் பின்னர் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டதும் யாவரும் அறிந்த விடயம்.
கேபியின் சுதந்திரமான நடமாட்டம் மற்றும் அவர் நீதிமன்று முன்னால் நிறுத்தப்படாமை தொடர்பாக நாட்டுப்பற்றாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டுவந்தபோதும், ராஜபச்ச அரசாங்கம் சர்வாதிகாரமாகவே செயற்பட்டு வந்தது.
நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெற்று நீதித்துறை சுயமாக இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், கேபியை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துமாறு ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் திங்கட்கிழமை 19-01-2015 கொழும்பு உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் இம்மனுவினை ஜேவிபி யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான விஜித ஹேரத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இலங்கைநெட் இற்கு கூறுகையில் : இலங்கையில் இடம்பெற்ற 30 வருடகால வன்செயலுக்கு முழு ஆயுதங்களையும் வழங்கி அழிவுக்கு காரணகர்த்தாவாகவிருந்த குமரன் பத்மநாதனை நீதியின் முன்நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்நாட்டில் ஏற்பட்ட பேரழிவுக்கு முக்கிய காரணகர்த்தாவான கேபி தண்டனையிலிருந்து விடுபடமுடியாது என்ற வகையில் அவரை கைதுசெய்ய உத்தரவிடுமாறு மன்றை கோரவுள்ளோம் எனத் தெரிவித்தார்.
கேபி கைது செய்யப்பட்டபோது அவரிடம் கப்பல்கள் உட்பட புலிகளுக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் பரவியிருந்தது. ஆனால் அவை அரசுடமையாக்கப்படவில்லை. இது தொடர்பில் பூரண விசாரணைக்கு உத்தரவிடுமாறும் மன்றினை கோரவுள்ளோம் என்றும் கூறினார்.
மேலும் கேபி கிளிநொச்சியில் செஞ்சோலை சிறுவர் இல்லம் என்ற பெயரில் யுத்ததால் அநாதைகளாக்கப்பட்ட சிறார்களை பராமரிக்கும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை கேபி நடாத்தி வருகின்றார். குறித்த சிறார்கள் கேபி யிடம் கையளிக்கப்பட்டமையானது மஹிந்த அரசின் முறைகேடான செயல்பாடாகும். இச்சிறார்கள் முன்னர் புலிகளால் போருக்கும் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் இவர்களை வைத்து கேபி இன்று புலம்பெயர் நாடுகளில் பண வசூலிப்பில் ஈடுபடுகின்றார் என்று கூறிய விஜித ஹேரத் கேபி குறித்த சிறார்கள் தொடர்ந்தும் அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு சிறார்களை அரசு தனது நேரடிக்கட்டுப்பாட்டின் கீழுள்ள சிறுவர் பாதுகாப்பு சபையிடம் கையளிக்க மன்று உத்தரவிடவேண்டும் என்றும் கோரவுள்ளோம் எனவும் கூறினார்.
0 comments :
Post a Comment