ராகுல், சோனியாவை 'அம்பலப்படுத்திய' ஜெயந்தி நடராஜனின் கடிதம்
தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட தனக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நெருக்கடி கொடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். அமைச்சர் பதவியை தான் ராஜினாமா செய்த பிறகு கட்சியில் தான் புறக்கணிக்கப்படும் விதம், அதனால் தான் அடைந்துள்ள மன உளைச்சல், தான் குற்றமற்றவர் என்பவர் நிரூபிக்க முடியாமல் அடைந்துள்ள தவிப்பு ஆகியனவற்றை பதிவு செய்யும் வகையில் சோனியா காந்திக்கு ஜெயந்தி நடராஜன் மிகவும் காட்டமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
அக்கடிதத்தின் முக்கிய அம்சம்:
"காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து தொடர்ச்சியாக எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ் வழங்கும்படி நெருக்கடி அளிக்கப்பட்டது.
ராகுல் காந்தியாலும், கேபினட் அமைச்சர்கள் சிலராலும் தொடர்ந்து நெருக்கடி அளிக்கப்பட்டபோதும், மிகப்பெரிய திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக சலுகை அளிக்க மறுத்தேன். அவ்வகையில், ராகுல் காந்தியின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்தேன்.
எப்போது, ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பதில் இருந்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றிக் கொண்டாரோ அதன் பிறகே, பொய்யான, உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஊடக பிரச்சாரங்களுக்கு நான் பலியாக நேர்ந்தது" என தெரிவித்துள்ளார்.
வேதாந்தாவும் - பழங்குடியினரும்
ஒடிசாவில் நியாம்கிரி மலையில் பாக்சைட் தாது வெட்டி எடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லா சான்றிதழ் கோரி வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், தனது சகாக்களிடமிருந்து நெருக்கடி, மேலிட அழுத்தம், கார்ப்பரேட் விமர்சனம் என பன்முனை தாக்குதலுக்கு ஆளானாலும், வேதாந்தா கோரிக்கையை நிராகரித்து பழங்குடிவாழ் மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருந்ததாக ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.
இதேபோல் அதானி நிறுவனத்திற்கான ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க, குஜராத் காங்கிரஸ்காரர் தீபக் பபாரியா என்பவருடன் பேசி உள்ளூர் என்.ஜி.ஓ.க்கள், மீனவ சமுதாயத்தினர் எப்படி சரிகட்டுவது என்பதை பார்க்குமாறு ராகுல் நெருக்கடி கொடுத்தார் எனவும் ஜெயந்தி கூறியுள்ளார்.
மேலும், "ஜி.வி.கே. பவர் பிராஜக்ட், லவாஸா திட்டம், நிர்மா சிமெண்ட் திட்டம் போன்ற சில தொழிற் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நானே சுயமாக முடிவெடுக்க அதிகாரம் அளித்து எனக்கு நீங்களே (சோனியா காந்தி) கடிதம் எழுதியிருந்தீர்கள். அதை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்" என மேற்கோள் காட்டியுள்ளார்.
மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு சரியாக 100 நாட்களுக்கு முன்னதாக டிசம்பர் 2013-ல் ஜெயந்தி நடராஜன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அப்போது அவர் நானே தான் ராஜினாமா செய்கிறேன், எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை என கூறியிருந்தார்.
ஆனால், சோனியாவுக்கு இப்போது அவர் எழுதியுள்ள கடிதத்தில், "நான் ஏன் அமைச்சர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டேன் என்பதற்கான காரணம் இன்று வரை எனக்குத் தெரியாது" என குறிப்பிட்டுள்ளார்.
30 ஆண்டு காலமாக எனது களங்கமற்ற அரசியல் வாழ்க்கைக்கும், என் குடும்ப பெருமைக்கும் ஊறு விளைவிப்பதுபோல் ஊடகங்களில் என் மீது விமர்சனங்கள் எழ மேலிட நெருக்கடிக்கு நான் வளைந்து கொடுக்காததே காரணம் என அக்கடிதத்தில் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.
ஜெயந்தியின் கடிதத்திற்கு, சோனியா காந்தியிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. தவிர, சோனியா காந்தியை நேரில் சந்தித்து தன் மீதான வீண் பழிகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என ஜெயந்தி பல முறை முயன்றும் அதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லை.
ஜெயந்தி நடராஜன் பதவி விலகுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அதானி நிறுவனம் தொடர்பான முக்கியமான கோப்பு ஒன்று அவரது அலுவலகத்திலிருந்து காணாமல் போனது. பெருமுயற்சிக்குப் பின்னர் அதை ஜெயந்தி மீட்டார்.
இந்த சம்பவமும், மேற்கு தொடர்ச்சி மலைகள் தொடர்பாக கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்ததும் தனக்கு எதிரிகளை உருவாக்கியதாகவும் ஜெயந்தி நடராஜன் குறிப்பிட்டுள்ளார்.
மோடியை விமர்சிக்க நிர்ப்பந்தம்:
"துறை சார்ந்த அழுத்தங்கள் தவிர, இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நரேந்திர மோடியை விமர்சிக்குமாறும் எனக்கு அழுத்தம் தரப்பட்டது. நான் எப்போதுமே விமர்சனம் என்பது கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர தனிநபர் சார்ந்ததாக இருக்க வேண்டாம் என நினைப்பேன். ஆனால், என் கொள்கைக்கு எதிராக மோடியை விமர்சிக்க நிர்பந்திக்கப்பட்டேன்" என்றும் ஜெயந்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment