Thursday, January 1, 2015

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரைக் கொன்றது யார்? – தெளிவுறுத்துகிறார் முஸம்மில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணம் தொடர்பில் முஸ்லிம்களிடையே சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் கொழும்பு நகர சபை உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப், அன்று எந்த வகையிலும் வடக்கு – கிழக்கை ஒன்றிணைக்க இணக்கம் தெரிவிக்கவில்லை. அவர் புலிப் பயங்கரவாதிகளுடனோ, அவர்களின் அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புடனோ ஒன்றிணைவதற்கு ஒருபோதும் இணங்கவில்லை. அவ்வாறு புலிகளுக்கு முழுமையாக எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலேயே அஷ்ரபின் மரணம் நிகழ்ந்தது. கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் அஷ்ரப் கொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகமே பெரும்பாலும் உள்ளது.

அதன்பின்னர்தான், மேற்கத்தேய தலையாட்டு பொம்மையாக ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரானார். வரலாற்றில் அவரது நிலைதான் என்ன? 2001 இல் யானை – புலி முன்னணி அரசாங்கத்தை உருவாக்கும் ஒப்பந்தத்திற்கு ஆதரவு வழங்கினார். ரணில் – பிரபாரகன் ஒப்பந்தத்திற்கு ஆதரவு நல்கினார். அதன் பின்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கும் முனைந்தார். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினார். பின்னர் அமைச்சர் பதவி மற்றும் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொண்டார். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வம் கொலை செய்யப்பட்டதன் பின்னர் தனது உள்ளார்ந்த கவலையை பாராளுமன்றில் தெரிவித்தவரும் ரவூப் ஹக்கீமே. ஆயினும் புலிப் பயங்கரவாதிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியடித்த வேளை, அதேபோன்று காத்தான்குடி உள்ளிட்ட வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கில் கூட்டாகக் கொலை செய்யப்பட்டபோது ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைச்சர் பதவியைப் பெற்று வரப்பிரசாதங்களையும் அனுபவித்து வந்த அவர், 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேக்காவின் வெற்றிக்காக எதிர்க்கட்சி மேடைகளில் ஏறினார். வட மாகாண சபைத் தேர்தலின் போதும் அவரது ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே இருந்தது. வட மாகாணத்தில் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மிகவும் நெருக்கமாகச் செயல்படுகின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குறிப்பிடும்போது, “கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம்” எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து வடக்கு – கிழக்கை ஒன்றிணைப்பதற்காக செயற்படுவது புரிவதில்லையா? பொதுமக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தங்களது கொள்கைகளை மூடி மறைத்துக் கொள்வதற்கு இந்த அசுத்தமான கூட்டத்தினர் முயற்சி செய்தாலும் இன்று வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பது பற்றி மக்களுக்குத் தெளிவேற்பட்டுள்ளமையும் தெரிந்ததே.

(கேஎப்)

No comments:

Post a Comment