இலங்கையில் ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி காலை ஏழு மணிக்குத் தொடங்கியது. நீண்ட வரிசைகளில் காத்திருந்தபடி மக்கள் வாக்களித்தனர். உள்ளூர் நேரப்படி நண்பகல் வரை சுமார் 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் கூறுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்தத் தேர்தலில் சுமார் ஒரு கோடியே58 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தற்போது கடும் போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலுக்கென பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக செய்யப்பட்டுள்ளன. 71,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை ஆறு மணியளவிலேயே பரபரப்பாகக் காணப்படும் கொழும்பு நகரில் வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையையொட்டி, இலங்கையில் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை இன்று மாலை 7 மணியளவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமாகாணத்தில் அமைதியான வாக்குப்பதிவு:
அதிகாரிகள் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் வியாழக்கிழமை காலை முதல் வடபகுதியில் அமைதியான வாக்களிப்பு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிராமப்புறங்களில் மக்கள் அலை அலையாகச் சென்று வாக்களித்துள்ளனர். மதியம் வரையில் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் 35 வீத வாக்களிப்பு இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 59 சதவீதமும், மன்னாரில் 50 சதவீதமும், கிளிநொச்சியில் 40 சதவீதமும் வாக்களிப்பு இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் உள்ள அல்வாய் என்ற இடத்திலும், அரியாலை என்ற இடத்திலும் இரண்டு எறிகுண்டு வீச்சு சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், இது வாக்களிப்பை பாதிக்கவில்லை என்றும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு சம்பவங்களைத் தவிர வட பகுதி எங்கும் வடபகுதி எங்கும் வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றதாக அதிகாரிகள் கூறினர்.
தேர்தலில் காவல் துறையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். சுற்றுக் காவல் நடவடிக்கைகளிலும் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். இராணுவத்தினர் எங்கும் காணப்படவில்லை. வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியின் பின் பக்கத்தில், பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் 2.25 மணியளவில் கைக்குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாடசாலை சுற்று மதிலுக்கு மேலாக இந்தக் குண்டை வீசிவிட்டுத் தப்பிச் சென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர், வவுனியா பிரதேச செயலாளர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் அத்துடன் வாக்குச் சாவடியில் காவல் கடமையில் இருந்த காவல் துறையினர் குண்டு விழுந்து வெடித்த இடத்தைப் பார்வையிட்டனர்.
பெரும் சத்தத்துடன் குண்டு வெடித்த போதிலும் கலைமகள் மகாவித்தியாலயம் வாக்குச் சாவடியில் வாக்களிப்பு பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்ததாகவும் வாக்களிப்பைக் குழப்புவதற்காகவே இந்தக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கிழக்கு மாகாணத்திலும் அமைதியான வாக்குப்பதிவு
கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த கால தேர்தல்களை விட இந்த தேர்தலில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொள்வதை காண முடிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகின்றார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபட்டனர்.
ஒரு சில இடங்களில் சிறு சிறு தேர்தல் விதி முறை மீறல்கள் இடம் பெற்றிருப்பது தொடர்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் கூறுகின்றார்கள்.
மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இந்த தேர்தலில் 10 இலட்சத்து 87 ஆயிரத்து 666 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். 1163 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment