Monday, December 22, 2014

தோல்வியடையும் நிலை ஏற்பட்டால், அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிப்பாராம் மகிந்தர்.

பிரிட்டனிலிருந்து வெளியாகும் ஃபைனான்ஸியல் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்கு அளித்த பதிலிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். எனினும், 'நான் தோல்வியடைப் போவதில்லை' என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ஷ, 'முதிர்ச்சியடைந்த, துடிப்புள்ள ஜனநாயகமான இலங்கையில் அமைதியான முறையிலேயே ஆட்சி கைமாற்றங்கள் நடந்துள்ளன' என்றும் கூறியுள்ளார். ஆனால், 'மீண்டும் நான்கூறுகின்றேன். நாங்கள் வெற்றியடைவோம் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன்' என்றும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலை மேற்குலகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கூறியுள்ள ஃபைனான்ஸியல் டைம்ஸ் செய்தியாளர், புதிய அரசாங்கம் உள்நாட்டு யுத்தத்தின்போது நடந்துள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் என்ற நம்பிக்கை மேற்குலகிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல, இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ள 8 வீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பினால் சர்வதேச முதலீட்டாளர்கள் ஆர்வமடைந்துள்ளதாகவும் ஃபைனான்ஸியல் டைம்ஸ் கூறியுள்ளது.

எதிர்வரும் 8-ம் திகதி நடக்கவுள்ள தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் மிகவும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மிகவும் சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி ஏற்பட்டால், ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் நிலவும் ஆட்சியை தொடர்ந்தும் தக்க வைத்திருக்க வன்முறைகளும் ஸ்திரமற்ற நிலைமைகளும் உருவாகலாம் என்று உள்நாட்டு அவதானிகள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com