Monday, December 29, 2014

மட்டக்களப்பு மைத்திரி பிரசாரக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் மீது தாக்குதல்

இலங்கையில் மட்டக்களப்பு கல்லடி, உப்போடையில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதோடு ஒருவர் காணாமல்போயுள்ளதாக எதிரணியினர் கூறுகின்றனர். பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல்பிரசாரத்திற்காக கல்லடி சிவானந்தா தேசியப் பாடசாலை மைதானத்தில் இன்று ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

தேர்தல் பிரசார மேடை அமைப்புக்காக சென்றிருந்த எதிரணி ஆதரவாளர்கள் மைதானத்திற்கு முன்பாக நின்று கூட்டம் தொடர்பான பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டிருந்த வேளை வாகனங்களில் வந்த குழுவொன்றினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
தாக்குதல் சம்பவத்தின் பின்னர், காயமடைந்த இருவரை தவிர்ந்த மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்களில் ஒருவரான த.மாசிலாமணி கூறுகின்றார்.

இரண்டு வாகனங்களில் கத்திகள், தடிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சுமார் 30 பேர் கொண்ட குழுவொன்றே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் கூறுகின்றார்.

தாக்குதலை நடத்திய நபர்களின் நடமாட்டம் தொடர்ந்தும் அந்த பகுதியில் காணப்பட்டதாகவும், நாளை நடக்கவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்பவர்களை அச்சுறுத்தும் விதத்தில் அவர்கள் நடமாடிதிரிந்ததாகவும் மாசிலாமணி கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் வாகனங்களின் இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களுடன் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்றும் என்றும் அவர் கூறுகின்றார். இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை பேச்சாளரின் கருத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை.

No comments:

Post a Comment