அங்கவீனரான முன்னாள் படை வீரனை தாக்கி அவரது பொய்காலை கழற்றிச் சென்ற மஹிந்தவின் அடியாட்கள்.
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்தோர் நேற்று மகியங்கணை பிரதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தாக்குதலில் அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜெனரல் பொன்சேகா குற்றஞ்சுமத்தியுள்ளார்.
அவர் இத்தாக்குதல் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், ராஜபச்சவினர் மேற்கொள்ளும் மேற்படி கோழைத்தனமான தாக்குதல்களை தான் மிகவும் கண்டிப்பதாகவும், எதிர்வரும் எட்டாம் திகதியின் பின்னர் மேற்படி வன்செயல் மனோநிலையில் உள்ளவர்களை புனருத்தாருண நிலையங்களுக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள நபர் நாட்டை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தனது ஒரு காலை இழந்தவர் என்றும் அவரை தாக்கிவிட்டு அவரது போலிக்காலையும் கழற்றிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி மஹிந்த அரசாங்கம் இவ்வாறே இராணுவ வீரர்களுக்கு மதிப்பளிக்கின்றது என்றும் இதைகாணும் இராணுவ வீரர்கள் தங்களுக்கும் இதே கதிதான் என்பதை மனதில் இருத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் இத்தாக்குதல்கள் நாட்டின் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேயே இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இந்த நாட்டிலே மிகவும் சமாதானமான முறையிலே அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றோம். ஆனால் எம்மீது வன்செயல்கள் கட்டவிட்டுவிடப்படுகின்றது. எம்மீது கோழைத்தனமான தாக்குதல்களை தொடுக்கின்றனர். ஆனால் அவர்கள் இவற்றை மாபெரும் வீரச்செயலாக கருதுகின்றனர்.
மேலும் தாக்குதலை நாடாத்தியோர் யார் என்பது பொலிஸாருக்கு நன்கு தெரியும். அவர்கள் வந்த வாகனங்களை அடையாளம் கண்டுள்ளனர். காடையர்களது தொலைபேசிகளை அவர்கள் விட்டு விட்டு ஓடியுள்ளனர். அவற்றை கைப்பற்றிய பொலிஸார் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் நடவடிக்கை எடுக்கும் காலம் விரைவில் வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment