ரிஷாத் பதியுதீன் முடிவு கட்சியின் முடிவல்ல" : ஹிஸ்புல்லா
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் அக்கட்சிக்குள் முரண்பாடு தோன்றியுள்ளது. ஏற்கனவே அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் எடுத்த முடிவு கட்சியின் ஒட்டுமொத்த முடிவு அல்ல என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் துணை அமைச்சருமான எம. எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடன் இடம் பெற்றிருந்த சந்திப்புகளில் கட்சியினால்முன் வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகள் தொடர்பாக சாதகமான பதில்கள் கிடைத்துள்ள நிலையில், தான் உட்பட ஒரு பகுதியினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன் வைத்திருந்த முதலாவது கோரிக்கையின் பேரிலே கிழக்கு மாகாண சபை உறுப்பினரான எஸ். எச். அமீர் அலி தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சில நாட்களுக்கு முன்னர் நியமனம் பெற்றிருந்தார் என்றும் சுட்டிக்காட்டிய அவர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பது என்ற அவரது நிலைப்பாடு நியாயமானது அல்ல என்றார்.
இத்தகைய தீர்மானத்தை எடுப்பது என்றால் அதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிய அவர் துறந்திருக்க வேண்டும் என்றும் ஹிஸ்புல்லாஹ் கூறுகின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த சந்தர்ப்பத்தில் சமூகம் தொடர்பான பல்வேறு பட்ட கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் அவர் கூறுகிறார். அதில் மிகவும் முக்கியமான கோரிக்கைதான் அமீர் அலிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுக்கப்படப் வேண்டுமென்பதும் அதனடிப்படையில் அது ஜனாதிபதியால் வழங்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவ்வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருக்கும் போதுதான் திடீரென பொது வேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரிப்பதற்கான தீர்மானத்தை ரிஷாத் பதியுதீன் அறிவித்தார் என ஹிஸ்புல்லா கூறுகிறார். கட்சியின் சார்பில் மைத்திரிபால சிறிசேனவுடனோ அல்லது அவருடன் செயற்படும் எந்த தலைவர்களுடனோ எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம் பெற்றதாக நாங்கள் அறியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.
தனது நிலைப்பாட்டுக்கு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களில் ஒரு தரப்பு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டர்.
0 comments :
Post a Comment