Wednesday, December 24, 2014

புதிய போர்க்குற்ற விசாரணை: தமிழர்களின் ஓட்டுக்களை கவர வாக்குறுதிகளை வாரி வழங்கும் ராஜபக்ச

இலங்கையில் புதிய போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று ஆளும் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி பதவிக்கு வரும் ஜனவரி மாதம் 8-ம்தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து பொதுவேட்பாளராக போட்டியிடப்போவதாக ராஜபக்ச அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த மைத்ரிபாலா சிறீசேனா (63) அறிவித்தார். இது ஆளும் கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்த மேலும் 4 மந்திரிகளை தனது மந்திரிசபையில் இருந்து மகிந்த ராஜபக்ச நீக்கினார்.

பின்னர், நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை மந்திரியாக இருந்துவந்த ரிஷத் பதியுதீன், அவர் சார்ந்த அனைத்து இலங்கை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான அமிர் அலி ஆகியோரும் மைத்ரிபாலா சிறீசேனாவை ஆதரித்து பிரசாரம் செய்ய களமிறங்குகின்றனர். சிறுபான்மை மக்களின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறது.

மைத்ரிபாலா சிறீசேனாவுக்கு ஆதரவு அதிகரித்தவண்ணம் உள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ள ராஜபக்ச தமிழர்களின் வாக்குகளைப் பெற புதிய வாக்குறுதிகளை வழங்க ஆரம்பித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கொன்று குவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஒரு புதிய வெளிப்படையான நீதி விசாரணை நடத்தப்படும் என்று ராஜபக்ச தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

போரின்போது எந்த உரிமைகளாவது மீறப்பட்டிருந்தால் அதுகுறித்த வெளிப்படையான உள்நாட்டு நீதித்துறை அமைப்பு மூலம் விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ள ராஜபக்ச, இதற்கு முன்பு தான் உத்தரவிட்ட விசாரணையில் இருந்து இது எந்த மாதிரி வேறுபட்டது என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com