மைத்ரிபால சிறிசேனாவின் மட்டக்களப்பு அலுவலகம் தீக்கிரை
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார அலுவலகமொன்று வியாழக்கிழமை அதிகாலை தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் சந்திவெளியிலுள்ள அலுவலகம் மீதான இந்த தாக்குதலை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களேநடத்தியதாக பொது எதிரணி குற்றம் சாட்டுகின்றது. அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர்கள் அலுவலக உடமைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதோடு தீ வைத்தும் எரித்துள்ளனர்.
மூன்று வாகனங்கில் வந்த குழுவொன்றே இந்த தாக்குதலை நடத்தி விட்டு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அலுவலகத்தில் அவ்வேளை தங்கியிருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் வாகனங்களில் வந்தவர்களாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தங்களிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக குறித்த கட்சியுடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தரப்பு கருத்தைப்பெற முயன்றபோதிலும் உடனடியாக தொடர்புகள் கிடைக்கவில்லை. தாக்குதல்களுடன் தொடர்புடைய நபர்களில் இருவர் துப்பாக்கிகளை வைத்திருந்தார்கள் என்றும் அவர்களால் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுள்ள முதலாவது தேர்தல் வன்முறை இது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி பிபிசி
0 comments :
Post a Comment