Monday, December 29, 2014

எதிர்க்கட்சி தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் மீது தாக்குதல்

இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் மூன்று தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் திங்களன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனைய, தெனியாய மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார் காரியாலயங்கள் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்தார். அதிகாலை வாகனங்களில் வந்த சிலர் மஹியங்கனையவில் அமைந்துள்ள எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார அலுவலகம் மீது மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அங்கிருந்த மூன்று நபர்கள்காயமடைந்ததாக கூறிய போலிஸ் ஊடக பேச்சாளர் அவர்கள் தற்பொது மஹியங்கனைய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவித்தார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர்களை போலிசார் அடியாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறிய போலிஸ் ஊடக பேச்சாளர், அவர்களை கைதுசெய்வதற்கு விசேட போலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அறிவித்தார்.
இதேவேளை மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரின் வெலிகம மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் அலுவலகங்களும் திங்கள் அதிகாலை தாக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர்களை அடியாளம் காண்பதற்கான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாக கூறிய அவர், சந்தேகநபர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்களென்றும் தெரிவித்தார்.

தேர்தல் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 80 பேர் போலிசாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன கூறினார் .

ஆளும் கட்சியைச் சேர்ந்த ஏழு பிரதேச சபை தலைவர்கலும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறிய போலிஸ் ஊடக பேச்சாளர், தேர்தல் வன்முறைகள் சம்பந்தமாக போலிசார் காலதாமதமின்றியும் பக்கச்சார்பற்ற முறையிலும் கடமைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment